படமாக்கலின் தரம், இயக்குநரின் ஆளுமை ஆகியவை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், முக்கியப் பிரச்சினைகளைப் பேசும் குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. உதவி இயக்குநராக 15 ஆண்டுகள் இயங்கி வரும் விஜய் ஆர்.ஆர். எழுதி, இயக்கியிருக்கும் ‘சிட்டுக்குருவி’ கொஞ்சம் புது ரகமாக இருக்கிறது. உரையாடல் காட்சியாகத் தொடங்கி இசை ஆல்பமாக முடிகிறது இவரது முயற்சி.
வீட்டை விட்டு வெளியேறி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வாழும் கருணை இல்லம் ஒன்றில் வசித்துவருகிறார் ஒரு சீட்டி இசைக் கலைஞர். இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு அவரைச் சந்திக்க வருகிறார் ஒரு இளம் பெண் பத்திரிகையாளர். “உங்க காயத்துக்கு மருந்தே கிடையாதுன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும் இந்தச் சமூகத்துக்கு உங்க இழப்போட வலியை நாமச் சொல்லித்தான் ஆகணும். என்னை ஒரு செய்தியாளரா பார்க்காம, ஒரு மகளா நினைச்சு உங்க வலியை என் கிட்ட இறக்கி வையுங்க” என்கிறார். அதன் பிறகு அந்த இசைக் கலைஞர் பேசப்போகிறார் என்று எதிர்பார்த்தால், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்’ என்ற பாடல் தொடங்குகிறது.
தாயை இழந்த தன் ஒரே மகளை, தந்தைக்குத் தந்தையாக, தாய்க்குத் தாயாகத் தனியொரு ஆளாக வளர்க்கிறார் . இசையோடு அன்பும், கருணையும் புகட்டப்படும் அவள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து பதின்பருவம் எட்டுகிறாள். தன்னந்தனியாய்த் துள்ளியபடி பள்ளிக்குப் போய்வருகிறாள். கருத்தாகப் படிக்கிறாள். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பு மான்டேஜ் கவிதைகளாக விரிய, பாடல் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் திடீர்த் தாக்குதலாக அந்தக் காட்சி வருகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பும் அவளைச் சிலர் சட்டென்று காரில் கடத்தி, கசக்கி எறிகிறார்கள். தன் மகளுக்கு நேர்ந்ததைச் சொல்லி முடிக்கும்போது மயங்கி விழுகிறார் அந்த இசைக் கலைஞர். அவரது வலியை அப்படியே பார்வையாளர் களுக்குக் கடத்துகிறார் இயக்குநர்.
முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பாலியல் வன்முறைக் காட்சியை மூன்றே ஷாட்களில் சட்டென்று முடித்து அழுத்தத்தைக் கொண்டுவந்திருப்பது. ரித்திக் மாதவன் இசையில், பிரபலப் பாடலாசிரியர் முத்துவிஜயன் எழுதியிருக்கும் வரிகள் தந்தையினுள் இருக்கும் தாய்மையைத் தூக்கிப் பிடிப்பதோடு பெண்மையின் பெருமையை இயல்பாகப் பேசுகின்றன.
இப்படியொரு இசை ஆல்பத்தை இயக்க வேண்டிய அவசியமென்ன?
“பெண்கள் இன்று சிறகடித்துப் பறக்காத துறையே கிடையாது. ஆனால் நாம் இன்று சிட்டுக்குருவி எனும் அரிய பறவை இனத்தைத் தொலைத்து வருவதைப் போலவே பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களது குரலை எல்லா மட்டத்திலும் புறக்கணிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். நிர்பயாவுக்கு நேர்ந்த வன்கொடுமையும், அவரது மரணமும் நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வு மரணத் தண்டனை என்றெல்லாம் விவாதித் தார்கள். ஆனால் பெண்கள் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை. இதைச் சட்டங்கள் போட்டுத் தடுக்க முடியாது. மனதளவில் மாற்றங்களைக் கொண்டு வருவது தான் உண்மையான தீர்வாக இருக்கும். குறும்படங்கள் இன்று மக்களிடமும் மாணவர்களிடமும் எளிதாகச் சென்று சேரும் ஊடகமாக இருப்பதால் இதை முயன்றேன் இதை உள்ளன்புடன் தயாரித்த ஆர்.செல்வகுமாருக்கு என் நன்றி” என்கிறார் விஜய்.