கரோனா ஊரடங்கு தொடங்கும் முன்பே, ஓடிடி தளங்கள் நடுத்தர வர்க்க மக்களிடம் அறிமுகமாகிவிட்டன. மொத்தக் குடும்பத்துக்கும் எனப் பல்வேறு வகையான இணையத் தொடர்களும் பிரத்யேகத் திரைப்படங்களும் அதில் வெளியாகி வருவதே அதற்குக் காரணம். ‘இந்து தமிழ் திசை’ போன்ற முன்னணிப் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் அவற்றுக்கு வெளியாகி வந்த விமர்சனங்கள் ஓடிடி தளங்களை இன்னும் வேகமாகத் தமிழகப் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்த்தன. மேலும், ‘பைபர் நெட்’ இணைய சேவையின் வேகமும் டேட்டா பயன்பாட்டுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் ஓடிடி தளங்களை ஊரடங்கு காலத்தில் முக்கியப் பொழுதுபோக்கு வாய்ப்பாக மாற்றின.
தற்போது ஓடிடி என்பது வீட்டில் இருக்கும் திரையரங்கம் என்ற ‘அந்தஸ்தை’ அடைந்துவிட்டது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டார் எனப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மில்லியன்களில் வருமானம் ஈட்டும்போது, இந்தியாவிலிருந்து தொடங்கப்படும் நிறுவனங்கள் பரந்துபட்ட கவனிப்பைப் பெறவில்லை. இந்நிலையில், தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் புதிய ஓடிடி தளத்துடன் களமிறங்கியுள்ளார். இதற்கான அடித்தளம், வருங்காலத் திட்டம் ஆகியவை தொடர்பாக அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
திடீரென்று ஓடிடி தளம் தொடங்குவதற்கான எண்ணம் எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான பணிகளைத் தொடங்கினேன். ஆனால், வரவேற்பு எப்படியிருக்குமோ என்பதால் ஓடிடி தளங்களைக் கூர்ந்து கவனித்து வந்தேன். கடந்த பிப்ரவரியில் மக்கள் அமேசான் உள்ளிட்ட
தளங்களில் படம் பார்க்கத் தொடங்கியவுடன் இந்தப் பணிகளை முழுவீச்சில் தீவிரப்படுத்தினேன். பணிகள் முழுமையாக முடிந்து, இப்போது ‘ரீகல் டாக்கீஸ்' ஆகக் களமிறங்கிவிட்டோம்.
‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
இந்தியாவிலேயே மிகவும் பழமையான திரையரங்குகளில் ஒன்று ரீகல் சினிமாஸ். அந்தக் காலத்திலேயே பிரம்மாண்டமாக இருக்கும். வாழ்க்கையில் எப்போதாவது திரையரங்கம் தொடங்கினால் இப்படியொரு பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அந்தப் பெயரையே ஓடிடி தளத்துக்கு வைத்து விட்டேன். தியேட்டர் என்ற வார்த்தை இப்போதுதான் பிரபலம். முன்பு அனைவருமே டாக்கீஸ் என்றுதான் சொல்வார்கள். ஆகவே, ரீகல் டாக்கீஸ் எனப் பெயர் வைத்தேன்.
சந்தா முறை இல்லாமல், பணம் கட்டி படம் பார்க்கும் முறையைத் தேர்வு செய்தது ஏன்?
சந்தா முறையில் தயாரிப்பாளர்களுக்கு முறையாகப் பணம் கிடைப்பதில்லை. ஏனென்றால், அதில் தொழில்நுட்பத்துக்கே அதிகமான பணம் செலவாகிறது. பணம் கொடுத்துப் படம் பார்க்கும் முறையில் தயாரிப்பாளருக்குச் சரியான தொகை கிடைக்கும் என்பதுதான் காரணம். சில ஓடிடி தளங்களில் வருமானத்தை பங்கு முறையில் கொடுத்தால், ஒரு படத்தை முழுமையாகப் பார்த்தால் தயாரிப்பாளருக்கு 6 ரூபாய் வரைதான் கிடைக்கும். அந்தப் படங்களை எல்லாம் ஓடிடி தளங்களில் தேடித் தான் பார்க்க வேண்டும். நல்ல செலவு செய்து குறும்படம் எடுத்து யூடியூப் தளத்தில் வெளியிடுகிறார்கள். அதன் மூலம் 10,000 ரூபாய்கூட வருமானம் வருவதில்லை. எனது தளத்தில் வெளியிடும்போது, 20 ரூபாய் செலுத்தி 10,000 பேர் பார்த்தால் 2 லட்ச ரூபாய் வரை கிடைக்கும். இதுவே பெரிய வெற்றிதானே?
