‘‘இந்தப் படத்துல நாயகனுக்குப் பெயரே கிடையாது. இறுதிக் காட்சியில் விக்ரமிடம் ‘உன்னுடைய பெயர் என்ன?’ என்று சமந்தா கேட்கும்போது அவரது காதில் பெயரை சொல்லுவார். ‘‘ச்சீ… இதுவா உன் பெயர்’ என்று குறும்பு கொப்பளிக்கும் செல்லக் கோபத்தோடு சமந்தா அவரைத் துரத்துவார்’’ காட்சிகளைக் கண்முன் விரித்தபடி பேசத் தொடங்கினார் விஜய் மில்டன்.
‘10 எண்றதுக்குள்ள' படத்தின் கதைக்களம் என்ன?
பத்து விநாடிகள் என்பது நமக்கு வேண்டுமானால் சின்ன நேரம் மாதிரி தெரியும். ஒரு டிரைவருக்கோ இந்தப் பத்து விநாடிகள் பெரிய நேரம். நெடுஞ்சாலையில் வண்டி ஒட்டும்போது கொஞ்ச தூரத்தில் ஒரு மாடு குறுக்கே வருவது போலத் தெரியும். ஆனால், சில விநாடிகளில் நாம் அந்த மாட்டின் பக்கத்தில் சென்றுவிடுவோம். பிரேக் பிடித்தால் வண்டி எவ்வளவு தூரத்தில் நிற்கும், அப்படி நிற்கவில்லை என்றால் இடது பக்கம் திருப்பலாமா அல்லது வலது பக்கம் திருப்பலாமா என்று பல கணக்குகள் டிரைவரின் மனதுக்குள் ஒடிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு டிரைவர் வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.
சென்னையிலிருந்து உத்தராகண்ட் வரை கதை நடக்கிறது. இந்த வழியில் இருக்கும் அழகான இடங்கள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
படப்பிடிப்புத் தளத்தில் சமந்தாவை அடித்தீர்களாமே. உண்மையா?
அய்யோ… சமந்தாவை அடிக்க எல்லாம் இல்லை. டூப் இல்லாமல் வெள்ளைக் குதிரையில் அசத்தலாக சவாரி செய்தார், ஸ்பீடாக கார் ஒட்டினார் இப்படி நிறைய சாகசங்களை இப்படத்தில் சமந்தா பண்ணியிருக்காங்க.
விக்ரம் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு விக்ரமுடன் பணியாற்றுவது கஷ்டம் என்று அனைவரும் சொன்னார்கள். சண்டை வரும் என்றார்கள். அப்போது நானே விக்ரமிடம் சென்று “இதுவரை புதிய நபர்களோடே பணியாற்றியிருக்கிறேன். எனவே, படப்பிடிப்புத் தளத்தில் ஏதாவது தப்பாகப் பேசினால் கோபப்படாதீர்கள்” என்றேன். “நான் ஏன் கோபப்பட போகிறேன்? போய் உன் வேலையைப் பார்” என்று நான் கேட்டதுக்குத்தான் கோபப்பட்டார். என் படத்துக்கு என்ன தேவையோ அப்படி விளையாடியிருக்கிறார். ரொம்ப எளிமையான, ஜாலியான மனிதர். ‘ஐ' படத்துக்காக உடம்பை ரொம்ப வருத்திக்கொண்டார். என் கதைக்காக மறுபடியும் உடம்பை அழகாக்கிக்கொள்ள மெனக்கெட்டார். சமந்தாவை விட இளமையாக இருக்கிறார் விக்ரம் என்று படப்பிடிப்பில் கிண்டல் அடிப்பார்கள்.
இந்தப் படத்தில் 9 நிமிடங்களுக்கு ஒரு பாடல் இருக்கிறதே?
நான் முன்பு இயக்கிய ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு பாடல் பண்ணினேன். அதே போலதான் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் 9 நிமிடங்களுக்கு ‘கானா கானா தெலுங்கானா' என்று ஒரு பாடல் பண்ணியிருக்கிறேன். விக்ரம், சார்மி, சமந்தா எல்லாருமே அப்பாடலில் வருகிறார்கள்.
‘கோலி சோடா' படத்தைக் குறுகிய காலத்தில் முடித்தீர்கள். ‘10 எண்றதுக்குள்ள' படத்துக்கு ஏன் கால தாமதம்?
இப்படத்தில் விக்ரம் இருக்கும் எல்லாம் காட்சிகளிலும் சமந்தா இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா ரொம்ப பிஸி. என் முந்தைய படத்தை விட இப்படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அனைவருடைய தேதிகளையும் வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். ஒரு வருடமாகத் தயாரிப்பில் இருந்தாலும், 95 நாட்கள்தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இடைவேளைக்குப் பின்பு படம் முழுக்கவும் பயணமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு இடத்தில் நடக்கும். படமாகப் பார்க்கும்போது இந்தக் கதைக்கு இந்தக் கால தாமதம் தேவைதான் என்று நீங்களே சொல்வீர்கள்.
உங்களுக்கும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் படத்தின் பொருட்செலவில் பிரச்சினை என்று தகவல் வருகிறதே...
உண்மையைச் சொன்னால் நான் முருகதாஸை ஐந்து முறை பார்த்திருப்பேன். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்களில் ஒளிப்பதிவாளருக்கு வேறு ஏதாவது வேலை இருந்தால் என்னைதான் அழைப்பார். எங்களுக்குள் எந்த ஒரு சண்டையும் கிடையாது. அந்தச் செய்திகளை நானும் பார்த்துவிட்டு முருகதாஸுக்கு ஃபோன் பண்ணி பேசினேன். அதெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள், நீங்கள் பேசாமல் வேலையைப் பாருங்கள் என்று சிரித்தார்.
இயக்குநராகிவிட்டீர்கள். இனிமேல் இயக்கம் மட்டும்தானா?
அப்படி எதையும் நான் திட்டமிடவே இல்லை. பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு பண்றேன். ‘10 எண்றதுக்குள்ள' வரவேற்பைப் பொறுத்து மீண்டும் விக்ரம் சாரோடு ஒரு படம் பண்ணலாம் என்று பேசிக்கொண்டிருக்கோம்.
‘கோலி சோடா' இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராக இருக்கிறது. அந்தப் படத்தில் நடித்தவர்கள் கல்லூரிக்குப் போவது போல கதைக்களம் அமைத்திருக்கிறேன். அந்தப் பசங்க எல்லாம் இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். வளர்ந்தவுடன் நானே தயாரித்து இயக்கி ‘கோலி சோடா - 2' பண்ணுவேன்.