இந்து டாக்கீஸ்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: ஒரு மொழியில்லாமல் மவுனமாகிறேன்

எஸ்.எஸ்.வாசன்

காதலியைப் பார்த்துக் காதலன், ‘நீ மிகவும் அழகானவள்’ என்று கூறுவது உலக வழக்கம். ஆனால், ‘உன்னைவிட அழகானவள் யாரும் இல்லை, ஆயிரத்தில் நீ ஒருத்தி, உனக்காக நான் என் உயிரையே தருவேன்’ என்றெல்லாம் நாயகன் தன் காதலியைப் பார்த்துப் பாடுவது இந்தியத் திரை மரபு. இந்த மரபின்படி காதலியைப் புகழும் இரு வேறுபட்ட பார்வைகளைக் கொண்ட இந்தி, தமிழ்த் திரைப் பாடல்களைப் பார்க்கலாம்.

இந்திப் பாடல்:

படம்: கரானா (குடும்பம்). பாடியவர்: முகமது ரஃபி.

பாடலாசிரியர்: ஷக்கில் பதாயினி. இசை: ரவி.

ஹுஸ்னுவாலே தேரா ஜவாப் நஹீன்

கோயி துஜ்ஸா நஹீன் ஹஜாரோன் மே

து ஹை ஐஸ்ஸி கலி ஜோ குல்ஷன் மே

சாத் அப்னே பஹார் லாயீ ஹோ

...

...

பொருள்.

எழிலானவளே இல்லை உனக்கு ஈடு இணை

அழகி எவரும் இல்லை உன் போல் ஆயிரம் பெண்களில்

வசந்தத்தைத் தன்னுடன் நந்தவனத்திற்கு எடுத்து வரும்

வாசமிகு மலரின் அரும்பைப் போன்றவள் நீ

நிலவொளியில் நீராடி நீள் இரவில் விழும்

அலைக் கீற்றை ஒத்த அணங்கு நீ

உனது இந்த அழகு, உனது இந்த வனப்பு

அந்த நட்சத்திரங்கள் சூழ ஒளிரும் நிலவு போன்றது

உன் கண்களில் தெரியும் குறும்பு

கால் கொண்டு நடக்கும் சத்தியம் போன்றது.

உன் உதட்டின் மீது ஒளிரும் மவுனம் உணர்த்துகிறது

அதன் உள்ளே சிதறிக் கிடக்கும் கவிதைக் கனவுகளைக்

கரிய உன் கூந்தல் காட்டிடும் வண்ணம்

வசந்த காலத்தின் கார் மேகம் என (உலகு) எண்ணும்

கவி எவரும் உன் எழில் முகம் கண்டுவிட்டால்

புத்துணர்வு பெறும் அவர் கவிதை அனைத்தும்

ஓவியன் ஒருவனுக்கு நீ உடைமை ஆயின்

காவியக் கனவுகள் நிரப்பும் அவன் வாழ்க்கையைப்

புலவர்கள் தேடி உன்னைப் புகலடைவர் எனில்

வலியே மிகும் அவர் உள்ளத்து விண்மீன்கள்தனில்

எழிலானவளே இல்லை உனக்கு ஈடு இணை

அழகி எவரும் இல்லை உன் போல் ஆயிரம் பெண்களில்.

கவித்துவம் நிறைந்த வரிகளுடன் இனிமையான மெட்டுடன் அமைந்த இந்த இந்திப் பாடலுக்குச் சற்றும் குறை வில்லாத தமிழ்ப் பாட்டைப் பாருங்கள்:

படம்: காதலர் தினம். பாடியவர்: உன்னி மேனன்.

பாடலாசிரியர்: வாலி. இசை: ஏ.ஆர். ரஹ்மான்

என்ன விலை அழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிர் என்றாலும் தருவேன்

இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மவுனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே

மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது

விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி; மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு

விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது

உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று

பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

பல்லவன் சிற்பிகள் அன்று

பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு (என்ன விலை...)

உயிரே உனையே நினைத்து

விழி நீர் மழையில் நனைந்து

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே

உன் புகழ் வையமும் சொல்ல

சித்தன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

உன் புகழ் வையமும் சொல்ல

சித்தன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல

நல்ல நாள் உனைச்சேரும் நாள்தான் (என்ன விலை...)

SCROLL FOR NEXT