இந்து டாக்கீஸ்

தீர்வு தரும் சிக்கல்கள் - ஓபன் யுவர் மைண்ட் (குறும்படம்)

ஜெய்

சினிமாவுக்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு. அது ஒரு வியாபாரமும்கூட. பல தரப்பட்ட ரசனை கொண்ட மக்களுக்காகத் தயாரிக்கப்படுவது. ஆனால் குறும்படங்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை. அவற்றுக்குத் தங்கு தடையில்லாத சுதந்திரம் இருக்கிறது. சினிமாவால் சொல்ல முடியாத சில சமூகப் பிணக்குகளைக் குறும்படத்தில் சொல்ல முடியும். ஆனால் இன்றைக்குக் குறும்படங்கள் அப்படியாக வெளிவரவில்லை. அவை சினிமாவை நோக்கிய முயற்சியாகக் குறுகியிருக்கின்றன. இந்தச் சூழலில் சில முயற்சிகள் அரிதாக நடப்பதுண்டு. அப்படியான ஒன்றுதான் ‘ஓபன் யுவர் மைண்ட்’ (Open Your Mind) என்னும் மலையாளக் குறும்படம்.

கடந்த ஜூலையில் வெளிவந்த இந்தப் படத்தை மலையாள நடிகர் விஷ்ணு ஜி ராகவ் இயக்கியுள்ளார். பாவனா, சாய்குமார், பிந்து பணிக்கர், அனுமோகன் உள்ளிட்ட மலையாளத்தின் முக்கியமான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தக் குறும்படம் மூன்று கதைகளைக் கொண்டது. முதல் கதை ‘பெண்ணு காணல்’. இரண்டாம் கதை ‘லைஃப் ஆஃப் மானு’. மூன்றாம் கதை ‘ஃபோர் சில்ட்ரன்’.

இந்த மூன்று கதைகளின் வழியாக, சமூகப் பழக்கவழக்கங்களுக்குள் சிக்கிக்கொண்ட நம் வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார் விஷ்ணு. முதல் கதையில் பெண் பார்க்கும் சடங்கு நடக்கிறது. மருத்துவப் படிப்பு முடித்த மணப் பெண் சந்தியாவாக பாவனா நடித்துள்ளார். கல்யாணத்துக்குப் பிறகு தான் வேலை பார்க்க விரும்புவதாக மாப்பிள்ளையிடம் தனியாகப் பேசும் வேளையில் சொல்கிறார். ஆனால் அவளது இந்த விருப்பத்தை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் அமெரிக்க மாப்பிள்ளை, “அது தனக்கும் தன் குடும்பத்துக்கும் கவுரவக் குறைச்சல்” என்கிறார். மாப்பிள்ளையின் அம்மாவும் அதையே சொல்கிறார். மேலும் நகை எதுவும் வேண்டாம் எனப் பணமாக 75 லட்சம் கேட்கிறார்.

அடுத்த கதையில் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் வேலை பார்க்கும் மானுவுக்கு (அனு மோகன்) ஐ.டி. வேலை கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்னுடன் வேலை பார்க்கும் தோழியுடன் காரில் வீடும் திரும்பும் வழியில் ஒரு ஆட்டோ குறுக்கே வந்துவிடுகிறது. வேலையின் மீதான தன் எரிச்சலுடன் ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை போடுகிறான். ஐ.டி. ஆட்கள் என்றால் கலாச்சாரம் இல்லாமல் இரவில் பெண்களுடன் சுற்றுபவர்கள் என்ற பொது மனப்பான்மையுடன் ஆட்டோ ஓட்டுநர் பேசுகிறார். அக்கம் பக்கத்து ஆட்கள் சேர்ந்து கலாச்சார போலீஸாக மாறி மானுவைக் குற்றம் சாட்டுகிறார்கள். நிலைமை முற்றி அவனது தோழி அவனை இழுத்து வந்துவிடுகிறார்.

அடுத்த கதையில் மூன்று சிறுவர்கள், ஒரு சிறுமி. அவர்களது வீட்டில் மானபங்கம், வல்லுறவு குறித்து பத்திரி கையிலும் தொலைக்காட்சியிலும் வந்த செய்திகள் பற்றிப் பேசுகிறார்கள். ‘சிறுமிகள் வல்லுறவுக்கு உள்ளாவதற்குக் காரணம் பெண்கள் குட்டைப் பாவடை அணிவதுதான்’ எனத் தன் தந்தை சொன்னதாகச் சொல்கிறான் ஒரு பையன். பதறியபடி அந்தச் சிறுமி ‘என் பாவாடை குட்டையாக இருக்கிறதா?’ எனக் கேட்கிறாள். பன்னிரெண்டு வயதுக்குள்ளான எல்லாச் சிறுமிகளும் வல்லுறவுக்கு உள்ளாவதாகச் சொல்கிறான் மற்றொரு பையன். தங்கள் தோழியை யாராவது வல்லுறவுக்கு ஆளாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும் எப்படி அவளைக் காக்க வேண்டும் என ஆலோசிக்கிறார்கள்.

இந்த மூன்று சம்பவங்களைக் காண்பித்து முதலில் நமக்குள் கேள்விகளை எழுப்புகிறார் இயக்குநர். அதற்கான பதில்களை அவரே இறுதியில் சொல்கிறார். பாவனா துணிச்சலாக அந்த மாப்பிள்ளையை நிராகரிக்கிறார். மானு தனக்குப் பிடித்தபடி ஒளிப்படக் கலைஞன் ஆகிறான். சிறுவர்கள் மூவரும் தோழியைக் காக்க ஸ்பைடன் மேன், சூப்பர் மேன், பேட் மேன் ஆக மாறுவது எனத் தீர்மானிக்கிறார்கள். மற்ற எந்தக் காலகட்டத்தைக் காட்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டின் நெருக்கடிகள் தனித்துவமும் தீவிரமும் மிக்கவை. அதில் இருந்து விடுபட்ட உணர்வை இந்தப் படம் அளிக்கிறது. குறும்படத்தை யுட்யூப் இணையத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT