அடக்கமான பட்ஜெட், விறுவிறுப்பான கதை, குறைந்த நாள்களில் படப்பிடிப்பு, விரைவான ரிலீஸ் என்றால் மலையாள கமர்ஷியல் சினிமாவில் இயக்குநர் நிஷாரைக் கைகாட்டுகிறார்கள். கடந்த 1994இல் திலீப், ஜெயராம், மாதவி நடிப்பில் வெளியான ‘சுதினம்’ தொடங்கி, இதுவரை 25 படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது வரலட்சுமி சரத்குமார், இனியா, திவ்யா பிள்ளை என மூன்று கதாநாயகிகளை மையப்படுத்தி ‘கலர்ஸ்’ என்கிற பெயரில் முதன்முறையாக நேரடித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
கடந்த 2018இல் ‘டூ டேய்ஸ்’(Two Days) என்கிற இரண்டு மணி நேரப் படத்தை, ஒரே ஷாட்டில் படமாக்கி இந்திய அளவில் சாதனை படைத்தீர்கள். எதற்காக அந்த முயற்சி?
எல்லாக் கதைகளையும் ஒரே ஷாட்டில் எடுத்துவிட முடியாது. அதேபோல் படச்சுருளிலும் அப்படியொரு முயற்சி சாத்தியமில்லை. குறிப்பிட்ட ஓர் இடத்தில் கதையின் பெரும்பகுதி நடப்பதாக இருக்க வேண்டும். அதுவொரு த்ரில்லர் கதையாகவும் இருந்தால் முயன்று பார்க்கலாம். எனது திரைக்கதை ஆசிரியர் அப்படியொரு கதையைச் சொன்னபோது, இதை ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன். இப்படியோர் சோதனை முயற்சிக்குத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் சம்மதித்தனர். 6 நாள்கள் ஒத்திகை பார்த்தோம். முடிந்தவரை கேமராக் கோணங்களும் நகர்வுகளும் ரசிகர்களுக்கு
எரிச்சல் ஊட்டாதவாறு ‘ரெட் எபிக்’ கேமராவில் படம்பிடித்தோம். இந்த வேளையில் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயன் ஆர், உன்னித்தனின் உழைப்பை நினைத்துப் பார்க்கிறேன். ‘டூ டேய்ஸ்’ படத்துக்குமுன், திலீப் நாயகனாக நடித்த ‘த்ரி மென் ஆர்மி’ படத்தை 17 நாள்களில் எடுத்து முடித்தேன். எனது பெரும்பாலான படங்கள் மிகக் குறைந்த நாள்களில் எடுக்கப்பட்டவை. இந்த அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்துதான் இந்தியாவின் மிக நீளமான ‘சிங்கிள் ஷாட்’ படத்தை எடுக்கத் தூண்டுதலாக இருந்தன. அதில் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்போது ஏன் நேரடித் தமிழ்ப் படம், இதை எத்தனை நாள்களில் எடுத்தீர்கள்?
தமிழ்ப் பட உலகைக் கூர்ந்து கவனித்துவருபவன் நான். எனது படங்களில் தமிழ் பேசும் கதாபாத்திரங்களைப் வைத்திருக்கிறேன். 2008இல் நான் இயக்கிய ‘புல்லட்’, ஒரு கொலை விசாரணைப் படம். ஒரு தொலைகாட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்தான், அந்தப் படத்தின் கதைக் களம். தமிழில் ‘அருவி’ படத்தை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் கதையின் பெரும்பகுதி ரியாலிட்டி ஷோ ஷூட்டிங் ஸ்பாட்தான்.
இயக்குநர் மிகச் சிறப்பாகக் கையாண்டிருந்தார். தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். இதுதான் தமிழில் நேரடியாகப் படம் இயக்க சரியான தருணம் என்று தோன்றியது. உடனே களம் இறங்கினேன். அதற்கு ஏற்றாற்போல், அஜி இடிகுலா படத்தைத் தயாரிக்க முன்வந்தார். துபாயில் அரபி மொழிப் படங்களும் விளம்பரங்களும் தயாரித்த அனுபவம் கொண்டவர் அவர். உத்வேகம் மிக்க இளைஞர். இது மூன்று கதாநாயகிகளை மையப்படுத்திய ஒரு குடும்பத் த்ரில்லர். 52 நாள்களில் படமாக்கி முடித்தோம்.
என்ன கதை, வரலட்சுமி சரத்குமாருக்கு என்ன கதாபாத்திரம்?
வரலட்சுமி சரத்குமார், தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுக்கும் பெண் பயிற்சியாளராக வருகிறார். இனியா அவரது மாணவிகளில் ஒருவர். இதில் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக திவ்யா பிள்ளை நடிக்கிறார். கதைப்படி இவர்களுக்கு ஒரு மகன். இந்த அழகான குடும்பத்துக்குள் இரண்டு பெண்கள் நுழையும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. வழக்கமான கதைபோல் தோன்றலாம்.
ஆனால், தென்னிந்திய சினிமாவில் இதுவரை கையாளப்படாத பிரச்சினையைக் கையாண்டிருக்கிறோம். குடும்பக் கதையில் முற்றிலும் புதிய வண்ணம் இது. அதனால்தான் ‘கலர்ஸ்’ என்று தலைப்புச் சூட்டியிருக்கிறோம். ஒரு நல்லப் படம் பார்த்த திருப்தியைக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் குழுவின் லட்சியம். மலையாளத் திரைக்கதையை தமிழில் பிறைசூடன் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை ‘டப்’ செய்யாமல் நேரடியாக மலையாளத்தில் வெளியிடுகிறோம்.