இந்து டாக்கீஸ்

போர்க்களமாகும் தெலுங்கு சினிமா!

ராமப்பா

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படமான பாகுபலியைத் தந்த தெலுங்கு சினிமா, தனது அடுத்தடுத்த பிரம்மாண்டங்களுக்குத் தயாராகிவிட்டது. ஹாலிவுட்டை நெருங்கும் விதமாக நம்மாலும் உலகப்போரைக் கதையில் கொண்டுவர முடியும் என்று களத்தில் குதித்து அதில் ஒரு படத்தையும் எடுத்து முடித்துவிட்டார்கள்.

நீர்மூழ்கி நாயகன்

பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் நடக்கும் கதையொன்றில் நடிக்க ராணா ஒப்புக்கொண்டுள்ளார். 1971-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது பயன்படுத்தப்பட்டு மர்மமான முறையில் மூழ்கிய பாகிஸ்தானிய நீர்மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஜியில் நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது.

பிஎன்எஸ் காஜி கப்பல் மூழ்குவதற்குக் காரணமான சம்பவங்களைக் கோத்துக் கதையாய் சொன்ன 31 வயது இயக்குநர் சங்கல்ப் ரெட்டியிடம், உடனடியாக ராணா ஓகே சொல்லிவிட்டார். தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் சங்கல்ப் ரெட்டி ஈடுபட்டுள்ளார். சங்கல்ப் எழுதிய ‘ப்ளூ பிஷ்’ கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை இது. இத்திரைப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கவுள்ளது. இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் திரைப்படமென்று விளம்பரம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ராணா இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் வேலை பார்க்கும் கடற்படை அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் கதை பெரும்பாலும் நீர்மூழ்கிக் கப்பலிலேயே நடக்கும். ஐதராபாதில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நீர்மூழ்கிக் கப்பலின் செட் ஒன்றைப் பிரம்மாண்டமாக வடிவமைக்கவுள்ளனர். ராணாவைத் தவிர பிரகாஷ்ராஜும் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

காதலும் போரும்

இரண்டாம் உலகப்போரைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதையான ‘காஞ்சே’-யின் டிரைலர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா, காஞ்சே டிரைலரைப் பார்த்துவிட்டு தெலுங்கு சினிமா முதிர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டியுள்ளார். காஞ்சேயின் நாயகன் வருண் தேஜ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகன். இவர் தமிழில் ‘முகுந்தா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

யதார்த்தமான இயக்குநர் என்று பெயரெடுத்த கிரிஷ் ஜகர்லமுதிதான் இப்படத்தின் இயக்குநர். காஞ்சே என்பதின் அர்த்தம் வேலி. “போரைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதை இது. ஆப்ரிக்க, ஆசிய, ஐரோப்பிய கண்டங்களின் நாடுகளில் நடந்த இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற லட்சக்கணக்கான இந்திய வீரர்களைப் பற்றிய கதை இது. நாடுகளைப் பிரிக்கும் எல்லைகளும் வேலிகளும் காதலையும் பிரிக்கின்றன என்பதே இப்படத்தின் கதை. ஒருவகையில் காதலும் போர்தான்” என்கிறார் கிரிஷ்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய அதே செப்டம்பர் ஒன்றாம் தேதி இப்படத்தின் டிரைலரை வெளியிட்டனர். படம் அக்டோபர் 2-ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் வரும் யுத்தக் காட்சிகளை ஜார்ஜியாவில் படமாக்கியுள்ளனர். அக்காலகட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை அப்படியே பயன்படுத்தியிருக்கின்றனர். நாயகியாகப் புதுமுகம் ப்ரக்யா ஜெய்ஸ்வால் நடிக்கிறார். வருண் இப்படத்தில் இந்தியச் சிப்பாய் துபாதி ஹரிபாபு என்ற கதாபாத்திரத்தில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிடும் வீரனாக வருகிறார்.

SCROLL FOR NEXT