இந்து டாக்கீஸ்

முன்னோட்டம்: விரைவில் குடும்பப் படம்!

செய்திப்பிரிவு

முத்து

பெண் மையக் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களுக்கு இப்போது தனி மவுசு. ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பின், பெண் மையப் படமாக உருவாகியிருக்கும் ‘பெண்குயின்' படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்திசுரேஷ். அதில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக ரிதம் என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ‘எந்தவொரு சமூகக் கருத்தும் இல்லாமல், முழுவதும் த்ரில்லர் பாணியிலான இந்தக் கதை தனக்கு மிகவும் புதியது’ என்று காணொலிச் செயலி வழியாக மனம்விட்டு உரையாடினார். கீர்த்தியின் பேச்சில் பல திரைப்படங்களில் நடித்த அனுபவம் வெளிப்பட்டது.

கைபேசியில் ஒரு எண்!

“காணாமல் போன தன் மகன் அஜய்யைத் தேடிக் காட்டுக்குள் பயணிக்கும் ஒரு அம்மாவின் கதை இது. இதில் எனக்கு மகனாக அஜய் என்கிற குட்டிப் பையன் நடித்திருக்கிறான். அவனோடு ரொம்பவே ஒன்றிவிட்டேன்” எனும் கீர்த்தி, அவனது தொலைபேசி எண்ணைக்கூட, தனது ஸ்மார்ட் போனில் ‘மகன் அஜய்' என்றுதான் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறிப் பாசம் இழையோடச் சிரிக்கிறார். படப்பிடிப்புக்குச் செல்லும்முன், தன் அம்மாவிடம் ‘கர்ப்பமாக இருக்கும் தாய் எப்படி நடப்பார், அமர்வார், படுத்திருப்பார்’ என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு, அதை அம்மா முன்னிலையில் செய்துகாட்டி, அவர் அங்கீகரித்த பிறகே படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார்.

அக்காவின் இயக்கம்

‘நடிகையர் திலகம்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ், ஏன் தற்போது குறைவான படங்களில் மட்டுமே நடிக்கிறார் என்றபோது, “தேசிய விருது பற்றியெல்லாம் நான் யோசித்ததே இல்லை. இயக்குநர் என்ன நினைத்துக் கதையை எழுதினாரோ அதற்குத் துணை நிற்கவேண்டும் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். அந்தப் படத்துக்குப் பின் 20 கதைகள் கேட்டேன். ‘பெண்குயின்’ பிடித்துப்போனது. பெண் மையப்படங்கள், கமர்ஷியல் படங்கள் என இரண்டிலுமே நான் இருக்க நினைக்கிறேன். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க இருக்கிறேன். அது, ‘கீதகோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராமின் படம்” என்றார்.

“எப்போதுமே ஒரு கதாபாத்திரத்திலிருந்து அடுத்தக் கதாபாத்திரத்துக்கு எளிதாகச் சென்றுவிடுவேன். ‘சண்டக்கோழி 2’, ‘அண்ணாத்த’ மாதிரியான கமர்ஷியல் படங்களில் நடிப்பது ஜாலியாக இருக்கும். ஆனால், ‘பெண்குயின்’ கதாபாத்திரத்திலிருந்து அவ்வளவு எளிதாக என்னால் வெளியேற முடியவில்லை” எனக் கலவர உணர்வை வெளிக்காட்டினார். கீர்த்தி சுரேஷ் மற்றொரு முக்கிய தகவலையும் பகிர்ந்தார். ஊரடங்கில் கீர்த்தியின் அக்கா எழுதிய திரைக்கதையை அவரே இயக்க, அப்பா தயாரிக்க, அம்மாவும், பாட்டியும் கதாபாத்திரங்களாகத் தன்னுடன் இணையும் குடும்பப் படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்’ என்றார்.

SCROLL FOR NEXT