முன்னாள் காதலர்களான ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனும் இம்தியாஸ் அலியின் ‘தமாஷா’படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில், ரன்பீர், தீபிகா இருவருமே உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கின்றனர்.
“இம்தியாஸ் அலியுடன் என்னுடைய இரண்டாவது படம் இது. தீபிகாவுடன் என் மூன்றாவது படம். எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அதுதான் எங்களை மகிழ்ச்சியடையவும், உணர்ச்சிவசப்படவும் வைத்துவிட்டது ” என்று விளக்கமளித்திருக்கிறார் ரன்பீர்.
மூவரும் இணைந்தால்
அக்ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகும் ‘பிரதர்ஸ்' படத்தைத் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தனித்தனியே மறுஆக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். மூன்று கதாநாயகர்கள் நடிக்க வேண்டிய இந்தப் படத்தின் தமிழ் மறுஆக்கத்தில் விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்தால் சரியாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டதால் அவர்களோடு முதல்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறாராம் தயாரிப்பாளர். அதேபோலத் தெலுங்கில் பிரபாஸ், ராம்சரண், ராணா ஆகியோர் சரியான தெரிவு என்ற பரிந்துரையை ஏற்று அவர்களிடமும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். நடிகர்களுக்குள் ஈகோ இல்லையென்றால் இந்த இரண்டு கூட்டணியுமே சாத்தியமாகலாம்.
சல்மானின் பரிந்துரை
‘கட்டி பட்டி’ படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கங்கனா ராணாவத்தான் பொருத்தமானவர் என்று இயக்குநர் நிகில் அத்வானியிடம் சொல்லியிருக்கிறார் சல்மான் கான். அத்துடன், கங்கனாவிடமும் இந்தப் படத்தில் நடிக்கச் சொல்லி பரிந்துரைத்திருக்கிறார் சல்மான்.
இயக்குநர் நிகில் அத்வானியின் ‘சலாம்-ஏ-இஷ்க்’ படத்தில் சல்மான் கான் நடித்திருந்தார். தற்போது ‘கட்டி பட்டி. “சல்மானிடம் ‘கட்டி பட்டி’ படத்தின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். கதையைக் கேட்டுமுடித்த சில நிமிடங்களிலேயே இந்தப் படத்தில் நடிப்பதற்கு கங்கனாதான் பொருத்தமாக இருப்பார் என்று சல்மான் சொல்லி விட்டார். அத்துடன், நியூயார்க்கில் இருந்த கங்கனாவிடம் அன்றிரவே ‘பாயல்’என்ற இந்தப் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரம் உனக்காகவே எழுதப்பட்டிருக்கிறது’ என்றும் தெரிவித்தார். கங்கனா ஊரில் இருந்து வந்தவுடனே படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டோம்” என்று சொல்கிறார் இயக்குநர் நிகில் அத்வானி. ‘கட்டி பட்டி’ வரும் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.