இந்து டாக்கீஸ்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே...

எஸ்.எஸ்.வாசன்

காதலர்கள் தாங்கள் சந்தித்து மகிழும் இன்பத்தைவிட, சிறிது நேரமே கிட்டும் பரவச நிகழ்வுகளை நினைத்துப் பெறும் ஆனந்தம் எல்லையற்றது. அழகான கவிதை வரிகள், இனிய குரல், இசைவான மெட்டு ஆகியவற்றுடன் அந்த உவகை திரைப் பாடல்களாக வெளிப்படும்பொழுது, அவற்றைக் கேட்கும் நாம் பெறும் இன்ப உணர்வு இரட்டிப்பாகிறது.

காதலர்கள் சந்திப்பு என்ற ஒரே சூழலின் இரு அழகான பார்வைகளாக விரியும் இந்தி, தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம். கருத்தில் மட்டுமின்றி காட்சியமைப்பிலும் ஒரே சூழலுடன் கூடிய இந்த இரண்டு பாடல்களும் காலத்தைக் கடந்து நிற்பவை.

இந்திப் பாடல்:

படம்: மெஹூப்கி மெஹந்தி (காதலியின் மருதாணி)

பாடலாசிரியர்: ஆனந்தபக் ஷி

பாடியவர்கள்: முகமது ரஃபி. லதா மங்கேஷ்கர்

இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்

பாடல்:

இத்னோத் தோ யாத் ஹை முஜே கே

உன்ஸே முலாகாத் ஹூயீ

பாத் மே ஜானே க்யா ஹுவா

ஓஓ பாத் மே ஜானே கியா ஹூவா

ஹாய் நா ஜானே க்யா பாத் ஹூயீ … …

பொருள்:

இருவரும்:

இத்தனைதான் என் நினைவு ஓ ஓ

இத்தனைதான் நினைவு எனக்கு

சத்தியமாக அந்த சந்திப்பு நடந்தது

அப்புறம் என்ன நடந்தது அறியேன்

பிறகு சொன்னதும் நாங்கள் அறியோம்

காதலன்:

அள்ளிக் கொடுத்த உறுதிமொழி அத்தனையும்

தள்ளிவிட்டு, தவிக்கவிட்டு, எவருடைய

உள்ளத்தையோ கவர்வதற்கு ஓடி வந்தேன்

உன் விழிகளை சந்தித்தால் உறக்கத்தைத் தொலைத்து

என் சிந்தையில் ஏக்கத்தை இருத்தி ஓடி வந்தேன்

கழிந்துவிடும் எப்படியோ பகல் பொழுது

அது முடிந்து

எழுந்துவிடுமே இரவு, அப்பொழுது என்ன செய்வது

காதலி:

வீழ்த்தப்பட்ட நான், என் விழிகளைத் தாழ்த்திக்கொண்டு

புடவைத் தலைப்பைப் பொத்திக் கொண்டு, ஓடி வந்தேன்

உன் பரிதவிப்புக்கு இசைந்து என் அழகை

உனக்குக் காட்டுவதற்கு வந்தேன்

இத்தகு கள்ளத்தனம் என்னுடன் எப்போதும் இருக்கும் பொழுது

நான் யாரைக் குற்றம் கூறுவது

காதலன்:

இந்த வாழ்க்கை பழங்கதையாய் இருந்தது முன்பு

இரு கண்களால் அவளைக் கண்ட பின் ஜீவன் மீண்டது

காதலி:

அன்பே ஆகிவிட்டேன் ஆட்கொண்ட நாணத்தால்

தண்ணீராக ஊற்றெடுத்த வியர்வையில் நனைந்தேன்

எண்ணும்படியாக ஏதோ மழையில் நனைந்ததுபோல

தமிழ்ப் பாடல்:

படம்: காதலிக்க நேரமில்லை.

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா.

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே

பொன்னான கைபட்டுப் புண்ணான கன்னங்களே

தள்ளாடித் தள்ளாடி அவள் வந்தாள் ஆஹா

சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள் ஒன்று

நானே தந்தேன் அது போதாதென்றாள்

கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்

பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்

இது போதாதென்றான் இனி கூடாதென்றான்

இன்னும் மீதம் என்றேன் அது நாளை என்றான்

சிங்காரத் தேர் போல அவள் வண்ணம் ஆஹா

சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்

அவள் எங்கே என்றாள் நான் இங்கே நின்றேன்

அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம்

பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா

மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா

ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை பிறர்

பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அந்நாளில் இல்லாத பொன்னான எண்ணங்களே

பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே

தள்ளாடித் தள்ளாடி அவள் வந்தாள் ஆஹா.

SCROLL FOR NEXT