மூன்று லட்சம் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி, நூற்றுக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனை, உளவியல் தீர்வு என்று மனிதவள மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவரும் இளம் மருத்துவர் வி. விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம். தற்போது ‘ஆகம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். காதல், உணர்ச்சிமயம், ஆக்ஷன் என்று ஒரு வணிகப் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் தொட்டுக்கொண்டு, அரசு வேலை வாய்ப்பில் இந்திய அளவில் நடக்கும் ஊழலை இந்தப் படத்தில் மையப்படுத்தியிருப்பதாகக் கூறும் அவரிடம் பேசியதிலிருந்து…
பயிற்சியிலிருந்து படம் இயக்க வந்தது எப்படி?
சொந்த ஊர் பரமக்குடி. வீட்டில் எல்லோருமே மருத்துவம், சட்டம் படித்தவர்கள். வீட்டில் நான் 3-வது பிள்ளை. மருத்துவத் துறை மீது ஆசை இருந்தாலும், மனிதவளம் படிப்பைச் சுற்றியே என் மனம் நகர்ந்தது. தொழில்நுட்பத்தில் இந்தியா பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில் அதே அளவுக்கு நமது மனித வளம் மாற்றங்களையோ வளர்ச்சியையோ எட்டியதா என்றால் கேள்விக்குறிதான். ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைத்தது.
மற்றொரு பக்கம் ஒரு வேளை சாப்பாடு கூடக் கிடைக்காத ஏழைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சமநிலையின்மை எனக்குள் எழுப்பிய கேள்விகளை வைத்து ‘ஒரு சிறகு போதும்’ என்ற ஒரு தன்னம்பிக்கை நூலை எழுதினேன். அதைத் தொடர்ந்து ‘உன்னை உணர்’ என்ற தலைப்பில் இந்த தேசம் குறித்த பிரதிபலிப்பை எழுதத் தொடங்கினேன். ஒருமுறை, நண்பரும் சினிமா எடிட்டருமான மனோஜ் ஜியான் நான் எழுதியதைப் படித்துப் பார்த்தார். இதைப் புத்தகமாகப் போட்டால் சில ஆயிரம் நபர்களைப் போய்ச்சேரும். திரைப்படமாக எடுத்தால் லட்சக்கணக் கானவர்களை அடையுமே என்றார். அப்படி விழுந்ததுதான் இந்தப் படத்துக்கான விதை.
‘உன்னை உணர்’ புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
உலக அளவில் ஹ்யூமன் ரிசோர்ஸின் தலைநகரம் என்றால் அது இந்தியாதான். அப்படியான மிகப் பெரிய மனித வளம், படித்த அறிவுஜீவிகள் என இருந்தும் இந்தியா ஏன் வளரவில்லை என்பதை மையமாக வைத்து எழுதியதுதான் ‘உன்னை உணர்’. அதை படமாக்க வேண்டும் என்றதும், ஆரம்பத்தில் சிறு யோசனை இருக்கவே செய்தது.
இதற்கு முன் தொலைக்காட்சியில் என் துறை சார்ந்த பல பயிற்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுத்த அனுபவம் இருந்தது. அதுமட்டும் போதுமா என்ற எண்ணமும் கூடவே இருந்தது. அந்த நேரத்தில் ஜோஸ்டார் நிறுவனம் இணைந்ததால் இதைப் படமாக்கும் வேலையைத் தொடங்கினோம்.
படத்தின் கதை என்ன?
‘ஆகம்’ என்றால் ‘வருகை’ என்று அர்த்தம். இன்றைக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம் என்று கூறி ஏமாற்றும் தொகை மட்டும் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கெடுக்க முடியும். அதேபோல இந்தியாவில் உருவாகும் திறமைசாலிகளை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள். அந்தத் திறமைசாலிகள் இங்கே பணியாற்றினால் நம் நாடு நிச்சயம் சூப்பர் பவர் இடத்தைப் பிடிக்குமே.
அதைப் பிரதிபலிக்கும் படம்தான் இது. டெக்னாலஜியாக ‘ப்ரைன் வேவ்’ என்று சொல்லக்கூடிய அறிவியல் சார்ந்த விஷயங்களைப் படத்தில் கையாண்டிருக்கிறோம். இவையெல்லாம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இங்கே வரும். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் எண்ணங்கள் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். அதனால் படத்தை அவருக்குச் சமர்ப்பிக்கவும் செய்திருக்கிறோம். குறிப்பாக, வேலைவாய்ப்பில் இருக்கும் ஊழலை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டும் படம் இது.
எல்லாம் சரி. பயிற்சியே இல்லாமல் இதை எப்படித் திரைமொழிக்கு மாற்ற முடிந்தது?
சினிமா அனுபவமே இல்லை என்று சொல்ல முடியாது. திரைத் துறையைச் சேர்ந்த ஜெயம் ராஜா எனக்கு நண்பர். இடைப்பட்ட காலத்தில் நட்புரீதியாக அவரிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படம் தொடர்பான வேலையின்போது நான்கு மாதங்கள் உடன் இருந்திருக்கிறேன். இதைப் படமாக எடுக்கிறோம் என்றதும் அவரிடம் சென்று யோசனையைச் சொன்னேன்.
கான்செப்ட் நன்றாக இருந்து, திறமையான ஒரு டீம் அமைந்தால் நிச்சயம் நல்ல படம் செய்ய முடியும் என்று ஊக்கம் தந்தார். அதற்கு ஏற்றாற்போல எனக்கு அழகான ஒரு டீம் அமைந்தது. என்னுடன், கோடீஸ்வர ராஜூ, டாக்டர் தீபா ஸ்ரீ ராம், ஆர்.வி.சரண், ஜினேஷ், மனோஜ், விஷால் உள்ளிட்ட திறமையான ஒரு குழு இணைத்தார்கள். ஜெயப்பிரகாஷ், ரியாஷ்கான், நாயகன் இர்பான், நாயகிகள் தீக்ஷிதா, ஜெயஸ்ரீ , கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை அலியோனா ஆகிய நட்சத்திரங்கள் இணைந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவர்களுடன் நானும் விஞ்ஞானி ரோலில் நடித்திருக்கிறேன். ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டுசெல்ல சினிமா இன்றைக்குப் பெரிய வழியாக இருக்கிறது. அதன் வழியே பொழுதுபோக்கோடு, மக்களுக்கான விஷயத்தையும் இந்தக் கதை வழியே சொல்லியிருக்கிறோம்.
படம் எப்போது ரிலீஸ்?
இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு இருக்கிறது. அக்டோபர், நவம்பரில் ரிலீஸ் இருக்கும். அதற்கு முன் ஆடியோ, டிரைலர் ரிலீஸ் இருக்கும். புதியவர்கள் நல்லதை மட்டுமே கொடுப்பார்கள் என்று மக்கள் நம்பி வரவேற்பு தருவது நம் நாட்டில் மிச்சமிருக்கும் நல்ல குணங்களில் ஒன்று. அந்த நம்பிக்கையை ஆகம் காப்பாற்றும்.