ஒரு அழகான பெண்ணின் விழிகளும் பார்வைகளும் ஈடிணையற்ற அழகு கொண்டவை எனக் கருதும் ஆண்கள் இருக்கிறார்கள். தன் காதலியின் விழிகளை உயிர்த் துடிப்பு மிக்க சக்தியாக, கடலைவிடவும் ஆழமானதாகக் கருதும் இந்தித் திரைப் பாடலையும் காதலியின் பார்வையை மலர் வனமாக, ஒரு வரமாகக் காணும் தமிழ்த் திரைப் பாடலையும் பார்ப்போம்.
இந்திப் பாட்டு
படம்: சஃபர் (பயணம்)
பாடலாசிரியர்: இந்திவர்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி
பாடியவர்: கிஷோர் குமார்.
ஜீவன் ஸே பரீ தேரி ஆங்க்கே
மஜ்பூர் கரே ஜீனே கேலியே ஜீனே கேலியே
சாகர் பீ தர்ஸத்தே ரஹத்தே ஹைன்
தேரா ரூப் கா ரஸ் பீனேகேலியே பீனேகேலியே
பொருள்:
உயிர்த் துடிப்பு மிக்க உன் விழிகள்
நான் வாழ்வதைக் கட்டாயப்படுத்துகின்றன.
ஆழ்கடலும் அலைபாய்கிறது உன்
அழகைப் பருகுவதற்கு
ஓவியன் வரைந்த ஓவியமோ
காவியம் படைக்கும் கவிஞனின் ஆக்கமோ
எதுகையும் மோனையும் இழைந்தது போல
எப்படி வந்தது இப்படி ஒரு அழகு
இதயத்தில் எழும் இனியதொரு துடிப்பு நீ
இயக்கத்தின் ஏதுவாய் இருக்கும் இன்னுயிர் நீ
நந்தவனத்தின் நறுமணம் உன் சுவாசத்தில்- உன்
அங்கத்திலோ தாமரையின் பரிசுத்தம்.
நன் கிரணங்களின் வீச்சு உன் முக வடிவில்
மான் இனங்களின் மருட்சி நின் இயல்பில்.- உன்
மேலாடையின் நூலிழைகள் அறுந்த இதய
நூலாடை எதையும் தைக்கும் எளிதில்.
இந்தி மொழியில் சாகர் என்ற சொல்லின் பொருள் கடல். அதே சொல்லின் உருது மொழிப் பொருள் மயக்கம் தரும் மது நிரம்பிய கோப்பை. இந்த இரு பொருளும் பொருந்தும் வண்ணம் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. நாயகியின் அழகைப் பருகுவதற்கு ஆழ்கடல் தாகத்துடன் தவிக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அவள் அழகைப் பருகுவதற்கு ஒரு மதுக் கோப்பையே தவிக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அளவு ஆழ்ந்த மரபில் ஊறிய இலக்கிய நயமான வர்ணனை தமிழ்ப் பாடலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், நவீன வாழ்வோடு ஒட்டிய, இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது இந்தத் தமிழ்ப் பாடல். கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகளுக்காகவும் இனிமையான இசைக்காகவும் இன்றும் விரும்பிக் கேட்கப்படும் பாடல் இது. வரம், கனிமரம், இளமையின் கனவுகள் துளிர்விடும் விழியோரம் என்றெல்லாம் காதலியின் விழிகள் வர்ணிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
தமிழ்ப் பாட்டு
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும்
காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி