இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: பயந்து நடுங்கிய அறிமுகங்கள்!

ஆர்.சி.ஜெயந்தன்

இப்போதெல்லாம் பேய்ப் படங்களில் அறிமுகமாவதைக் கதாநாயகிகள் ஆன்டி சென்டி மென்டாக நினைப்பதில்லை. இன்று வெளியாகும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர் மொஹ்ர்னா அனிதா ரெட்டி. தியேட்டர் நாடகங்களில் பிரபலமான இவர் பிரபல விளம்பர மாடல் மட்டுமல்ல, காப்பி ரைட்டரும்கூடவாம்.

இவரைப் போலவே விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜின்’ என்ற பேய்ப் படத்தின் மூலம் கலக்க வருகிறார் பல் மருத்துவரான மாயா. இந்த இரண்டு பேருக்கும் பேய்ப் படங்களில் அறிமுகமாவது பற்றிய பயமோ வருத்தமோ இல்லையா என்று கேட்டால் “இது சவாலான விஷயம். ஆனால், நாடக அனுபவத்தால் அந்த சவாலைக் கடந்து வந்தேன்” என்கிறார் அனிதா ரெட்டி. பல் மருத்துவர் மாயாவோ “படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் பயம் போனபாடில்லை” என்று குலை நடுங்குகிறார். இரண்டு பேருமே தங்களது பேய்ப்பட அனுபவம் பற்றி மனம் திறக்கிறார்கள் .

முதலில் அனிதா பேசுவதைக் கேளுங்கள்.

‘‘உனக்கென்ன வேணும் சொல்லு படத்தில் என் கதாபாத்திரம் அத்தனை எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது அல்ல. ஆனால், நிஜ வாழ்வில் நிறைய பேரை நானே இப்படிச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலி எனக்குப் புரியும். இந்தப் படத்தின் இயக்குநர் நாத் ராமலிங்கம் என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரித்தபோது ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண்ணின் மனதைப் பார்த்த பார்வையில் மிரண்டுபோனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் கதையைச் சொல்லி முடித்ததும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நடிகர் யார் என்று ஆவலாக அவரிடம் கேட்டேன். ‘அது நீதான்’ என்றார்.

முதலில் தயங்கினாலும் அவர் எனக்குத் தந்த தன்னம்பிக்கை காரணமாக அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து, படம் முழுமையாகித் தயாரான பின்னர் பார்த்தபோது நான் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாகப் படத்தைப் பார்த்தேனோ அந்த அளவுக்கு பயந்து நடுங்கிக்கொண்டே பார்த்தேன். இதில் நடித்திருப்பது நான்தானா என என்னை நானே கேட்டுக்கொண்டேன்” என்று வியந்துபோனவரிடம் அவரது கதாபாத்திரம் பற்றிக் கேட்டதும் தயக்கமில்லாமல் ரகசியம் உடைத்தார்.

“திருமணமாகிக் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கும் ஒரு மேல்தட்டுக் குடும்பப் பெண் கதாபாத்திரம் என்னுடையது. குழந்தைப் பேறு இல்லாததால் தினசரி வாழ்வில் அவள் எதிர்கொள்ளும் அவமானங்களும் அதன் தொடர்ச்சியாக அவளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் ஒரு அமானுஷ்ய சக்திக்கு உயிர் கொடுப்பதுதான் கதை. ‘தாயில்லாப் பிள்ளைக்குத் தரும் அரவணைப்பைக்கூட , பிள்ளையில்லாத் தாய்க்கு சமூகம் தருவதில்லை” என்று கதை தன்னை மையப்படுத்தி சுழன்றிருப்பதைப் பகிர்ந்து முடித்தார்.

அந்த மர்ம அழைப்பு!

