இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: பசியைக் கிளறும் காட்சிகள்

செய்திப்பிரிவு

திரையுலக நட்சத்திரங்களில் பலர் விழிப்புணர்வுக்குச் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சிலர் வீட்டில் சமைப்பதைக் காணொலியாகவும் படங்களாகவும் பகிர்ந்துவருகிறார்கள். இதையே வீட்டிலிருக்கும் ரசிகர்களும் பின்பற்ற, அதையொட்டி ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைப் பதிந்திருக்கிறார் குஷ்பு.

‘நட்சத்திரங்கள் என்றில்லாமல் பல தரப்பினரும் தாங்கள் சமைத்ததாகக் கவர்ச்சிகரமான உணவின் ஒளிப்படங்களைப் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், நம் வீட்டில் உணவு சமைக்கப்படுகிறது. இந்தக் கொடுமையான சூழலில் ஒரு வேளை உணவுக்குப் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இந்த நேரத்தில் நினைப்போம். சாப்பிடுங்கள். ஆனால், அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்’ என்று அதில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நூறு ரூபாய்க்கு ஒரு பாடல்!

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த எளியவர்களுக்கு உதவும் நோக்குடன் மார்ச் 22-ம் தேதி முதல் தனது முகநூல் பக்கம் வழியே நன்கொடை திரட்டி வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தான் பாடிய 40 ஆயிரத்துக்கும் அதிகமான பன்மொழிப் பாடல்களிலிருந்து எந்தப் பாடலை வேண்டுமானாலும் துருவி எடுத்து ‘நேயர் விருப்பம்’ வேண்டுகோளை முன்வைக்கலாம்.

ரசிகர் குறிப்பிடும் ஒரு பாடலுக்கு ரூ. 100/-ஐ நன்கொடையாகச் செலுத்தினால் போதும் என்று வேண்டுகோள் வைக்க. வந்து குவிகின்றன நேயர் விருப்பப் பாடல்கள். எஸ்.பி.பியும் சளைக்காமல் ரசிகர்களுக்காகப் பாடிப் பாடி காணொலிகளை பதிவேற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் முன்னால் நின்று பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட செயல் வீரர்களுக்கு நன்றி தெரிவித்து எஸ்.பி.பி.யும் வைரமுத்துவும் இணைந்து ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

தெருத் தெருவாக...

‘சேவ் சக்தி' என்ற தனது அறக்கட்டளையின் மூலம் ‘குரலற்றவர்களின் குரலாக’ மாறியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். கவனிப்பார் யாருமின்றி தெருவில் திரியும் நாய்கள், பூனைகள், அநாமதேயமாகத் திரியும் ஆடு, மாடுகளைத் தேடி தெருத்தெருவாகச் சென்று அவற்றுக்குத் தன் உதவியாளர்கள் துணையுடன் உணவளித்துவருகிறார் வரலட்சுமி. உணவளிக்கும்போதே நாய்க் குட்டிகளை அவர் தூக்கிக் கொஞ்சுவதும் மாடுகளின் கழுத்தை வருடிக்கொடுப்பதுமாகக் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

முடிவெடுத்த தயாரிப்பாளர்கள்!

ஊரடங்கு அறிவிப்புக்கு முந்தைய வாரத்தில் வெளியாகி, வெற்றிகரமாக முதல் வாரத்தைக் கடந்திருந்த படங்களின் தயாரிப்பாளர்கள் துணிவாக முடிவெடுத்துவிட்டார்கள். அதன் விளைவாக, பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ‘தாராள பிரபு’, ‘ஓ மை கடவுளே’ போன்ற படங்களை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். திரையரங்குகளுக்கு மக்கள் வந்துசேர எப்படியும் டிசம்பர்வரை ஆகிவிடலாம் என்று பல தரப்பிலிருந்தும் அறிவுறுத்தப்படுவதால் இந்த முடிவு எனத் தெரிகிறது.

கமலுடன் கைகோத்த ஜிப்ரான்

ஊரடங்கால் மக்கள் மனச்சோர்வு அடையாமல் இருக்க, அவர்களுக்கு நம்பிக்கை, நேர்மறை சிந்தனை, அன்பு ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் ‘அறிவும் அன்பும்' என்று ஒரு பாடலை கமல்ஹாசன் எழுத, அதற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அனிருத், யுவன்ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீபிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெய, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ராம், முகென் ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். மகேஷ் நாராயணனின் படத்தொகுப்பில் காணொலியாகவும் வெளியாகியிருக்கும். இப்பாடலை திங்க் மியூசிக் தயாரித்திருக்கிறது.

SCROLL FOR NEXT