’மாயா’ அழகு நயன்தாராவை பார்க்க வரவழைத்து பயங்காட்டிய படம். சத்தமில்லாமல் நயன் தாரா நடக்க, திடுக்கென எதிரே தோன்றும் தோழியைப் பார்த்ததும், நயன் மட்டுமல்ல பார்வையாளர்களும் பதறினார்கள், காரணம் பின்னணியில் ஒலித்த சத்தம்.
வீடு, காடு என எந்த இடமானாலும் ஒலியின் மூலம் மனதில் அதிர்வுகளை மட்டுமல்ல, அன்பை, கருணையை, திகிலை 'மாயா' உணர்த்தியது. ’மாயா’வின் வரவேற்புக்கு பெரும் பங்களித்தது அப்படத்தின் ஒலிக்கலவை. ஒலியின் மூலம் கதாபாத்திரங்களின் மனநிலையை நமக்கு கடத்திச் செலுத்த முடியும். செலுத்திக் காட்டினார்கள் ‘மாயா’ படத்தின் ஒலி வடிவமைப்பாளர்கள்.
ஒலியின் மீது காதல் கொண்டு, சின்க் சினிமா (Sync Cinema) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, ‘மாயா’ உள்ளிட்ட படங்களுக்கு சவுண்ட் டிசைனர்களாகப் பணிபுரியும் சச்சின் சுதாகர் மற்றும் ஹரிஹரனைச் சந்தித்தோம்.
என்னை அறிந்தால், மாயா, ஜாக்சன் துரை, 10 எண்றதுக்குள்ள, ஒரு நாள் கூத்து என விரிகிறது அவர்களது திரைப் பயணம். இருவருடனும் பேசியதிலிருந்து..
ஒலி வடிவமைப்பு (சவுண்ட் டிசைன்) என்ற துறை எப்போதுமே சினிமாவில் இருந்தது. அது சமீப காலங்களில் எப்படி வளர்ந்துள்ளது?
அப்போதெல்லாம் ஒலி வடிவமைப்பு என்று வரும்போது சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். மக்கள் நிறைய வெளிநாட்டு படங்களை பார்க்க ஆரம்பித்த பிறகு இப்படியும் ஒலி அமைப்பு இருக்கலாம் என தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். புதிதாக உருவாகிய இளைய இயக்குநர்கள் பட்டாளமும் ஒலி வடிவத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இந்தத் துறையிலும் நிறைய இளைஞர்கள் வந்தனர்.
பெரும்பாலான பட்ஜெட், படத்தின் வீடியோ சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்துக்குத் தான் செலவிட்டு வந்தார்கள். ஒலி அமைப்பு கடைசியில் தான் வரும். அதற்கான பட்ஜெட்டும் சிறியதாகவே இருந்தது. ஒலி என்றால் படத்தின் பின்னணி இசை, பாடல்கள், காட்சிகளில் வரும் சிறு சிறு சப்தங்கள் (sound effects) மட்டுமே என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். மக்களுக்கும் இப்படியான சிறப்பு சப்தங்கள் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. நாங்கள் அப்படியான சிறப்பு சப்தங்களை பதிவு செய்து, தேவையான இடங்களில் சேர்ப்போம்.
நாம் தினசரி வாழ்க்கையில் நம்மைச் சுற்றி சப்தங்களை எப்படி உள்வாங்குகிறோமோ அப்படித்தான் சினிமாவிலும் இருக்க வேண்டும். ஆனால் அந்த காலத்தில் சிறப்பு சப்தங்களை விட பின்னணி இசையே அதிகமாக இருக்கும். தற்போது இது மாறியுள்ளது. ரெண்டுமே சரியான விகிதத்தில் பதிவு செய்யப்பட்டு ஒலிக்கப்படுகிறது.
உங்கள் பார்வையில் ஒலி வடிவமைப்பு என்ற துறைக்கு எப்போது அதிக கவனம் கிடைக்க ஆரம்பித்தது?
எங்களுக்குத் தெரிந்து ரெசூல் பூக்குட்டி ஆஸ்கர் வென்றபோதுதான் நிறைய பேருக்கு இப்படி ஒரு துறை இருக்கிறது என்பதே தெரியவந்தது. அப்போது தான் ஆடியோ என்ஜினியரிங் என்ற படிப்பு இருப்பதும் தெரிய வந்தது. நாங்கள் படித்ததும் அப்படியே. இல்லையென்றால் எங்கள் பெற்றோருக்கு தெரிந்திருக்காது. எனவே அவருக்குத் தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு நிறைய கல்லூரிகள் இந்த படிப்பை பாடப்பிரிவில் சேர்த்தன.
ஆடியோ இன்ஜினியரிங் படிக்கும் போது நாங்கள் படத்தின் இசையில் மட்டுமே எங்கள் பங்கு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதில் இரண்டு பிரிவுகள் உள்ளது. இசைக் கலவை (music mixing) ஒலிக் கலவை (sound mixing). பலரும் இசைக் கலவைக்கென்றே படிக்க ஆரம்பித்தனர். மெதுவாகத்தான் ஒலி வடிவமைப்பு என்ற துறை பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது.
