இந்து டாக்கீஸ்

15 ஆகஸ்ட் 74-ம் சுதந்திர தினம்: திரையில் ஒளிர்ந்த ‘சுதந்திரம்’

பி.ஜி.எஸ்.மணியன்

வருடம் 1942. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை முன்னிறுத்தி நாடெங்கும் சுதந்திரக்கனல் தீவிரமாக எரியத் தொடங்கியிருந்த நேரம். சினிமா என்ற ஆற்றல் வாய்ந்த ஊடகம் மக்களிடம் தன் செல்வாக்கை நிலைநாட்டிவிட்டது. ஆனால், சுதந்திர வேட்கையைத் திரைப்படம் வழியாக உருவாக்குவதில் ஒருசில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டும்தான் ஆர்வம் காட்டினார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தேசாபிமானிகளாகவும் காங்கிரஸ் தொண்டர்களாகவும் இருந்ததுதான். ஆனால்; சினிமாவைவிட ஒருபடி அதிகமாக மக்களின் செல்வாக்கை அன்று பெற்றிருந்தது தமிழ் நாடக மேடை. அதுதான் விடுதலை வேள்வியின் ‘கள’ங்களில் ஒன்றாக இருந்தது. நாடக மேடையைக் கண்டே தமிழ் சினிமா ‘சுதந்திர உணர்ச்சி’க்கு மெல்ல மெல்ல இடம் கொடுக்கத் தொடங்கியது.

கொள்ளையடிக்கும் வெள்ளைக் கொக்கு

தமிழ்நாடக மேடையின் தந்தையரில் ஒருவரான சங்கரதாஸ் சுவாமிகளின் குழுவில் சேர்ந்து, அவரால் பட்டை தீட்டப்பட்டு ராஜபார்ட் நடிகராக உயர்ந்தவர் விஸ்வநாததாஸ். மேடையை சுதந்திர உணர்ச்சியை ஊட்டும் போராட்டக் களம் போல் இவர் பயன்படுத்தியதால் ‘மேடைப் போராளி’யாக விளங்கி, பின்னர் தியாகி விஸ்வநாத தாஸ் ஆனார். மேடையிலேயே உயிர்துறந்த ஒப்பற்ற கலைஞர். எந்தப் புராண, இதிகாச நாடகமென்றாலும் அவற்றில் தேசபக்திப் பாடல்களை நுழைத்துவிடுவார். அப்போதுதான் நாடக மேடைக்கு மின் ஒளி விளக்குகளும் ஒலிவாங்கியும் ஒலிபெருக்கியும் வந்திருந்த நேரம்.

ஒலிபெருக்கியில் நடிகர்களின் குரலையும் பாடலையும் கேட்கக் கட்டுக்கடங்காத கூட்டம். சிவகங்கையில் நடந்த ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் முருகப்பெருமான் வேடத்தில் விஸ்வநாததாஸ் நடித்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வண்ணம், தேசத்தைக் கொள்ளையடிக்கும் வெள்ளை ஆட்சியாளர்களை விமர்சிக்கும் விதமாக, ‘கொக்கு பறக்குதடி பாப்பா... வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா... அது வர்த்தகம் செய்ய வந்த கொக்கு... நமது வாழ்க்கையைக் கெடுக்கவந்த கொக்கு... அக்கரைச் சீமைவிட்டு வந்தே... இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா!’ என்று பாடியவுடன் மக்கள் பலத்த ஆரவாரம் செய்தனர்.

‘வள்ளி திருமணம்’ என்றில்லை, எந்தப் புராண இதிகாச நாடகமாக இருந்தாலும் அதில் ‘வெள்ளைக் கொக்கு’ பாடலை விஸ்வநாததாஸ் பாட, ஊருக்கு ஊர் அவர் பங்கேற்கும் நாடகங்களில் கட்டுக்கடங்காத கூட்டம். மக்கள் இவரிடம் தேசப் பக்திப் பாடல்களையும் கதராடைப் பாடல்களையும் பாடும்படிக் கேட்கத் தொடங்கினர். இவருக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட திரையுலகினர், மக்களைத் திரைக்கு ஈர்க்கும் உத்திகளில் ஒன்றாகவும் தேசபக்திப் பாடல்களைப் படங்களில் இடம்பெறச் செய்தார்கள்.