ஓடிடி தளத்தில் படங்களுக்கு என்று ஏதேனும் வரையறை வைத்துள்ளீர்களா?
வழக்கமாகத் திரையரங்கில் போய்ப் பார்க்கும் கமர்ஷியல் படங்களை இதில் வெளியிடும் எண்ணமே இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிட்டு, இதற்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். ஏனென்றால், வழக்கமான கமர்ஷியல் படங்களை வெளியிடப் பல்வேறு ஓடிடி தளங்கள் இருக்கின்றன. அதில் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். 30 நிமிடங்களுக்கு மேலான குறும்படங்கள், 1 மணி நேரத்துக்கு மேலான வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் ஆகியவற்றை ரீகல் டாக்கீஸில் காண முடியும்.
கட்டணத்தை எப்படி நிர்ணயம் செய்கிறீர்கள்?
ஓடிடி தளங்களில் தொழில்நுட்பத்துக்கு என்று ஒரு செலவு இருக்கிறது. ஆகையால் குறைந்தபட்சக் கட்டணமாக 20 ரூபாயில் ஒரு படம் பார்க்கலாம். அதே போல் 50 படங்கள் வரை வெளியிட்டுள்ளோம். அதற்கு 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கவுள்ளோம். படத்தைப் பொறுத்துக் கட்டணம் மாறும்.
இதில் பிரத்யேகமாக வெளியாகும் படங்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணமாக இருக்கும். இதில் படங்களை வெளியிட வேண்டுமென்றால் ஒரு குழுவினர் பார்த்து தேர்வு செய்த பின் தான் வெளியிட முடியும். தரம், தேர்வு ஆகியவற்றில் துளியும் சமரசம் கிடையாது. வரும் அனைத்துப் படங்களையும் இதில் வெளியிடும் எண்ணமில்லை.
ஓடிடியிலும் பைரஸி சிக்கல் இருக்கிறதே...
உண்மைதான். எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் பைரஸியைத் தடுக்க முடியாது. பைரஸியில் படம் பார்ப்பது ஒரு குற்றம் அல்ல என்பது பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது. பைரஸியில் படம் பார்ப்பவர்களுக்கும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரமுடியும். அதைத் தயாரிப்பாளர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. பலர் சேர்ந்து கண்ணுக்குத்தெரியாத ஒரு நபரைத் தேடிக்கொண்டே இருக்க முடியாது. காப்பிரைட் சட்டப்படி பைரஸி மூலம் ஒரு படைப்பை நுகர்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 லட்ச ரூபாய் வரை தண்டத்தொகையும் விதிக்கலாம் எனச்சட்டம் சொல்கிறது.
கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பைரஸி நுகர்வாளர்கள் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதற்குப் பின்னர் அங்கே பைரஸி கணிசமாகக் குறைந்ததுள்ளது. வெளிநாடுகளிலும் இதற்கான சட்டம் இருக்கிறது. மக்களுக்கு இப்படியொரு சட்டம் இருக்கிறது என்று தெரியப்படுத்தினாலே பைரஸி தானாகக் குறைந்துவிடும் என நினைக்கிறேன். ஒரு படைப்பின் பின்னுள்ள முதலீட்டையும் உழைப்பையும் மதிக்க வேண்டும் எனும் நேர்மையை விதைத்து வளர்க்க வேண்டும்.
ஓடிடி தளம் தொடங்கியிருப்பதால் உங்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு, மிரட்டல் என ஏதாவது?
இல்லை. சிறிய படங்களைத் தான் தேர்ந்தெடுத்துள்ளோம். திரையரங்க அதிபர்களே சிறிய படங்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவிக்க மாட்டார்கள். ஏனென்றால், பெரிய நடிகர்களின் படங்களைப் பார்க்கத்தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்பது அவர்களது பார்வை. தயாரிப்பாளர்களே ஓடிடியில் படங்களை வெளியிட்டால் மக்கள் எப்படித் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதே அவர்களின் கவலை. ரீகல் டாக்கீஸ் ஒரு புதிய முயற்சி, எல்லாரும் இதன் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள், ரசனைக்கான களமாக இது வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.