ஃபோர் பிரேம்ஸ் ஸ்டூடியோவில் ராஜா கிருஷ்ணன் என்பவரிடம் பயிற்சி பெற்றோம். அவர் ஜிகர்தண்டா, பெங்களூர் டேஸ், சூது கவ்வும், பரதேசி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியவர். அவர் தான் எங்களை வழிநடத்தினார்.
பிட்சா படத்தில் தான் முதலில் சிறப்பு சப்தங்கள் சேர்க்கும் வேலையை செய்தோம். அந்த படத்தின் மூலம், சப்தங்களும் படத்துக்கு முக்கியம் என மக்களுக்கு புரிய வைக்க முடிந்தது.
ஒலி அமைப்பு என வரும்போது உங்களுக்கு மொழி தடையாக உள்ளதா?
இல்லை. முதலில் நாங்கள் வேலை செய்தது மராத்தி படத்தில்தான். தொடர்ந்து மலையாளம், தமிழ் என பல படங்களில் பணியாற்றியுள்ளோம். ஓர் இத்தாலிய மொழி படத்திலும் பணியாற்றியுள்ளோம்.
மாயா படத்தின் ஒலி வடிவமைப்பு எப்படி நடந்தது?
மாயாவின் ஒலி வடிவமைப்பு தான் எங்களுக்கு சவாலாக இருந்தது. 6 மாத காலம் இதற்காக உழைத்தோம்.
வடிவமைப்பு என்று வரும்போது இயக்குநர், இசையமைப்பாளர் என பலருடன், படம் ஆரம்பிக்கும்போதிலிருந்தே கலந்து பேசி அதற்காக தயார்படுத்த வேண்டும். படத்தின் கதை தெரிந்த பின், இந்தப் படத்தின் ஒலி இப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குநருக்கு சொல்ல வேண்டும். அதே போல இசையமைப்பாளருடன் சேர்ந்து, படத்தின் இசைக்கும், சப்தங்களுக்கும் சரியான கலவை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாயா படத்தில் அப்படித்தான் நடந்தது. படம் ஆரம்பிக்கும் முன்னரே கலந்து பேசிவிட்டோம். காடுகளில் சென்று பதிவு செய்யப்பட்ட ஒலியை படத்தொகுப்பின் போது தந்தோம். அதை வைத்தே படத்தின் படத்தொகுப்பு நடந்தது. இசை சேர்த்த பின் மீண்டும் ஒருமுறை படத்தொகுப்பு செய்து இறுதி செய்தோம்.
மாயா படத்தில் அதிர்ச்சியான தருணங்களுக்கான ஒலியை முதலிலேயே வடிவமைத்துவிட்டோம். வழக்கமாக வயலின் கிரீச்சிடுவது, ட்ரம்பட் இசைப்பது என்று இல்லாமல், மிருகங்கள் போடும் சப்தங்கள், நகத்தை சுவற்றில் கீறினால் வரும் சப்தம் என நாம் வழக்கமாக கேட்காத சப்தங்களையும் கலந்து பயன்படுத்தினோம். அது காட்சியோடு சேரும்போது புதிய அனுபவத்தை தந்தது.
கருப்பு வெள்ளை காட்சிகளுக்கு சற்று திகிலான சப்தமும், வழக்கமான காட்சிகளுக்கு யதார்த்தமான சப்தங்கள் என்றும் முடிவு செய்தோம். சிலவற்றை செயற்கையாக உருவாக்கினோம். காட்டில் இருக்கும் சப்தங்களுக்காக, கேரளாவின் சாலக்குடி காடுகள், கர்நாடகாவின் ஷிமோகா அருகேயுள்ள காடுகள் என அங்கு சென்று ஒலிப்பதிவு செய்து படத்தில் பயன்படுத்தினோம்.
படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் இசைக்கு ஈடாக சப்தங்களுக்கும் முக்கியத்துவம் தந்தோம். மாயா என்ற பாத்திரத்துக்கு பிரத்யேகமான ஒலியை யோசித்தோம். அந்த பாத்திரத்தின் ஆடை அசைவிலிருந்து வரும் சப்தத்தை வைத்து அது மாயா என்று தெரிந்து கொள்ளலாம். காட்சியில் எந்த திகிலும் இல்லையென்றாலும், ஒலியின் மூலம் ஏதோ நடக்கப் போகிறது என உணர்த்தினோம்.
முதலில் நாங்கள் பேசிக்கொள்ளாத சில விஷயங்களை படத்தின் இறுதி கட்ட வேலையின் போது சேர்த்தோம். சந்திரலேகா பாடல் வந்தது அப்படித்தான். அதே போல காட்டில் வரும் காட்சி ஒன்றில் இசையே இருக்காது. முழுக்க சபதங்களை வைத்தே உருவாக்கியிருந்தோம். இசையமைப்பாளர் ரான் எங்களுக்கு அந்த சுதந்திரத்தைக் கொடுத்தார். இந்த சுதந்திரத்தை எல்லா இசையமைப்பாளர்களும் தர மாட்டார்கள். ரான் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் தான் எங்களால் பரீட்சார்த்தமாக முயற்சித்து ஜெயிக்க முடிந்தது.
