திரையுலகில் ‘போட்டோ ஷூட்’ என்ற சொற்கள் செய்யும் மாயமே தனி. அறிமுக நடிகர்களுக்கும்கூட புதிய புதிய பட வாய்ப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கும் மாயத்தைச் செய்துவிடுபவை இந்த போட்டோ ஷூட் வைபவங்கள். ஒரு கல்யாணத்தை நடத்துவதற்குரிய எல்லா முஸ்தீபுகளும் போட்டோ ஷூட்டுகளுக்கு உண்டு. இந்தக் கரோனா காலத்தில் கோலிவுட்டிலிருந்து அடுத்தடுத்து வெளிவந்துகொண்டிருக்கும் பல போட்டோ ஷூட்டுகள் வீடடங்கிக் கிடக்கும் ரசிகர்ளைச் சட்டெனத் திரும்பிப்பார்க்க வைத்தன.
நாமறிந்த நடிகரையா இப்படிப் புதிய தோற்றத்தில் காட்டியிருக்கிறார் என்று படங்களை எடுத்த ஒளிப்படக் கலைஞரைத் தேட வைத்தன. ஆனால், நாடறிந்த நடிகர்களுக்கு, ‘ஆஹா’ என்று சொல்லவைத்த புதிய தோற்றங்களைக் கொண்டுவந்ததில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுக்கே அத்தனை பங்கும் பெருமையும் என்று ஒதுங்கி வழிவிட்டு அவரைக் கைகாட்டுகிறார்கள் ஒளிப்படக் கலைஞர்கள்.
ஆமாம்! ஆடை வடிவமைப்பாளர் சத்யாவின் கைவண்ணத்தில்தான் பழைய நடிகர்கள் அனைவரும் இளமையான தோற்றத்தில் நம்மை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறார்கள். எப்படி இந்த மாயத்தைப் புரிய முடிந்தது என்று சத்யாவிடம் கேட்டபோது, "வழக்கமான முறையில் போட்டோ ஷூட் செய்தால் நாம் தனியாகத் தெரிய மாட்டோம் என்கிற முடிவுக்கு வந்தேன். அப்போது அமைந்ததுதான் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுக்கு போட்டோ ஷூட் செய்யும் வாய்ப்பு. அதில் வயதான சிம்பு கதாபாத்திரம் ரொம்பவும் இளமையான உடையணிந்து ஸ்டைலிஷாக இருக்கும். அப்படி ஏன் எல்லா சீனியர் நடிகர்களையும் இளமையாக போட்டோ ஷூட் பண்ணக் கூடாது எனத் தோன்றியது.
முதலில் பிரபல கலைஞர்களை அணுகியபோது, இந்த மாதிரியான ஐடியாவுக்கு தயங்கினார்கள். ‘இதனால் என்ன லாபம்’ என்று கேட்டார்கள். அனைவருமே உடையணிந்து சில போட்டோக்களை எடுத்துப் பார்த்தவுடன் குஷியாகிவிட்டார்கள். பின்பு நான் எதுவுமே சொல்லவில்லை. அவர்களாகவே வித்தியாசமான போஸ்களைக் கொடுத்து அசத்தினார்கள். அனைவருக்குமே அளவற்ற மகிழ்ச்சி.
இப்போது, நான் போகும் இடங்களில் எல்லாம் ‘அடுத்த போட்டோ ஷூட்ல யாருப்பா?’ என்று நண்பர்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள். நமக்கு நன்கு பழகிய முகங்கள் என்றைக்கும் மதிப்புக் குறையாத செம்புப் பாத்திரங்கள் மாதிரி. அவர்களை புளிகொண்டு துலக்கியதுபோல் ஆடை, அலங்காரத்தில், தோற்றத்தில் மாற்றுகிறேன். அதை ரசனையோடு செய்கிறேன். அவ்வளவுதான் ரகசியம். இந்த வரிசைப் போட்டோ ஷூட்கள் தொடரும்” என்று உற்சாகமாக, அடுத்த போட்டோ ஷூட்டுக்கு புறப்பட்டார் சத்யா.