சீர்திருத்தக் கருவி

பாடவும் நடிக்கவும் தெரிந்திருந்தால்தான் திரையில் வாய்ப்பு என்றிருந்த தொடக்கத்தில், கே.பி.சுந்தராம்பாளை அரவணைத்துக்கொண்டது தமிழ் சினிமா. அவர் கதாநாயகியாக நடித்து 11 பாடல்களைப் பாடியிருந்த ‘மணிமேகலை’ திரைப்படம் 1939-ல் வெளிவந்தது. அதில் ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாபநாசம் சிவனின் பாடலைத் துணிச்சலாகப் பாடி நடித்திருந்தார். அந்தப் பாடல் பரப்பிய அனல் படவுலகில் தேசியப் பாடல்கள் அவசியமான அம்சமாக ஆக்கியது. சமூகச் சீர்திருத்தக் கதைகளைக் கொண்ட படங்களில் கதாபாத்திரங்கள் சுதந்திரம் குறித்துப் பாடத் தொடங்கின. இந்தப் போக்குக்கு தேசாபிமான இயக்குநர் கே.சுப்ரமணியம் எடுத்த பல படங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். அவர் வெளிப்படையாகவே ‘தேச சேவை செய்ய வாரீர்’ என்று தன் படம் வழியாக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் தானே தயாரித்து, இயக்கிய ‘தியாக பூமி’ ஆங்கில அரசால் தடை செய்யப்பட இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டார். அதனால் படம் வெளியாகவிருந்த இரு நாட்களுக்கு முன்னரே சென்னை கெயிட்டி திரையரங்கில் இலவசமாகவே மக்கள் பார்வைக்குப் படத்தை வெளியிட்டார். தடைக்குமுன் படத்தைப் பார்த்துவிடத் திரையரங்கில் மக்கள் கட்டுக்கடங்காமல் கூடியதால், போலீஸ் தடியடி நடித்திக் கூட்டத்தைக் கலைத்தது. இவ்வாறு அவரது படங்கள் சுதந்திர வேள்வியிலும் சமூகச் சீர்த்திருத்தக் களத்திலும் முக்கியக் கருவியாகப் பங்காற்றின.

சுதந்திரத்துக்குப் பின்னர்...

நாடு சுதந்திரம் அடைவதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான ஏவி.எம்மின் படைப்பான ‘நாம் இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று நாடு சுதந்திரம் பெறப்போவதையும் அதை உலகுக்கு அறிவித்தது. அதே படத்தில், ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே’ என்று பெறப்போகும் சுதந்திரத்தை எப்படிக் கொண்டாடுவது என்ற தீர்க்கதரிசனத்துடன் பாரதியார் எழுதிய பல பாடல்களைத் திறம்படக் கையாண்டது. இந்தப் படத்தின் கதாநாயகன் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு அண்ணனாக நடித்தார் பி.ஆர்.பந்துலு. பின்னால் தமிழ் சினிமாவில் ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ எனும் இரண்டு மிகப் பெரிய தேசபக்திப் படங்களை அவர் கொடுத்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேசபக்தியையும் சுதந்திரத்துக்கு நாம் கொடுத்த விலையையும் எடுத்துக்காட்டும் விதமாக, சுதந்திரப்போராட்ட வீரர்கள், தலைவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக எடுத்துக்காட்டிய இந்த இரண்டு படங்களுக்கும் ஈடு இணையே கிடையாது. இந்த இரு படங்களையும் பந்துலு இயக்கக் காரணமாக இருந்தவர்கள் ‘தேசியச் செல்வர்’ சின்ன அண்ணாமலையும் ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சியும்.

கட்டபொம்மனும் கப்பலோட்டிய தமிழனும்

பி.ஆர்.பந்துலு முதன் முதலில் இயக்குநராக அறிமுகமாக நல்ல கதை தேடியபோது, தனது ‘தங்கமலை ரகசியம்’ கதையைக் கொடுத்து பந்துலுவின் நெருங்கிய நண்பரானார் சின்ன அண்ணாமலை. அப்போது முதல், பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் படங்களுக்கான கதைகளை முடிவு செய்வதில் சின்ன அண்ணாமலையின் பங்கு முக்கியமானதாக இருந்தது. ‘தங்கமலை ரகசியம்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ‘கப்பலோட்டிய தமிழன்’ படங்களுக்கான விதையை பந்துலுவின் மனத்தில் ஊன்றினார் சின்ன அண்ணாமலை. ஏனென்றால், தமிழரசுக் கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கட்டபொம்மன், வ.உ.சி பற்றி ம.பொ.சி, சின்ன அண்ணாமலை, கு.மா.பா ஆகியோர் மேடைகளில் முழங்கி வந்தார்கள்.

தனது ‘தமிழ்ப் பண்ணை பதிப்பகத்தில் கட்டபொம்மன் சரிதம், வ.உ.சி.வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களையும் வெளியிட்டார் சின்ன அண்ணாமலை. இந்த நேரத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தையும் சிவாஜி கணேசன் அரங்கேற்றினார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகப் புதிய தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. தேசிய விருதுபெற்ற இப்படம், கெய்ரோவில் நடந்த ஆசிய- ஆப்ரிக்கப் படவிழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என மூன்று விருதுகளை அள்ளி வந்தது. ஆனால், அடுத்து வெளிவந்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு சுதந்திரப்போராட்ட வீரர்களைச் சித்தரிக்கும் படங்கள் எதையும் எடுக்கும் தைரியம் தமிழ் சினிமாவில் யாருக்குமே வரவில்லை.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT