இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: அனுஷ்காவின் தத்துவப் ‘பார்வை’

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் குறும்படம் நடித்து, ஆடி, பாடி, சமைத்து மகிழ்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள் தற்போது தத்துவப் பதிவுகளை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் தன்னைப் பின்தொடரும் 2 கோடி ரசிகர்களுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்திருந்தார் அனுஷ்கா. அப்போது வெளியிட்டிருக்கும் தனது பதிவில், “நமக்குத் தெரிந்த ஒரு சூழ்நிலையை மட்டுமே நம்மால் கையாள முடியும். நமக்குப் பாதிப்பு என்று வரும்போது ஒவ்வொருவரும் உள்ளுக்குள் உடைந்துவிடுவோம்.

அனைவரிடமும் கனிவாக நடந்துகொள்வோம். மற்றவர்களைப் புரிந்துகொள்வோம். இன்னும் இரக்கத்துடன், இன்னும் அன்பாக இருக்கக் கற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் மனிதர்கள். நம்மால் அனைத்தையும் மாற்ற முடியாமல் போகலாம். ஆனால், நாம் எடுத்து வைக்கும் ஒரு அடி நகர்வு கூட மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றங்கள் மெதுவாக நடக்கும். அதுவரை பாதுகாப்பாக, பத்திரமாகப் புன்னகையுடன் இருப்போம். ஏனென்றால் நாம் அனைவரும் மனிதர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வர்றார்… ‘கொரோனா குமார்!

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்தக் கூட்டணி கடந்த 2018-ல் ‘ஜூங்கா’ படத்திலும் இணைந்தது. தற்போது மூன்றாம் முறையாக ‘கொரோனா குமார்’ படத்துக்காக இணைந்திருக்கிறது. கரோனா ஊரடங்கில் , துன்பத்துக்கு மத்தியிலும் மனம்விட்டுச் சிரிக்கும் விதமாக நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து முழுநீள நகைச்சுவைப் படமாக இதைத் தரப்போவதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் கோகுல். “ ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உள்ள முக்கியக் கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயத்தைச் செய்ய முடிவெடுக்கும்போது, ஊரடங்கை அறிவித்து விடுகிறார்கள். அதன்பின் நடக்கும் சுவாரசியங்களும் ரகளையும் தான் கதை” என்கிறார் கோகுல்.

உருப்படியான ‘வேலை’!

ஆந்திரத் திரையுலகில் விஜய்தேவரகொண்டாவின் சளைக்காத சமூகப் பணிகளைப் பார்த்து ‘100’ கோடி வசூல் கிளப் நடிகர்கள் வியந்து போய் இருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த 58,800 ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 1.7 கோடி ரூபாயில், அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார். இதற்காகத் தன்னுடன் இணைய விரும்பிய 5, 500 ரசிகர்களைத் தன்னார்வத் தொண்டர்களாக்கிக் களத்தில் இறக்கியிருக்கிறார்.

இதைவிடவும் இவர் செய்திருக்கும் மற்றோர் உருப்படியான ‘வேலை’யை ஆந்திரா புகழ்ந்துகொண்டிருக்கிறது. தனது ‘தேவரகொண்டா அறக்கட்டளை’யின் ஒரு பிரிவாக ‘முதல் வேலைத் திட்டம்’ (First Job Program) என்ற செயல் திட்டத்தின் மூலம், எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கண்டு பிடித்து அங்கெல்லாம் தனது அறக்கட்டளையில் பதிவுசெய்து கொண்ட இளைஞர்களுக்கு வேலை பெற்றுத் தரத் தனது செல்வாக்கைப் பயன்படுகிறாராம். இதற்காகச் சிபாரிசு மின்னஞ்சல், கடிதம் நேரடியாகத் தொலை பேசுவது எனக் கலக்கிக்கொண்டிருக்கிறாராம் விஜய்தேவரகொண்டா.

இதுதான் இப்போ ‘டிரெண்ட்’

குறும்படம் வழியாகத் திரையுலகில் நுழைவது பழைய டிரெண்டாகிவிட்டது. தற்போது, யூடியூபில் பிரபலமாகிய பின் சினிமா முயற்சியில் இறங்குவதே புதிய போக்கு. இந்த வரிசையில் ‘பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்’ சார்பாக யூடுயூப் பிரபலங்கள் கோபி - சுதாகர் இணைந்து நடித்துவரும் படம் ‘ஹே மணி கம் டுடே.. கோ டுமாரோயா’. அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.கே இயக்கும் இந்தப் படத்தை முழுவதும் கிரவுட் ஃபண்டிங் முறையில் வெற்றிகரமாகத் தயாரித்து முடித்திருக்கிறார்கள். கோபி - சுதாகர் ஆகிய இருவருடன் ராதாரவி, முனிஸ்காந்த், எம்.எஸ்.பாஸ்கர் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்தப்படம் முழு நீள நகைச்சுவை த்ரில்லர் படமாகத் தயாராகி வருகிறதாம்.

SCROLL FOR NEXT