நகைச்சுவை கலந்து சொல்லப்படும் மற்றொரு ஃபிரெண்ட்லி பேய்ப் படம் என்று வர்ணிக்கப்படுகிறது 'ஜின்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் டாக்டர் மாயா புன்சிரிப்பில் எவரையும் மயக்கும் வல்லமை கொண்டவர் போலும். சினிமா மீதான காதலால் பல்மருத்துவத்தையும் விடாமல் சினிமாவையும் துரத்திக்கொண்டிருந்த இவருக்கு 'ஜின்' கைவசமாகியிருக்கிறது.

“நான் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸின் தீவிர ஃபேன். போதாக்குறைக்கு என்னிடம் பல் சிகிச்சை எடுக்க வந்த பலர் ‘நீங்க ஏ.ஆர். முருகதாஸ் பட ஹீரோயின் போல இருக்கீங்க’ என்று ஏற்றிவிட்டுப் போனார்கள். அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்தே தீருவேன். அதேபோல் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு.

எனக்குப் பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ரொம்ப க்யூட்டாக இருக்கும். அவர் நடிக்கும் ஸ்டைலை காப்பியடித்தால் தப்பில்லை என்று தோன்றுகிறது. ‘ஜின்’ படத்தில் என் நடிப்பில் ஜெனிலியாவின் தாக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள்” என்ற வரை இடைமறித்து ‘ஜின்’ படத்தில் “பேயை சந்தித்த அனுபவத்துக்கு வாருங்கள்” என்றதும் அவரது கண்களில் பயம் படபடக்கிறது.

“ஜின்' படத்தில் என்னுடைய படப்பிடிப்பு அனுபவங்கள் கிட்டத்தட்ட படத்தின் பேய்க் கதைக்குக் கொஞ்சமும் குறைந்தது அல்ல. காளி வெங்கட், ‘காதலில் சொதப்புவது எப்படி? அர்ஜுனன், முண்டாசுபட்டி முனீஸ் காந்த், மெட்ராஸ் ஜானி என்று வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் சும்மாவா? சிரித்து சிரித்து அல்சரே வந்துவிட்டது. இவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும் ‘மெட்ராஸ்' கலையரசனும். தொடர்ந்து 40 நாட்களும் சில்லிடும் இரவுகளில் நடுக் காட்டில் படப்பிடிப்பு. இவர்களின் கலாட்டாவால் படம் முடிந்ததே தெரியவில்லை.

ஆனால், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் யாருக்குமே நேரக் கூடாது. அன்று நைட் ஷூட்டிங். எனது ஷாட் முடிந்து நான் கேரவேனில் தனியாக அமர்ந்திருந்தேன். தூக்கம் சொருகியது. எனது போனுக்கு நம்பர் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் அட்டென்ட் பண்ணத் தயங்கினேன். மீண்டும் மீண்டும் வந்ததால் பயந்துபோய் அழைப்பை ஏற்றுப் பேசினேன். நடுங்கும் குரலில் ஒரு பெண் பேசினார். ‘டாக்டர் எனக்கு சில நாட்களாகக் கடுமையான பல் வலி. உங்கள் கிளினிக் போனால் பூட்டியிருக்கிறது.

அதான் உங்களைத் தேடி இங்கேயே வந்துவிட்டேன்’ என்றார். எனக்குக் கொஞ்சம் குழப்பம். படபடப்பு. ‘நீங்கள் யார்?’ என்றேன். ‘நான் உங்கள் ஏரியா ரத்தக் காட்டேரி, எனக்குப் பல் வலி. இதனால் மற்றவர்கள் கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்க முடியவில்லை!” என்று சொல்லிவிட்டு விசும்பி விசும்பி அழ ஆரம்பித்துவிட்டது. அவ்வளவுதான் போனை ஆஃப் செய்து சோபாவில் தூக்கி எறிந்துவிட்டேன். என்னை யாரோ கலாய்த்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தாலும் அந்தக் கணத்தில் எனக்கு உயிர்போய் உயிர் வந்துவிட்டது. எனது படக்குழுவில் அந்தக் கருப்பு ஆடு யார் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

SCROLL FOR NEXT