இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: சமந்தாவின் பத்து மில்லியன்!

செய்திப்பிரிவு

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை பத்துமில்லியனை (ஒரு கோடி) தொட்டது. உதவும் மனப்பான்மை கொண்ட சமந்தா, இதை வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறார். “ஆஹா, 10 மில்லியன்..! அழகான நடிகர் நடாலி போர்ட்மேன் செய்ததைப் போல, நானும், எனது பெரிய 10 மில்லியன் குடும்பத்தைக் கௌரவம் செய்யும்விதமாக அற்புதமான 10 தன்னார்வ அமைப்புகளுக்கு நன்கொடை அளித்துள்ளேன். அனைவருக்கு என் அன்பு” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஆன்லைன் அப்ரூவல்’

‘மாபியா: சேப்டர் 1’ படத்துக்குப் பிறகு ‘இந்தியன் 2’ உட்பட அரைடஜன் படங்களில் நடித்துவந்தார் ப்ரியா பவானி சங்கர். அதிர்ஷ்டம் அவருக்கு ஆன்லைன் வழியாகவும் வந்து கதவு தட்டுகிறது. 2018-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்க மறு' படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் வீடியோ காலில் வந்து சொன்ன கதை பிடித்துப் போய்விடக் கதாநாயகன் யார் என்று கேட்காமல் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். ‘விஷால்தான் ஹீரோ, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்’ என்று இயக்குநர் சொன்னதும் ஆடிப்போய்விட்டாராம் ப்ரியா. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

கௌதம் மேனனின் கையில் கமல்

‘விண்ணைத் தாண்டி 2’ படத்தில் இடம்பெறுவது போன்ற ஒரு காட்சியைக் குறும்படமாக வெளியிட்டு ரசிகர்களைக் கலங்கடித்தார் கௌதம் மேனன். தற்போது அவரது இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க', ‘துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களை முடிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றுகூறும் கௌதம் மேனன், அடுத்து கமல், சூர்யா இருவருடனும் மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு கைவசமாகியிருப்பதாகவும் அவர்கள் இருவருக்குமான திரைக்கதைகளை எழுதிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இசை, சமையல், கோணங்கி!

தொடர் படப்பிடிப்பு காரணமாகத் தனது இசைத் திறமையைப் பட்டை தீட்டிக்கொள்ள முடியாமல் இருந்த ஸ்ருதிஹாசனுக்கு கரோனா வீடடங்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. பியோனா இசைத்துக்கொண்டே பாடுவது, விதம்விதமாகச் சமையல் செய்து அந்த வீடியோவை ரசிகர்களிடம் பகிர்வது என்றிருக்கிறார். இந்தியச் சமையல் - ஐரோப்பியச் சமையல் இரண்டையும் ஸ்ருதிஹாசன் ‘ஃப்யூஷன்’ செய்வதை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்த இரண்டுடன் சமீப நாட்களாக கோணங்கி சேஷ்டைகள் செய்து அவற்றின் ஒளிப்படங்களையும் வெளியிட்டு லைக்குகளை அள்ளுகிறார்.

அலறிய ஆர்யா!

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி, விமர்சனம், வசூல் இரண்டிலுமே அசரவைத்த ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாளப் படத்தைத் தமிழில் மறு ஆக்கம் செய்து தயாரிக்கிறார் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். இதில் ப்ருத்விராஜ் ஏற்றிருந்த கோஷி என்ற முன்னாள் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மலைவாழ் பழங்குடி இனத்திலிருந்து படித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன அய்யப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேசியிருக்கிறார்கள். அவரோ, அலறியடித்து மறுத்திருக்கிறார். தற்போது அய்யப்பன் கதாபாத்திரத்துக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT