ஜோதிகாவை இயக்கியது, சூர்யாவின் தயாரிப்பு, ராம்ஜியின் ஒளிப்பதிவு போன்றவை காரணமாக உற்சாகத்தில் இருக்கிறார் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜே.ஜே. பிரெட்ரிக். படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டபோதே எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த அவரிடம் உரையாடியதிலிருந்து..
இது நீதிமன்றப் பின்னணியில் நடக்கும் கதையா?
ஆமாம். ஆனால், கதையைப் பற்றி ஒருவரி சொன்னாலும் எளிதில் புரிந்துவிடும். அது, ஆவலுடன் திரையரங்கு வர நினைப்பவர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்துவிடும். இந்தப் படம், நம்பி வரும் பார்வையாளர்களை நிச்சயமாக ஊக்கப்படுத்தும். நம் எல்லோருக்கும் மத்தியில் நடக்கும் விஷயங்களைக் கொண்டே கதை பண்ணியிருக்கிறேன். அதனால் படத்துடன் நம்மை எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். ஒரே சம்பவம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.
கதையைக் கேட்ட ஜோதிகா என்ன சொன்னார்?
பல கதைகளைத் தயார்செய்தேன். எதிலிருந்து தொடங்குவது என்று யோசித்தபோது, இந்தக் கதையை முதலில் எடுக்கலாம் என முடிவு செய்தேன். இதைப் பெருமையாகச் சொல்வதா, சந்தோஷப்பட்டுச் சொல்வதா எனத் தெரியவில்லை. ஜோதிகாவுக்கு முன்னர் நான் யாரிடமும் இந்தக் கதையைச் சொன்னதே இல்லை. கதையைக் கேட்டு முடித்ததும் உணர்ச்சிவசப்பட்டவராக, ‘நான் பண்றேன்’ என்று கூறிவிட்டார்.
இந்தக் கதைக்காக அதிகம் உழைத்திருக்கிறார். உடல் எடையைக் குறைத்தார். நீதிமன்றப் பின்னணி என்பதால் படத்தில் ஒரே ஷாட்டில் பல காட்சிகள் இருக்கின்றன. ஒரு நிமிடத்தைத் தாண்டிய சில காட்சிகளுக்கு அற்புதமான உழைப்பைத் தந்து நடித்துள்ளார். முக்கியமாக, அவர் ஒப்புக் கொண்டவுடன் சூர்யா தயாரிப்பாளராக உள்ளே வந்தார். கதையில் எந்தவொரு சமரசமும் செய்யவில்லை. இதில், யதார்த்தமான, பாசிட்டிவான ஜோதிகாவைக் காண்பீர்கள். அவரே தனது கதாபாத்திரத்துக்குக் குரல்கொடுத்துள்ளார்.
பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என ஒரே படத்தில் பல இயக்குநர்களை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
பாக்யராஜ் படத்தின் டப்பிங் எல்லாம் முடித்துவிட்டு, ‘இந்தக் காட்சி நன்றாக இருக்கிறது. இப்படியெல்லாம் ஷாட்களை நான் எதிர்பார்க்கவில்லை’ என்று சொன்னார். அதற்கு ஒளிப்பதிவாளர் ராம்ஜி முக்கியக் காரணம். அனைவரும் இயக்குநர்களாக இருந்தாலும், இந்தக் கதைக்கு நியாயம் செய்து நடித்திருக்கிறார்கள்.
ஒரு நாள் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் முக்கியமான காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம். அப்போது சூர்யாவும் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்திருந்தார். அனைவரும் ‘வாருங்கள் ஒளிப்படம் எடுத்துக்கொள்வோம்’ என எடுத்துக் கொண்டோம். அதை மறக்க முடியாது.
சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?
காட்சித் தொடர்பியல் படித்துவிட்டு, இரண்டு குறும்படங்கள் எடுத்தேன். இந்திய அளவில் சுமார் 70 பேர் கலந்து கொண்ட குறும்படப் போட்டியில் எனது படம் முதல் பரிசை வென்றது.
உங்களுடைய மனைவி ஜாய் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்திருக்கிறார். உங்கள் சினிமா முயற்சிக்கு அவர் உதவினாரா?
திருமணமானவுடன் என்னை அனைத்து விதத்திலும் ‘உன்னால் முடியும்’ என்று உந்தித் தள்ளியது அவர்தான். இதை எங்கு வேண்டுமானாலும் பெருமையாகச் சொல்வேன். நான் இயக்கியிருக்கும் படத்துக்கும், இனி இயக்கவிருக்கும் படத்துக்கும் அவர்தான் காரணம்.