இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி!

செய்திப்பிரிவு

விஜய் நடித்து இன்னும் வெளிவராத படம் ‘மாஸ்டர்’. அதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மும்பையில் பிறந்து வளர்ந்த இவரை அறிமுகப்படுத்தியது மலையாள சினிமாதான். தற்போது கன்னடம், இந்தி எனத் தனது சிறகுகளை அகல விரித்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய 27-ம் பிறந்த நாளை மும்பையில் கொண்டாடிய மாளவிகா, விஜயைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் கார்த்திக் நரேன் - தனுஷ் இணையவிருக்கும் அந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசை.

முதல் இரட்டை வேடம்!

முன்னணிக் கதாநாயகர்களுக்கு ‘மாஸ்’ பிம்பத்தை உருவாக்குவதில் இரட்டைவேடப் படங்களுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. இது சிவகார்த்திகேயனுக்கான நேரம். ‘ரஜினி முருகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இரட்டை வேடத்தில் தோன்றுவார் சிவகார்த்திகேயன். தற்போது அட்லியிடம் பணிபுரிந்த இணை இயக்குநர் அசோக் இயக்கத்தில் முதன்முறையாக முழுநீள இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தில் அவர் பாடலாசிரியராகவும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அனிருத் இசையில் ‘செல்லம்மா’ என்ற பாடலை எழுதியிருக்கிறார். லிரிக் வீடியோ பாடலாகக் கடந்த ஜூலை 16-ம் தேதி யூடியூபில் வெளியான அந்தப் பாடலை இதுவரை 1.5 கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள்.

‘ஓ’ போட வைக்கும் பாடல்!

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கியிருக்கும் ரொமாண்டிக் நகைச்சுவைப் படம் ‘ஓ அந்த நாட்கள்’. மும்மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில், 1980-களின் நட்சத்திர நாயகிகளான ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் தோழிகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்‌ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார்.

இப்படத்தின் 80 சதவீதக் காட்சிகளை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாக்கியிருப்பது கூடுதல் சுவாரசியம். படத்தில் இடம்பெறவிருக்கும் ‘மெட்ராஸ் என்ன.. மெல்போர்ன்... என்ன...?’ என்ற கொண்டாட்டப் பாடல், கடந்த மே மாதம் இணையத்தில் வெளியானது. இரைச்சல் இல்லாத இனிய லைவ் இசைக்காக அப்பாடல் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தற்போது ‘இனியொரு தொல்லையும் இல்லை’ என்ற மெலடியை வெளியிட்டிருக்கிறார்கள். பாரதியாரின் பாடலுக்கு இத்தனை நவீனத்தைக் கொடுக்க முடியுமா என வியக்கவைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். பத்மஸ்ரீ சித்ராவும் கார்த்திகா வைத்தியநாதனும் போட்டி போட்டுப் பாடியிருக்கும் இந்தப் பாடல், இரு தலைமுறையின் உணர்வுகளைச் செவி வழியாக நம் இதயத்துக்குக் கடத்துகிறது.

விமர்சனப் போட்டி!

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்துவரும் திரைப்படச் சங்கம் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன். அதனுடன் இணைந்து - இந்தியாவுக்கான தென்கொரியத் தூதரகம் (Consulate of Korea) திரை விமர்சனப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. இதில் பங்குகொள்ள, கொரியப் படங்களை விரும்பிப் பார்க்கும் திரை ஆர்வலராக இருந்தால் போதும். உலக அரங்கில் விருதுகளை வென்ற பல கொரியப் படங்கள், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்படுகின்றன.

அவற்றில் உங்களைப் பெரிதும் கவர்ந்த கொரியப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டும். படத்தின் கதையைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, எந்தக் கலையம்சத்தின் கீழ் உங்களை அது அதிகமாகக் கவர்ந்தது என்பதை 100 வார்த்தைகளுக்கு மிகாமல், ‘நறுக்கென்ற’ விமர்சனமாக iindocine.ciff@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விமர்சனங்களை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். விமர்சனப் போட்டியில் வெல்லும் திரை ஆர்வலருக்கு தூதரகம் நடத்தும் விழாவில் விருது வழங்கப்படும்.

அமைதியான புயல்!

இசையமைப்பாளர்கள் சிலர் இருக்கும் இடம் தெரியாமல் அசத்திக்கொண்டிருப்பார்கள். ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’ தொடங்கிக் கவனிக்கவைத்துவரும் சாம் சி.எஸ். அப்படியொருவர்தான். மாதவன் நடித்துவரும் ‘ராக்கெட்ரி’, அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ரெஜினா கஸாண்ட்ராவின் ‘சூர்ப்பனகை’, விஜய் சேதுபதியின் ‘800’, சசி குமாரின் ‘ராஜவம்சம்’, ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய தமிழ்ப் படங்களுடன், ‘மோச கல்லு’, ரவி தேஜாவின் பெயரிடப்படாத படம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படம் என தெலுங்கிலும் கைநிறையப் படங்களை வைத்திருக்கிறார்.

இவை தவிர, புஷ்கர் காயத்ரி இயக்கி முடித்திருக்கும் இணையத் தொடருக்கும் இசையமைக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டிலுமே பெயர் பெற்றிருக்கும் இவருக்கு, யூடியூபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்புப் பெறும் இசைக் கலைஞர் என்ற கௌரவம் கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT