பற்றி எரியும் மக்கள் பிரச்சினைகளில் ஒன்றைச் சமரசமின்றிப் பேசுகிறது ‘ஈவன் த ரெயின்' (2011) எனும் ஸ்பானிய சினிமா. சூழலியல், மானுடவியல், வரலாறு, அரசியல் எனப் படத்தில் கையாண்டிருக்கும் பிரச்சினையைச் சூழ்ந்து நிற்கும் சகலத்தையும் அலசிப் பிழிந்து காயப்போட்டுவிடுகிறது இத்திரைப்படம்.
பொலிவியா நாட்டில் உள்ள கொச்சபம்பா மலைப்பகுதிக்கு ஒரு திரைப்படக் குழு வருகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் அடியெடுத்து வைத்த வரலாற்றைப் படமாக எடுப்பது குழுவின் நோக்கம்.
அங்கு வாழும் செவ்விந்தியர்களையே தொல்குடி செவ்விந்தியர்களாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பொதுப்பிரச்சினைகளில் எதற்கும் அஞ்சாமல் கேள்வி எழுப்பும் டானியல் (ஜான் கார்லோஸ் அடுவரி) எனும் இளம் செவ்விந்தியனுக்கு மிக முக்கியப் பாத்திரம்.
அதே வேளையில் ஒரு பன்னாட்டுத் தண்ணீர் கம்பெனி அங்கு வருகிறது. காட்டுக்குள் ஏழு கி.மீ. தூரம் பள்ளம் தோண்டி, கிராம மக்கள் தங்கள் சொந்த முயற்சியால் குழாய் பதித்துக் கொண்டுவந்து சேர்த்த, குடிநீர் கிணற்றைக் கையகப்படுத்துகிறது. இதற்கு அரசும் உடந்தை என்பதால் எதிர்க்கும் அப்பாவி மக்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தப்படுகிறது.
ஒரு பக்கம் படப்பிடிப்பு வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன. கொலம்பஸ் படையினர் மக்கள் மீது தீர்வை விதிக்கின்றனர். குறிப்பிட்ட அளவு தங்கம் எடுத்துவராதவர்கள் தலை உருளும். வரிசையில் நின்று தங்கத் துகள்களை எடைபோட்டுத் தரும் காட்சி ஆற்றங்கரையில் படமாக்கப்படுகிறது. ஒரு தொல்குடி இந்தியர் சிரச்சேதம் செய்யப்படும்போது, அவரின் மகளாக உடன் வந்த டேனியலின் மகள் பெலன் அலறித் துடித்துக் கதறுவது நம் நெஞ்சையே கிழிப்பதாக அமைய, தயாரிப்புக் குழுவினருக்கு பெலனையும் பிடித்துப்போகிறது.
பன்னாட்டு கம்பெனியையும் அரசையும் எதிர்த்து கொச்சபம்பா நகரில் டானியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. பதற்றமடையும் தயாரிப்பாளர் காஸ்டா (லூயிஸ் டோசர்) அவன் வீட்டுக்குச் செல்கிறார். போலீஸ் தடியடியால் காயப்பட்டு ஓய்வில் இருப்பவனிடம் கெஞ்சுகிறார். எக்ஸ்ட்ராவாக நடித்த உள்ளூர் மக்களுக்கு 2 டாலர் சம்பளமாகக் கொடுத்தவர், 10 ஆயிரம் டாலர் பணத்தை அவனுக்குக் கொடுக் கிறார். ஒருவிதப் புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவதாகக் கூறுகிறான்.
ஆனால் மறுநாளும் மறியல் ஆர்ப்பாட்டம். படப்பிடிப்புக் குழுவினர் ஏதோ வேலையாக அதிகாரிகளைக் காணச் செல்கிறார்கள். அக்கட்டட வளாகத்தின் எதிரே ஏராளமானோர் திரண்டிருக்க புனல் ஒலிபெருக்கியைக் கையில் ஏந்தி இவன்தான் பேசிக்கொண்டிருக்கிறான். வருத்தத்தோடு அறைக்குத் திரும்ப, டானியல் கைது செய்யப் பட்டு வேனில் ஏற்றப்படுவதைத் தொலைக்காட்சியில் காண நேரிடுகிறது. உடனே போலீஸ் அதிகாரிகளை நாடிச் செல்கின்றனர். 2500 டாலர் பணம் செலுத்தி, படப்பிடிப்பு முடிந்ததும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அழைத்து வருகிறார்கள்.
“உங்கள் கடவுளை நான் அவமதிக்கிறேன்” என்று உச்சபட்ச சினத்தில் அறைகூவல் விடுக்கும் டானியல் உள்ளிட்ட தொல்குடியினர் மூவர் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து சிலுவையில் மறிப்பதோடு இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிகிறது. கைது செய்ய வரும் போலீஸை ஏமாற்றி டேனியல் தப்பித்துவிடுகிறான்.
கொச்சபம்பா நகரிலும் போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டுகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலர் இறக்கின்றனர். ஊரே பற்றி எரிகிறது.
2001-ல் நடந்த உண்மைச் சம்பவத்தைத்தான் இயக்குநர் ஐசியார் பொலைன், சிறந்த வரலாற்றாய்வாளர்கள், திரைக்கதையாசிரியர்கள் துணை யோடு படமாக்கியுள்ளார். மழைத் தண்ணீரைக்கூட அரசாங்கம் வியாபாரப் பண்டமாக்கிப் பன்னாட்டு கம்பெனிக்குத் தாரைவார்க்கிறதே என ஊடகங்கள் எழுப்பிய விமர்சனத்தின் அடிப்படையிலேயே ‘மழையைக் கூட' எனப் படத்திற்குத் தலைப்பு வைத்துள்ளார்.
சின்னச் சின்ன விஷயங் களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.
தண்ணீர் ஒப்பந்தத்தைக் கைவிட்டுப் பன்னாட்டு நிறுவனம் திரும்பிச் செல்கிறது என்ற அறிவிப்புக்குப் பிறகு மீண்டும் டேனியல் தோன்றுகிறான். போராட்டத்தில் குண்டடிபட்ட டேனியல் மகளை சிகிச்சைக்காக காரில் தனது ஊருக்கு அழைத்துச் செல்லும் காஸ்டாவை வழியில் எதிர்கொண்டு டேனியல் கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா? - ஒரு சீசாவில் கொச்சபம்பா குடிநீர்.