இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: நிஜக் குறும்புகளின் அறுவடை!

செய்திப்பிரிவு

சுமன்

ஐரோப்பிய பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான ‘பிராங்க் ஷோ’ என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘பேட் ட்ரிப்’ என்ற தலைப்பில் திரைப்படமாகியிருக்கிறது.

தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் இளைஞர்கள் நடத்தும் ‘பிராங்க் ஷோ’ எனப்படும் குறும்பு விளையாட்டுகளின் தொகுப்பு நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்திருக்கின்றன. ஆனால், ஐரோப்பிய நாடுகளின் தொலைக்காட்சிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பொது இடங்களில் ஏதேனும் நடித்துக்காட்டியோ, பயமுறுத்தியோ, முன்பின் அறிமுகமில்லாதவர்களின் பதில்வினையை மறைந்திருக்கும் கேமராவில் படம்பிடித்துத் தொகுத்துக் காட்டுவார்கள். இவை பல நேரங்களில் கண்டனத்துக்குரிய செயல்பாடாக மாறிவிடுகிறது என்றபோதும், பெரும்பாலானவை மனம்விட்டுச் சிரிக்கும்படி இருக்கும். இப்படியான நகைச்சுவைத் தொகுப்பை ஒரு திரைப்படமாகத் தொகுக்கும் முயற்சியாகவே ‘பேட் ட்ரிப்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘பிராங்க்’ சேட்டைகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இருவர், சாலை மார்க்கமாக நாடு தாண்டிய பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடுகின்றனர். செல்லும் வழியெங்கும் குறும்பு கொப்பளிக்கும், விபரீதம் எட்டிப்பார்க்கும் சேட்டைகளை மேற்கொள்கின்றனர். அவற்றுக்குப் பொதுமக்களின் பதில்வினையை மறைந்திருக்கும் கேமராக்களில் பதிவுசெய்கிறார்கள்.

இளைஞர்களின் குறும்புச் சேட்டைகளுக்குப் பதில் வினையாற்றுவோர் அனைவரும் நிஜமாகவே பொதுமக்களாம். அந்த வகையில் நடிப்பாக அல்லாது இயல்பான நகைச்சுவைக் கலாட்டாக்களைப் படம் பிடித்துள்ளனர். சேட்டைகளைத் திட்டமிடுவதும், அவற்றை அரங்கேற்றுவதுமே அடுத்தடுத்த காட்சிகளாக விரிகின்றன.

சேட்டைகளிலும் குறும்புகளிலும் சில விபரீதமாக வெடிக்கின்றன. அவற்றை நண்பர்கள் இருவரும் போராடி சமாளிப்பதும், மீண்டும் அடுத்த களத்துக்குத் தயாராவதும் முழு நீளத் திரைப்படத்தின் காட்சிகளாக அமைந்துள்ளன. ரசிகர்களை அதிகம் சோதிக்காது 84 நிமிட ஓட்டத்தில் திரைப்படம் நிறைவடைகிறது.

சேட்டை இளைஞர்களாக எரிக் ஆன்ட்ரி, லில் ரெல் ஹௌரி ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தை கிடாவ் சகுராய் இயக்கியுள்ளார். கரோனா வைரஸ் கரையைக் கடந்து சென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் ஏப்ரல் 17 அன்று ‘பேட் ட்ரிப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT