இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை: கொரிய ‘ஸோம்பி’யும் கொள்ளை நோயும்

செய்திப்பிரிவு

சு.சுமன்

கரோனோ வைரஸ் பரவலைத் தவிர்க்கும் முயற்சியில் உலகெங்கும் மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். திரையரங்குகள் உள்ளிட்ட சகல பொழுதுபோக்கு ஸ்தலங்களும் கதவடைத்து விட்டன. இதனால் வேறு வழியின்றி இணையத்தின் உதவியுடன் காத்திரமான படைப்புகளை திரை ரசிகர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

அவற்றில் தற்போதைய பீதி கிளப்பும் தொற்றுநோய்ச் சூழலைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களும் அடங்கும். ‘தி ஒமேகா மேன்’ (1971), ‘அவுட்பிரேக்’ (1995), ‘வேர்ல்டு வார் Z’ (2013), ‘பேன்டமிக்’ (2016) ஆகிய திரைப்படங்களில் வரிசையில் ‘கண்டேஜியன்’ (2011) தற்போதைய நிலவரத்தை ஒட்டியுள்ளது. வலைத் தொடர் வரிசையில், நெட்ஃபிளிக்ஸ் கடந்த வாரம் வெளியிட்ட ‘கிங்டம்’ அதிக கவனம் பெற்றுள்ளது.

ஜப்பானின் படையெடுப்புக்குப் பிந்தைய கொரியா. அங்கே, 16-ம் நூற்றாண்டுப் பின்னணியில் ‘கிங்டம்’ கதை தொடங்குகிறது. அப்போதைய கொரியாவை ஆண்டுவந்த ஜோசியன் வம்சத்தின் அரசருக்கு விநோத வியாதி தொற்றுகிறது. நீண்ட காலமாக நாட்டு மக்களுக்குக் காட்சி தராததில், அவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவுகிறது. பட்டத்து இளவரசரான லீ சாங், தந்தையைச் சந்திக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்.

கர்ப்பமாக இருக்கும் இளம் அரசியின் வாரிசை அடுத்த மன்னராக்க அவரது குடும்பத்தினர் சதி செய்கின்றனர். இதற்கிடையே நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் மக்களை அழித்தொழிக்கும் கொள்ளை நோய்க்கும் அரசனின் உடல் பாதிப்புக்குமான தொடர்பைப் பட்டத்து இளவரசர் கண்டறிகிறார். உண்மையை அறியவும், நாட்டைச் சூழும் ஆபத்துகளில் இருந்து மீளவும், தந்தைக்கு சிகிச்சை அளித்த தலைமை வைத்தியரைத் தேடிப் புறப்படுகிறார்.

இதற்கிடையே மனிதர்கள் மத்தியில் ரத்த வெறி கொண்ட ‘ஸோம்பி’ மனிதர்களால் அந்தக் கொள்ளை நோய் வேகமாகப் பரவுகிறது. மெய்க்காப்பாளன் உதவியுடன் நோய் தொற்றும் பகுதியில் களமாடும் இளவரசன், ஸோம்பிகள், அரண்மனை எதிரிகளைச் சரமாரியாக எதிர்கொள்கிறார். அந்த வகையில் அத்தியாயம் தோறும் திருப்பங்களுடன் திரில்லராகக் கதை பயணிக்கிறது. ‘கிங்டம்’ வலைத்தொடரின் முதல் சீஸன் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. தற்போது கரோனா களேபரத்தின் மத்தியில் இரண்டாம் சீஸன் வெளியாகி உள்ளது.

கொள்ளை நோய் தொற்றுவதை நம்பத்தகுந்த வகையில் சொல்வதற்காக ‘ஸோம்பி’களைக் கைக் கொண்டபோதும், ஏமாற்றாத காட்சிகளுடன் விறுவிறுப் பான கதை தனித்துச் செல்கிறது. இளவரசனுக் காகச் சகலத்திலும் மெனக்கடும் மெய்க்காப்பாளன், அமைதியாக வில்லத்தனம் காட்டும் இளம் அரசி, மகனைக் கொன்றதாகப் பட்டத்து இளவரசனைப் பழிதீர்க்கத் துடிக்கும் அரசியல் அதிகாரமிக்க உறவினர், சிரஞ்சீவி மூலிகைகளை ஆராயும் செவிலி, புதிரான அறிமுகத் துடன் இளவரசனுக்குத் தோள் கொடுக்கும் வீரன் எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் கதையைச் சோர்வின்றி நகர்த்துகின்றன.

கொரியாவின் பண்டைய வரலாற்றுப் பின்னணியிலான அரண்மனைகள், இயற்கைக் காட்சிகள், ஆடை அணிகலன் வடிவமைப்பு ஆகியவை உறுத்தாது ஈர்க்கின்றன. ஸோம்பிகள் தோன்றும் காட்சிகளில் பார்வையாளர் முகத்தில் ரத்தம் தெறிக்க வன்முறை தாண்டவமாடினாலும், பாலியல் காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல். இறந்தவரை உயிர்ப்பித்தல், இயல்பான மனிதர்கள் ‘ஸோம்பி’களாவது, ஆண் வாரிசுக்காகக் கர்ப்பிணிப் பெண்களை கண்போல் காக்கும் அரசி, காட்சிக்குக் காட்சி எகிறும் பழிவாங்கல், துரோகங்கள் என ஒரு வலைத்தொடருக்கான அம்சங்களில் குறையின்றி ‘கிங்டம்’ தொடரின் அத்தியாயங்கள் செல்கின்றன.

இரவில் மட்டுமே உயிர்பெறும் ஸோம்பிகளின் புதிய வெறித்தனத்துடன் முதல் சீஸன் முடிவடைந்தது. இரண்டாம் சீஸன், தன் குருவின் ஆதரவுடன் இளவரசன் முன்வைக்கும் அரசியல், ஆக்‌ஷன் அதிரடிகளில் மையம்கொள்கிறது. தடாலடி பிளாஷ்பேக்கில் கதை பாய்ந்து மீள்வதும், அவற்றில் சில, அரை நிமிடத்தில் முடிவதும் வலைத்தொடர் காட்சிகளை இறுக்கமாகக் கொண்டுசெல்கின்றன. பல அடுக்கிலான கதைகள் ஒவ்வொன்றிலும் காத்திருக்கும் மர்மமும், திடுக்கிடலும் தனி சுவாரசியம் தருகின்றன.

‘கிங்டம்’ நெட்ஃபிளிக்ஸின் முதல் கொரியன் வலைத்தொடராகும். ‘தி கிங்டம் ஆஃப் காட்ஸ்’ என்ற வலைச்சித்திரத் தொடராகப் பிரபலமடைந்திருந்த கதையை வலைத்தொடருக்காக மெருகேற்றித் தந்திருக்கிறார்கள். ஜு ஜி-ஹூன், பே துனா, கிம் சங்-கியூ உள்ளிட்டோர் நடித்திருக்கும் வலைத்தொடரை கிம் சியாங்-ஹுன் இயக்கி உள்ளார்.

SCROLL FOR NEXT