இந்து டாக்கீஸ்

நினைவுகளின் சிறகுகள்: ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!- புஷ்பவல்லி

பா.தீனதயாளன்

மூவரும் தயங்கி நின்றார்கள். மிக முக்கியமான காரியத்துக்காக வந்த பரபரப்பு முகங்களில் படர்ந்தது. தேடி வந்த நடிகை அவர்களைவிட கலைத் தொழிலில் இளையவர். ஆனால், புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தவர். மாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். யார் போய் அவரிடம் வந்த விஷயத்தைச் சொல்வது. நீண்ட நேரம் யோசனையில் ஓடியது. லேசான துணிச்சலுடன் காமெடி நடிகை படிகளில் வேகவேகமாக ஏறினார்.

“அம்மா, என்.எஸ்.கேயும், எம்.ஜி.ஆரும், கீழே காத்திருக்காங்க. ரொம்பக் கூச்சப்படறாங்க. நடிகர் சங்கத்துல உங்களை ஒரு மெம்பரா சேர்க்கணுமாம். அவங்க உங்களைப் பார்க்க, கொஞ்சம் நீங்க அனுமதி தர முடியுமா...?”

டி.ஏ. மதுரம் தனக்கே உரிய சினிமா சாமர்த்தியங்களுடன் சொல்ல, சுந்தரப் புன்னகையுடன் சம்மதித்தார். ‘ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி!’ என்று புகழப்பட்ட புஷ்பவல்லி.

புஷ்பவல்லியின் பூர்வீகம் ஆந்திராவில் பண்டாபாடு கிராமம். ராஜமகேந்திரபுரத்தில் இயக்குநர் பி. புல்லையாவுக்குச் சொந்தமானது ‘துர்கா’ சினிமா ஸ்டுடியோ. அங்கு ஷூட்டிங் பார்க்கச் சென்ற பேபி புஷ்பவல்லியை, புல்லையாவின் பங்குதாரருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. ‘சல்மோகனரங்கா’ என்ற சினிமா மூலம் திரைக்கு அறிமுகம் செய்தார்.

புஷ்பவல்லி ஜெமினி ஸ்தாபனத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் பூமிப்பந்து அவரது காலடியில் சுழன்றது.

‘தாசி அபரஞ்சி’, ‘பாலநாகம்மா’, ‘சம்சாரம்’, ‘சக்ரதாரி’ என்று ஜெமினியின் தொடர் வெற்றிச் சித்திரங்களில் புஷ்பவல்லியின் இளமையும் எழிலும் ஆடை அலங்காரங்களும் அற்புதமான நடிப்பும் வசீகர நடனங்களும் சினிமா வணிகர்களுடைய கஜானாக்களின் எண்ணிக்கையைக் கூட்டின. இவையெல்லாம், எஸ்.எஸ். வாசனின் இதயத்திலும் புஷ்பவல்லிக்கு நிரந்தரமாக ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தன.

விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரம். ‘சம்சாரம்’ திரைப்படம் வெளியானது. வாக்காளர் பட்டியலை வாங்கி அனைத்து இல்லத்தரசிகளுக்கும், அதன் கதாநாயகி புஷ்பவல்லியே மடல் எழுதுவது போல் வாசன் செய்த புதுமை விளம்பரம், புஷ்பவல்லியின் அபரிதமான புகழை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. உடனடியாக ‘சம்சாரம்’ இந்தியும் பேசியது.

ஒட்டுமொத்த இந்தியாவும் புஷ்பவல்லியோடு சோகக் காட்சிகளில் சேர்ந்து அழுதது.

“‘தாசி அபரஞ்சி’யில் நடித்தபோது கொத்தமங்கலம் சுப்பு மூலம் தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். வீட்டிலிருந்து தயிர்வடைகளைச் செய்து எடுத்து வந்து சுப்புவுக்குக் கொடுத்து அவரைக் குஷிப்படுத்துவேன்.

ஆரம்பத்தில் ஜெமினி எனக்கு மாதாமாதம் வழங்கிய ஊதியம் இரண்டாயிரம் ரூபாய். வாசன் பெயருக்குத்தான் ஒப்பந்தம் போட்டார். ‘பாலநாகம்மா’வில் என் நடிப்பைப் பார்த்து, சகல சலுகைகளும் எனக்கு நாளடைவில் கிடைத்தன. நிறையவே பணம் கொடுத்து என் நடிப்பார்வத்தை வாசன் வளர்த்துவிட்டார். ஜெமினியில் நான் நடித்த கடைசி படம் ‘மூன்று பிள்ளைகள்” - புஷ்பவல்லி.

பி. பானுமதிக்கு 24 மணி நேரமும் புஷ்பவல்லியின் மலர்ந்த முகமே மனத்தில் நின்றது. தன் பெயரையும் கனகவல்லி என்று வைத்துக்கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் அனுமதி தரவில்லை.

