இந்து டாக்கீஸ்

ஸ்டாப்டு ஆன் ட்ராக்: ஒரு மரணமும் சில சலனங்களும்

என்.கெளரி

சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும். இந்த வரியை வலியோடும், அன்பின் வலிமையோடும் பிரதிபலிக்கும் ஜெர்மானியப் படம்தான் ஸ்டாப்டு ஆன் ட்ராக் (Stopped on Track).

“உங்கள் மூளையில் புற்றுநோய் பரவியுள்ளதால் இன்னும் இரண்டு மாதங்கள்தான் உங்களின் அதிகபட்ச வாழ்நாட்களாக இருக்கும்,” என்று ப்ரான் லாங்கேவிடம் (மிலன் பாஷெல்) மருத்துவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது படம். ப்ரான்க்கின் மனைவி சிமோன் (ஸ்டெஃபி குன்ஹெர்ட்) எப்படி இந்தச் செய்தியைக் குழந்தைகளிடம் சொல்வது என்று மருத்துவரிடம் கேட்கும்போது வெளிப்படும் சோகம், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு நிமிட அமைதி எனப் படத்தின் தொடக்கக் காட்சியிலிருந்தே ஒரு நடுத்தரக் குடும்பத்தை யதார்த்தமாகப் பதிவு செய்கிறது இப்படம்.

ஒரு வழியாகத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எட்டு வயது மகன் மிகா (மிகா நில்சன் செடல்) பதினான்கு வயது மகள் லில்லி (தலிசா லில்லி லெம்கே) இருவரிடமும் ப்ரான்கும் சிமோனும் உண்மையைச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அந்த வயதுக்கே உரிய மனநிலையோடு தந்தையின் நோயைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

மரணம் குறித்த தன் பயம், கோபம், விரக்தி என எல்லா உணர்வுகளையும் ப்ரான் தினமும் ஐபோனில் பதிவு செய்கிறார். ப்ரான்கின் நோய் தீவிரமடையத் தொடங்குகிறது. அவர் நடத்தை நிலையற்றதாக மாறுகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மறக்க ஆரம்பிக்கிறார். ப்ரான் மனம் உடைந்து போகும் தருணங்களில் ஆறுதல் சொல்லும் மனைவியாகச் சிமோன் அழுத்தமான அன்பை வெளிப்படுத்துகிறார். மிகா தன் தந்தையுடன் எப்போதும் கனிவுடன் நடந்துகொள்கிறான். ஆனால் பதின் பருவத்தில் இருக்கும் லில்லி குடும்பத்தின் நிம்மதியற்ற சூழலை வெறுக்கிறாள். அதற்குக் காரணமாகத் தந்தையை நினைக்கிறாள். இதனால் தனக்கு நீச்சல் போட்டியில் கிடைக்கும் வெற்றியைக்கூட குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளாமல் தவிர்க்கிறாள்.

ஒரு பேரிழப்பைச் சந்திக்கவிருக்கும் குடும்பத்தின் மனநிலையைத் தத்ரூபமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ஆன்ட்ரியாஸ் ட்ரேசன். இறுதிச் சடங்கில் இசைக்கப்பட வேண்டிய ஆல்பத்தைப் ப்ரான் தேர்ந்தெடுப்பது, “அப்பா, நீங்கள் இறந்த பிறகு உங்கள் ஐபோனை நான் எடுத்துக்கொள்ளலாமா?” என்று மிகா கேட்பது, சிமோன் தன் தாயிடம், “இப்போதெல்லாம் சில நேரங்களில் ப்ரான் இறந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கத் தோன்றுகிறது” என்று கூறுவது போன்ற காட்சிகள் மரணத்தைப் பற்றிய மனிதர்களின் மாறுபட்ட பார்வைகளை வெளிப்படுத்துவதுடன் அவை ஏன் அவ்வாறு வெளிப்படுகின்றன என்னும் கேள்வியையும் நமக்குள் எழுப்புபவை.

ப்ரான் லாங்கேவாக நடித்திருக்கும் மிலன் பாஷெல் நோயின் ஒவ்வொரு நிலையையும் தன் தேர்ந்த நடிப்பால் திரையில் கொண்டுவந்திருக்கிறார்.

உண்மையான மருத்துவர்கள், மருத்துவ ஆலோசகர்களே படத்தில் நடித்திருக்கிறார்கள். திரைக்கதை என்று ஒன்று இல்லாமல் படப்பிடிப்பின்போதே காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பது இப்படத்தின் தனித்துவம்.

மனிதனின் மரணம் குறித்த உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு 2011 கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருது கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT