‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா, நடிகர் விஜய்க்கு சொன்ன கதையில் அஜித் நடிக்க முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருவதை இயக்குநர் வட்டாரம் உறுதிப்படுத்துகிறது.
ஆய்வுக்கு மரியாதை!
நோய்களால் இறப்போரைவிட, சாலை விபத்துகளால் இறப்போரின் எண்ணிக்கையே இந்தியாவில் அதிகம். இது பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர் மாறன். போக்குவரத்து விதிகளை மீறும்போது ஏற்படும் விளைவுகள், காதல் என்ற பெயரால் இளைய தலைமுறை தடம்புரளும்போது ஏற்படும் விளைவுகள் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து, அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் ‘பச்சை விளக்கு’. கடந்த ஜனவரியில் வெளியாகி விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்ட இப்படம், தற்போது சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றுவருகிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற கோல்டன் பிக்சர்ஸ், நியூயார்க்கின் அப்ரோடைட் (Aphrodite), சவுத் பிலிம் அண்ட் ஆர்ட்ஸ் அகடமி, ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் ஆகிய 4 சர்வதேசப் பட விழாக்களில் அதிகாரபூர்வமாகத் தேர்வாகி திரையிடப்பட்டுள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற ஃபிளாரன்ஸ் (Florance) சர்வதேசப் படவிழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வுபெற்றது. அதேபோல், பூடான் நாட்டின் ட்ரக் (Druk International Film Festival) சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு ‘சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம்’ என்ற விருதை வென்றுள்ளது.
மேலும் இந்தியாவின் சுயாதீனப் படவிழாவான ‘ட்ரிப்விள் சர்வதேசப் பட விழா'வில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. “ஆய்வின் அடிப்படையில் உருவான திரைக்கதைக்கு இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைத்துவருவது, எந்தப் பின்னணியும் இல்லாத என்னைப் போன்ற புதிய இயக்குநர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அடுத்தப் படத்தையும் முனைவர் பட்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்க விரும்புகிறேன்” என்கிறார் மாறன்.
அசோக் செல்வன் ஜோடியாக...
சுதா கொங்கரா, மதுமிதா, ஹலிதா ஷமீம் என பெண் இயக்குநர்கள் தரமான மாஸ் படங்களை இயக்கி வெற்றி கொடுக்கும் காலம் இது. இந்தப் பட்டியலில் புதிதாக இணைய வருகிறார் ஸ்வாதினி. கெனன்யா பிலிம்ஸ் ஜே.செல்வகுமார் தயாரிப்பில், ‘ஓ மை கடவுளே’ வெற்றிக்குப் பின் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஸ்வாதினி.
கரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கிய படப்பிடிப்புகளில் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படமும் ஒன்று. இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்க, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ புகழ், மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது.