அறிமுக இயக்குநர் படத்தில்
பாலிவுட் ஹீரோக்களைப் போலவே ஹீரோயின்களும் இப்போது வாழ்க்கை வரலாறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சோனம் கபூரும் அப்படியொரு படத்தில்தான் இப்போது நடித்துவருகிறார்.
பான் அம் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டபோது, பயணிகளைக் காப்பாற்ற முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டவர் விமானப் பணிப்பெண் நீரஜா பனோட். இறப்புக்குப் பின் அவருக்கு இந்திய அரசின் ‘அசோக சக்கர’ விருது வழங்கப்பட்டது.
‘நீரஜா பனோட்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தில்தான் சோனம் கபூர் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராம் மாதவாணி இந்தப் படத்தை இயக்குகிறார்.
“இந்தப் படம் நாட்டின் இளம் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அவர்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டியதை இந்தப் படம் அறிவுறுத்தும்” என்று சொல்கிறார் சோனம் கபூர்.
கஷ்டப்பட்ட தீபிகா
‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படம் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ராம் லீலா’ படத்தைவிட மிகவும் கடினமாக இருப்பதாகச் சொல்கிறார் தீபிகா படுகோன். இந்தப் படத்தில், மராத்திய தளபதி பெஷ்வா பாஜிராவ்வின் இரண்டாவது மனைவி மஸ்தானி கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கிறார்.
“இந்தப் படத்தை என் திரை வாழ்க்கையின் கடினமான படமாகச் சொல்லலாம். இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்துக்காகக் கடினமாக உழைத்திருக்கிறேன். ‘ராம் லீலா’ உணர்வுபூர்வமானதாகவும், அதிகமான உடலுழைப்பைச் செலுத்த வேண்டியதாகவும் இருந்தது. ஆனால், ‘பாஜிராவ் மஸ்தானி’யுடன் ஒப்பிடும்போது அதெல்லாம் ஒன்றுமேயில்லை” என்று சொல்லியிருக்கிறார் தீபிகா.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முன்னர் படக்குழுவினர் நிறைய ஒத்திகைகள் பார்த்திருக்கிறார்கள். “நாங்கள் தொடர்ந்து பத்திலிருந்து பதினான்கு மணிநேரம் படப்பிடிப்பு செய்தோம். குதிரை ஏற்றம், சண்டைப் பயிற்சிகள், நடன ஒத்திகைகள், வசன வகுப்பு எனப் படப்பிடிப்புக்கு முன்பும் தீவிரமாக உழைத்தோம். இந்த எல்லா நேரங்களிலும் இயக்குநர் பன்சாலி எங்கள் கூடவே இருந்தார்” என்கிறார் தீபிகா. இந்தப் படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
ஷில்பாவின் வாழ்க்கையா ‘காலண்டர் கேர்ள்ஸ்’?
‘காலண்டர் கேர்ள்ஸ்’ படத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவைத் தூண்டுதலாக வைத்து ஒரு கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் இயக்குநர் மதூர் பண்டார்கர். ஐந்து மாடல்களின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம் ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது.
மாடல் ஆகாங்ஷா பூரியின் கதாபாத்திரம் ஷில்பாவை மனதில் வைத்துத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், ஷில்பாவின் தோற்றத்துடன் ஒத்துப்போகும் ஆகாங்ஷாவை இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது பாலிவுட் வட்டாரம். ஷில்பா, விஜய் மல்லையாவின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டவர் என்பதால் இந்தச் செய்தியை அவர் தரப்பில் யாரும் மறுக்கவில்லை.