உலக சினிமா என்றாலே ஈரானியத் திரைப்படங்கள் என்று நம்பிக்கொண்டிருந்த காலம் தொண்ணூறுகள் என்றால், எழுபதுகளில் அந்த இடத்தை எடுத்துக்கொண்டிருந்தவை சோவியத் சினிமாக்கள். போராட்ட குணமறியாத தாய் ஒருத்தி போராளியாக உயிர்பெறும் ‘தாய்’ நாவலின் திரைவடிவத்தை மதுரை மாணவர்களுக்கு முதன் முதலில் திரையிட்டுக் காட்டியவர் அந்த ரசனையாளர். யுத்தங்களை தேசபக்தியின் வடிவமாகக் கொண்டாடும் திரைப்படங்களுக்கு மத்தியில் அதிகார வேட்கையின் உச்சமே போர் என்பதை நுட்பமாக உணர்த்திய ‘தி கிரேட் டிக்டேட்டர்’, ‘நோ மேன்ஸ் லேண்ட்’ போன்ற திரைப்படங்களை ‘யுத்தத் திரைப்பட விழா’ என்ற தலைப்பில் அசலான உலக சினிமாவை மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இதுபோன்று நூற்றுக்கணக்கான திரைப்பட விழாக்களை மதுரை மாநகரில் கடந்த 40 ஆண்டுகளாக ஒருங்கிணைத்துவந்த, அந்த ரசனையாளரின் பெயர் சேஷாத்ரி ராஜன். ‘யதார்த்தா’ ராஜன் என்றால், தென் தமிழகம் திரும்பிப் பார்க்கும். இஸ்திரியைக் கண்டிராத வெள்ளைச் சட்டை, காலரை மறைக்கும் பழுப்பேறிய வெண் தாடி, அசட்டையாக மடித்துக் கட்டிய வேட்டி, கரகரத்த குரல் என வளையவரும் ‘யதார்த்தா’ ராஜன் வாய்திறந்தால், உலகத் திரைப்படங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் அருவிபோல கொட்டும். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சினிமா டி.வி.டி.க்களின் குவியலாகக் காட்சி அளிக்கும் எளிய வீட்டில் வாழ்ந்துவந்த இந்த உலக சினிமா காதலர், சில நாள்களுக்கு முன்னால் மறைந்தார்.
சினிமா ரசனை எனும் இயக்கம்
மதுரையில் 70-களின் இறுதியில் மாற்றுத் திரைப்பட ஆர்வலர்கள் சிலரால் யதார்த்தா திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரத்தின் புனே நகரில் உள்ள தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இருந்து ரயிலில் அனுப்பப்படும் படப்பெட்டியை மிதிவண்டியில் வைத்து திரையரங்குக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை அன்று இளைஞராக இருந்த ராஜன் ஏற்றிருந்தார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு படப்பெட்டியையும் ராஜனையும் தவிர, திரைப்பட இயக்கத்தில் இருந்த சகாக்கள் விலகிச் சென்றுவிட்டனர். அதுவரை எல்.ஐ.சி. முகவராகச் சுற்றித் திரிந்த ராஜன், சினிமா மீது கொண்ட பேரார்வத்தால் புனே திரைப்பட கல்லூரியில் நடத்தப்பட்டுவந்த 40 நாள் சினிமா ரசனைப் பயிலரங்கத்தில் பங்கேற்றார்.
“திரைப்படக் கலை ஆசிரியர்களில் தலைசிறந்தவரான சதீஷ் பகதூரிடம் படிக்கும் பேறு ராஜனுக்கு அன்று கிட்டியது. அந்த அனுபவம் அவர் மீது ஆழ்ந்த தாக்கத்தைச் செலுத்தியது. தன்னுடைய மகனுக்கு சதீஷ் என்றே பெயரிட்டார். பாலு மகேந்திரா, பி.கே. நாயர், சதீஷ் பகதூர் ஆகிய இந்திய சினிமா ஜாம்பவான்களைத் திரைப்பட வகுப்பு எடுக்க மதுரைக்கே அழைத்துவந்தார். ஜெகதா, சிந்தாமணி திரையரங்குகளில் அப்போது கலைத் திரைப்படங்களைத் திரையிடும் வழக்கம் இருந்தது. ஆனால், உறுப்பினர்களாக பதிவுசெய்தவர்கள் மட்டுமே அவற்றைக் காண முடியும்.
மாற்றுத் திரைப்படங்களை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்துடன் இறையியல் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரியை நோக்கி ராஜன் நகர்ந்தார். இளைய சமூகத்தை சினிமா சீரழிக்கிறது என்ற வாதத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, மாற்றுத் திரைப்பட ரசனையை மாணவர்களுக்கு ஊட்டத் தொடங்கினார். படைப்பாளிகளையும் திரைப்பட நல்லாசிரியர்களையும் மதுரைக்கு அழைத்துவந்து திரையிடலுக்கு முன்னும் பின்னும் படம் நுட்பமாகப் பேசும் அரசியல், சமூக, பண்பாட்டு விஷயங்கள் குறித்த உரையாடலைப் பார்வையாளர்களுடன் நிகழ்த்தினார்” என்கிறார் மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முரளி. அரங்கம் நிறையப் பார்வையாளர்களுடன் திரையிடல் தொடங்கிக் கூட்டம் முடியும்போது, ஒருவரோ இருவரோ மட்டுமே பொறுமையாக அமர்ந்திருந்தாலும் இறுதிக் காட்சிவரை திரையிட்டு அவர்களுடன் உரையாடும் பண்பை ராஜன் கொண்டிருந்தார்.
குழந்தைகளை நோக்கி..
“மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆராய்ச்சி மையத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்த காலத்தில், மதுரையில் உள்ள சமண நினைவுச்சின்னங்கள், திருமலை நாயக்கர் அரண்மனை, புது மண்டபம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், ஜல்லிக்கட்டு விழா, தமிழ் மேடை நாடகங்களின் வரலாறு, அந்தமான் தீவுப் பவளத்திட்டுகள் ஆகியன குறித்த திரை ஆவணங்களை ராஜன் தயாரித்தார். திரைப்பட விழாக்களின்போது ‘மதுரத் திரை’ என்ற சிற்றிதழைப் படைத்து வந்தார். திரைப்பட விழாக்களின் முன்னோடியான வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு நடுவராக அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்” என்கிறார் எழுத்தாளர் ஸ்ரீரசா. இணையத்தின் வழியாக உலக சினிமாக்கள் திறன்பேசியின் திரைக்கு வந்துவிட்ட பிறகு, குழந்தைகள் மீது ராஜன் ஆர்வம் காட்டினார்.
“குழந்தைகளுக்கான மதுரை சர்வதேசத் திரைப்பட விழாவைக் கடந்த 15 ஆண்டுகளாக நடத்திவந்தார். அப்படித் திரையிடப்பட்ட ‘ரெட் பலூன்’, ‘ஓல்டு மேன் அண்ட் தி சீ’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் திரைமொழியின் உயர்ந்த ரசனையை ஊட்டின. கலை வடிவத்தை ஒருபோதும் வியாபாரம் ஆக்கக்கூடாது என்பதைக் கடைசிவரை பிடிவாதமாகக் கடைபிடித்த யதார்த்தவாதியாக வாழ்ந்தவர் ராஜன்” என்கிறார், அவருடன் கடந்த 20 ஆண்டுகளாக நெருக்கமாகச் செயல்பட்டுவந்த ராம் பிச்சை. மதுரைக்கு மாபெரும் இழப்பு ‘யதார்த்தா’ ராஜன்.‘யதார்த்தா’ ராஜன்!