‘வரவிக்ரயம்’ தெலுங்கு படத்தில் தன் அபிமான நடிகை புஷ்பவல்லியோடு பி. பானுமதி, சேர்ந்து நடித்து ஜென்ம சாபல்யம் பெற்றார். ‘வரவிக்ரயம்’ பிரமாதமாக ஓடியது. அமோக வசூல்.

பானுமதி மட்டுமல்ல. உலக நாட்டியப் பேரொளியாகப் பிரபஞ்சமெங்கும் வலம்வந்த பத்மினியும் புஷ்பவல்லியின் தீராக் காதலி!

ஜெமினியில் ‘கல்பனா’ என்ற நாட்டியச் சித்திரம் உருவான நேரம். அதில் நடிக்கச் சென்ற பத்மினியின் அனுபவம்.

“புஷ்பவல்லி பெரிய கார் ஒன்றில் வருவார். அக்கா லலிதாவையும் என்னையும் ஜோடியாகப் பார்ப்பதில் புஷ்பவல்லிக்கு ரொம்ப ஆசை. ‘நீங்கள் இரட்டைக் குழந்தை மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொல்லி, எங்களைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அருகில் அமர்த்திப் பேசிக்கொண்டிருப்பார். ஸ்வீட் கிடைக்கும்.”

காண்பவர்கள் அனைவரையும் கவர்ச்சியால் கட்டிப் போட்டவர் புஷ்பவல்லி. மிகச் சாதாரண நிலையில், பணியாற்றிய ஓர் இளைஞரை விரும்பிச் சரண் அடைந்தார்.

“ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது. ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை. மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் ஒரு தடையில்லை. அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள்.

பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பானு ரேகா பிறந்தாள். காலப்போக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டிவந்ததால் பிரிந்தோம்.

எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்துப் பிரச்சினையும் எழவில்லை.” - ஜெமினி கணேசன்.

நாகையாவும் புஷ்பவல்லியும் இணைந்து நடித்த அருமையான பக்திச் சித்திரம் ‘சக்ரதாரி’. அதில் ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம். ஜெமினிகணேசனும் புஷ்பவல்லியும் இடம் பெற்ற இன்னொரு படம் ‘மூன்று பிள்ளைகள்’.

புஷ்பவல்லியின் முதல் கணவர் ரங்காச்சாரி. அட்வகேட். டி.ஆர். ராஜகுமாரிக்கு முன்பு ‘சந்திரலேகா’வில் நடிக்கும் வாய்ப்பு புஷ்பவல்லியைத் தேடி வந்தது. வாசன் எத்தனை சமாதானம் சொல்லியும் ரங்காச்சாரி கேட்கவே இல்லை. சர்க்கஸ் காட்சிகளில் புஷ்பவல்லிக்குத் தைக்கப்பட்ட ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

புஷ்பவல்லியை அம்மா வேடங்களில் அதிகம் பார்க்க முடியாமல் போனது. ‘சம்பூர்ண ராமாயாணம்’ படத்தில் (ராமர்-என்.டி. ராமாராவ்) கவுசல்யாவாகக் காணப்பட்டார். மற்றும் சிவாஜியின் அம்மாவாக ஓரிரு படங்களில் தோன்றினார். ‘மலேயா மாமியார்’ என்ற பெயரில் சொந்தப் படம் தயாரித்தார் புஷ்பவல்லி. லட்சக்கணக்கில் நஷ்டம். கடனை அடைப்பதற்காக மகள் ரேகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தும் கட்டாயம்.

தன் மகளுக்காக வாய்ப்பு கேட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் சென்றார் புஷ்பவல்லி. வியட்நாம் வீடு படத்தில் ரேகா நடித்துச் சில காட்சிகளும் படமாயின. “பெரும் புகழ் மிக்க ஸ்டாரான நீங்கள் உங்கள் மகளுக்காக, சான்ஸ் கேட்கும்போது அதை நிறைவேற்றுவது எனது கடமை” என்று புஷ்பவல்லிக்கு வாக்குறுதி அளித்தார் எம்.ஜி.ஆர்.

“கேட்பதற்கு இதமாகப் பேசும் எம்.ஜி.ஆர். இன்றுவரை என் மகளுக்கு சான்ஸ் தரவில்லை” என்று புஷ்பவல்லி புலம்பிய நேரம் இந்தியில் அழைத்தார்கள்.

ரேகா வடக்கில் வாகை சூடியது 1971-ல். ரேகா அகில இந்திய நட்சத்திரமாகப் புகழ் பெற்ற பின்னரே, அவர் தன்னுடைய கலை வாரிசு என ஜெமினி கணேசன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

படங்கள்:ஞானம்

SCROLL FOR NEXT