ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை'. கரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 60 சதவீத படப்பிடிப்புடன் இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுப் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாள்களுக்கு முன் (செப்டம்பர் 23) மீண்டும் தொடங்கிவிட்டது. மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பின் ‘ஷூட்டிங் ஸ்பாட்’ ஒளிப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருகின்றன. ஆனால், இந்தப் படப்பிடிப்பில் அஜித் தற்போதைக்கு கலந்துகொள்ளவில்லை. அவர் இல்லாத காட்சிகளைப் படக்குழுவினர் தற்போது படமாக்கிவருகிறார்கள்.
அனுஷ்காவின் ‘சைலன்ஸ்’
அடுத்த ஓராண்டு காலத்துக்கு ஓ.டி.டி.யின் ஆட்சியே மேலோங்கியிருக்கும் என்கிற நிலை. தற்போது அனுஷ்கா - மாதவன் நடித்த ‘சைலன்ஸ்’ படமும் ஓ.டி.டி. ரிலீஸ் வரிசையில் இணைந்திருக்கிறது. செவித்திறன் குறைந்த, வாய்பேச முடியாத ஓவியராக நடித்திருக்கும் அனுஷ்காவைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கொலை விசாரணை குறித்த கதை. இதில் மாதவனுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம். தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பன்மொழிகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்புக்கு ‘நிசப்தம்’ என்னும் தலைப்பைச் சூட்டியிருக்கிறார்கள்.
கனவுடன் ஒரு ‘கவர்’ இசை!
தனியிசை ஆல்பம் வெளியிட்டு திரையுலகில் இசையமைப்பாளர் வாய்ப்புத் தேடியது அந்தக் காலம். ஏற்கெனவே ஹிட்டான ஒரு பாடலுக்கு அதன் இசையமைப்பாளரே ஆச்சரியப்படும் வண்ணம் ‘கவர்’ வெர்ஷன் உருவாக்கி வாய்ப்புத் தேடுவது தற்காலம். அதைத் தான் செய்திருக்கிறார் லண்டனில் வாழும் இந்தியரான பிஸ்வஜித் நந்தா. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத இந்த எம்.பி.ஏ. பட்டதாரிக்கு திரையிசை மீது தீராத ஆர்வம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘டேவிட்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் ‘கனவே கனவே’. அது தன்னை ரொம்பவே ஈர்த்துவிட்டதால் அதற்கு ஒரு கவர் வெர்சனை இவர் உருவாக்கியிருக்கிறார், அது இணையத்தில் ஹிட். தமிழ் தெரியாவிட்டாலும் அனிருத் தொடங்கி, ராஜா, ரஹ்மான்வரை இணைந்து பணியாற்றும் கனவுடன் ‘கவர்’ இசை வடித்ததாகக் கூறி ரசிகர்களை கலவரப்படுத்தியிருக்கிறார்.