கரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் அளிப்பதாகத் தனது ட்விட்டர் மூலம் அறிவித்தார். கணவரின் அறிவிப்பைக் குறிப்பிட்டு அவருடைய மனைவியும் முன்னாள் கதாநாயகியுமான ட்விங்கிள் கண்ணா, “இந்த மனிதர் என்னைப் பெருமைப்படுத்துகிறார். இது மிக அதிகமான தொகையாக இருப்பதால் அவருக்குச் சம்மதமா என்று கேட்டேன்.
அப்போது அவர், ‘எதுவும் இல்லாமல் ஜீரோவிலிருந்து தொடங்கினேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவுவதிலிருந்து நான் எப்படிப் பின்வாங்க முடியும்?’ எனக் கூறினார்” என்று தனது ட்விட்டர் பதிவில் மனம் திறந்திருக்கிறார். பாலிவுட்டைத் தாண்டி தேசமும் முழுவதும் இந்த நட்சத்திர ஜோடியை நெட்டிசன்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் வேண்டுகோள்
டோலிவுட்டின் வசூல் நட்சத்திரம், ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாணின் புத்திசாலித்தனத்தை ஆந்திர நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், சோமபேட்டா வட்டாரத்தைச் சேர்ந்த 99 மீனவர்கள் தமிழகக் கடலோரத்துக்கு மீன்பிடிக்க வந்தபோது சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஊரடங்கு உத்தரவால் முடங்கிவிட்டனர்.
அவர்களது குடும்பத்தினர் கலங்கி வருந்துவதைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘எங்கள் மீனவர்களுக்கு உணவும் உறைவிடமும்’ கேட்டுத் தமிழில் ட்வீட் செய்ய, தமிழக முதல்வரும் உடனடியாக பவன் கல்யாணின் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டு, அவருக்கு ட்வீட் வழியாகவே பதிலளித்துள்ளார்.