இயக்குநர்களால் உங்கள் பணியை புரிந்து கொள்ள முடிகிறதா?
இப்போது இருக்கும் இயக்குநர்கள் பலருக்கு அதில் தெளிவு இருக்கிறது. மாயா இயக்குநர் அஸ்வின் அப்படி புரிந்து கொண்டதால் தான் எங்களால் ஒழுங்காக பணியாற்ற முடிந்தது. ஒருவேளை இயக்குநர்களால் புரிந்து கொள்ள முடியாமல் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டால், ஒலிக் கலவையின் போது எங்களால் முடிந்த வடிவத்தை தருவோம். அதற்கு பின் படத்தை பார்க்கும் இயக்குநர் ஒலியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்.
ஒலி வடிவமைப்பில் தொழில்நுட்பம் எப்படி வளர்ந்துள்ளது?
வழக்கமாக 5.1 என்ற முறையில் தான் ஒலிப்பதிவு செய்வோம். பிட்சா படத்துக்காக முதன்முதலில் 7.1 முறையில் ஒலிப்பதிவு செய்தோம். தொடர்ந்து டால்பி அட்மாஸ், ஆரோ 3டி என தொழில்நுட்பங்கள் வந்தன. ஆனால் டால்பி அட்மாஸ் தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
அதில் பறவை கத்துவது, வண்டி ஓடுவது என ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் ஒவ்வொரு ஒலி என்று கூட பதிவு செய்ய முடியும். ஒலி நம்மைச் சுற்றி வருவது போன்ற தத்ரூபமான அனுபவத்தை திரையரங்கில் தர முடியும். மாயா படத்தில் இது பயன்படுத்தப்பட்டது. தற்போது வீடுகளிலும் அட்மாஸ் ஒலியமைப்புக்கான வசதிகள் வந்துவிட்டது.
ஒலி அமைப்பில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் திரையரங்குகள் அதற்கேற்றார் போல் இருக்கின்றனவா?
அட்மாஸ் ஒலிப்பதிவு செய்யும்போதும், அதை வழக்கமான ஒலியமைப்புக்கு மாற்றும்போதும் அதன் தரம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். அதே தத்ரூபமான உணர்வு தரவில்லையென்றாலும் சாதாரண திரையரங்கிலும் ஒலி மிக நன்றாகவே இருக்கும்.
மற்றபடி, பொதுவாக இங்கு அனைத்து திரையரங்குகளிலும் ஒலியமைப்பு சிறப்பாக இருப்பதில்லை. ஒலி அளவை வைப்பதிலிருந்தே சிலர் தவறு செய்கின்றனர். எனவே அதைப் புரிந்து கொண்டு நாங்கள் அதற்கேற்றார் போல் ஒலிப்பதிவு செய்கிறோம். சிலர், அரங்கின் ஸ்பீக்கர்கள் கிழிந்து விடக்கூடாது என்ற பயத்திலும் குறைவான ஒலி அளவை வைக்கின்றனர். மோசமான ஒலி இருக்கும் திரையரங்குகளைப் பொருத்தவரை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் விதத்தை வைத்து தான் ஒலியின் தரம் உள்ளது.
படத்தின் பட்ஜெட்டில் ஒலி வடிவமைப்புக்கென்று எவ்வளவு ஒதுக்கப்படும்?
முன்னதாக கூறியது போல், எங்கள் துறைக்கு தான் குறைவான பட்ஜெட் ஒதுக்கப்படும். ஏனென்றால் அது கடைசியில் தான் நடக்கும். அதன் பிறகு, தொழில்நுட்பத்துக்கு அதிக பணமும், கலைஞர்களுக்கு குறைவான பணமும் தந்தார்கள். இப்போது அது மாறி வருகிறது. ஆரம்ப நாட்களில் நாங்கள் பட்டினி கிடந்து கூட உழைத்திருக்கிறோம். ஊதியம் குறைவாகத் தான் வந்தது. தற்போதைய நிலை அப்படி இல்லை. மேம்பட்டு இருக்கிறது.
புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவை வந்து சேர்வதற்கான கால நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளதா?
அது பணம், முக்கியத்துவம் , பயன்படுத்தும் திறன் இவற்றைப் பொருத்து உள்ளது. தொழில்நுட்பங்கள் வரும்போது அதற்கு செலவு செய்ய இங்கு குறைந்த ஆட்களே இருப்பார்கள். எனவே குறைந்த படங்களிலேயே அது பயன்படுத்தப்படும். இனி வரும் காலங்களில் அது பெருகும்.
ஹரிஹரன் - சச்சின்சுதாகர்