இந்து டாக்கீஸ்

கோலிவுட் கஃபே

செய்திப்பிரிவு

மீண்டும் யாமி

ராதாமோகன் இயக்கத்தில் வெளியான ‘கவுரவம்’ படத்தில் அறிமுகமான யாமியைத் தமிழ் ரசிகர்கள் மறக்கத் தயாரில்லை. அறிமுகப் படம் தோல்வியென்றாலும் யாமியின் வசீகரம் அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறது. கௌதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பிரேம் சாய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய் - அஞ்சலி ஜோடியிடம் இருந்த கெமிஸ்ட்ரியைத் தற்போது ஜெய் - யாமி ஜோடியிடம் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தின் ட்ரைலரும் பாடல்களும் தற்போது இணைய ரசிகர்களை ஈர்த்திருக்கின்றன. யாமியும் இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் வலம் வருவார் என்கிறார்கள்.

ஆனந்தியின் சிக்கனம்

‘கயல்’ படத்தின் மூலம் பிரபு சாலமானால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆனந்தி, தனக்கு கேராவேன், ஸ்டார் ஹோட்டல் போன்ற சலுகைகள் வேண்டாம் என்று மறுப்பதாகவும் அதனால் அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிகின்றன என்றும் சொல்கிறார்கள். அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘சண்டிவீரன்’ வெற்றியைத் தொடர்ந்து ராசியான ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் ஆனந்தி.

ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படம் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் நிலையில், வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இவை தவிர ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் மீண்டும் ‘கயல்’ நாயகன் சந்திரனோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். இது தவிர கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ’ பண்டிகை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கலங்க வைக்கும் குழந்தை பேய்

பேய்ப் படங்களின் வரிசையில் விரைவில் வெளியாக இருக்கும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் ட்ரைலருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர்  நாத் ராமலிங்கம் என்ற புதியவர். ஒரு அறிமுக இயக்குநர் தனது முதல் படத்தையே பேய்ப் படமாக எடுப்பதா என்றால் “ இதில் வரும் குழந்தை பேய் பயமுறுத்த மட்டுமல்ல, உங்களைக் கண்ணீர் சிந்தவும் வைக்கும். அந்த வகையில் எனக்கு இது பெயர் வாங்கித் தரும் அறிமுகமாக அமையும்,” என்கிறார் இயக்குநர்.

தனிப்பெரும் வசூல்

ஜெயம்ரவி - ஜெயம்ராஜா - எழுத்தாளர்கள் சுபா கூட்டணியில் உருவான ‘தனி ஒருவன்' திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வரையில் ரூ.40.50 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் குதூகலிக்கிறது. இதற்குப் பின்னர் வெளியான படங்களால் இந்தப் படத்தின் வசூலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். தொடர்ந்து மறு ஆக்கப் படங்களை இயக்கிவந்ததால் ’ரீமேக் ராஜா’ என்று வர்ணிக்கப்பட்ட இயக்குநர் மோகன் ராஜாவின் சொந்தக் கற்பனையில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் மறு ஆக்க உரிமையைக் கேட்டு தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரிய மொழி சினிமாக்களிலிருந்து சென்னையில் முகாமிட்டிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

மேலும் ஒரு தமிழ்ப் படம்

வானொலி கேட்பதில் அலாதியான விருப்பம் கொண்ட பணி ஓய்வுபெற்ற முதியவரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகியிருக்கும் தமிழ்ப்படம் ‘ரேடியோ பெட்டி’. ஹரி விஸ்வநாத் என்ற அறிமுக இயக்குநரின் படைப்பாக உருவாகியிருக்கும் இந்தப் படம் தென் கொரியாவின் பூசான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ‘ ரேடியோ பெட்டி’ தேர்வாகியிருப்பது தமிழ் யதார்த்த சினிமாவுக்கு வலு சேர்க்கலாம்.

வசூல் சாதனையில் ரஹ்மான் படம்

ஈரானிய கலைப்படங்களின் பிதாமகர்களில் ஒருவர் என்று விமர்சகர்களால் போற்றப்படுபவர் இயக்குநர் மஜித் மஜிதி. இவர் இறைத்தூதர் முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை ‘முகம்மது’ என்ற பெயரிலேயே இயக்கிவந்தார். இந்தப் படத்துக்கு ஈரானில் தங்கி இசையமைத்துத் தந்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். “ எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தனது வெற்றிகளைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்கும் ஏ.ஆர். ரஹ்மான், ‘முகம்மது’ படத்தின் வெளியீட்டை மிகவும் எதிர்பார்த்துவந்தார்.

இந்நிலையில் கடந்த கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி ஈரான் உள்பட பல நாடுகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முகம்மது தோன்றிய கி.பி.6-ம் நூற்றாண்டு காலகட்டத்தைடப் பிரதிபலிக்கும் விதமாக லைவ் இசைக்கருவிகளை ரஹ்மான் பயன்படுத்தியிருப்பதற்குப் பாராட்டுகள் குவிகின்றன. வசூலிலும் சாதனை படைத்துவருகிறது இந்தப் படம்.

பொக்கிஷ காமெடி

அசலான பிளாக் காமெடி பற்றிய புரிதல் கோலிவுட்டுக்கு வந்ததோ இல்லையோ ‘இது பிளாக் காமெடி படம்’ என்ற அறிவிப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆனால் “இது வெறும் அறிவிப்புடன் நின்றுவிடும் படமல்ல. நிஜமாகவே முழுநீள பிளாக் காமெடிக்கு முயன்றுள்ளோம்” என்று அடித்து சத்தியம் செய்கிறார் இன்று வெளியாகும் ‘9 திருடர்கள்’ என்ற படத்தின் இயக்குநர் விஜய் பரமசிவம். சரண் சக்கரவர்த்தி, அகன்ஷா மோகன் ஆகிய இரு புதுமுகங்கள் நாயகன், நாயகியாகவும் அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள்ரவி, சிங்கம்புலி, நான் கடவுள் ராஜேந்திரன் என ஏகப்பட்ட குணச்சித்திர நடிகர்கள். வாரிசுகள் இல்லாத ஒரு கிராமத்து ஜமீன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதை நாயகன், நாயகி, வில்லன் என தனித் தனிக் குழுவாகக் கொள்ளையடிக்க முயல்கிறார்கள். பொக்கிஷம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதையாம்.

- தொகுப்பு: ரசிகா

SCROLL FOR NEXT