இந்து டாக்கீஸ்

திரைக்குப் பின்னால்: எனக்கு உந்துதல் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திப்பிரிவு

முத்து

“என்னை இங்கு எத்தனை பேருக்குத் தெரியும் எனத் தெரியாது. ஆனால், 'கே.டி' படத்துக்குப் பிறகு நிறைய பேர் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது.

எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்த எஸ்.பி.பி. சரண் சாருக்கு ரொம்ப நன்றி. என் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வு அது.” என்று நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார் தமிழில் கடந்த 2015-ல் வெளியான ‘மூணே மூணு வார்த்தை’ படத்தின் மூலம் இசையமைப்பாராக அறிமுகமான கார்த்திகேய மூர்த்தி. இடையில் ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்திருந்தாலும் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கே.டி' படத்துக்கு இவர் வழங்கிய இசைக்காக பல தரப்பினரின் பாராட்டு மழையில் நனைந்து மீண்டிருக்கிறார். கார்த்திகேய மூர்த்தியுடன் ஒரு சந்திப்பு.

'கே.டி' படத்துக்கு விமர்சனரீதியாகக் கிடைத்த வரவேற்பு பற்றி..

தரமான படங்களை விமர்சகர்கள் என்றைக்குமே கைவிட்டதில்லை. படத்தின் இசைகுறித்து விமர்சனங்களில் படித்தபோது ரொம்ப உற்சாகமானேன். இதற்குத்தான் ஆசைப்பட்டேன். அந்தப் பட உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இருந்திருக்கிறேன். மக்களின் மகிழ்ச்சிக்காகத் தானே படம் பண்ணுகிறோம். அது நடந்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. பத்திரிகை விமர்சனங்களால்தான் இன்றைக்கு ‘கே.டி’ படம் திரையரங்கில் ஓடி,தற்போது இணையத் திரையில் இவ்வளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இசையமைப்பில் எப்படி ஆர்வம் வந்தது ?

எங்கள் பரம்பரையில் கடைசி ஏழு தலைமுறைகளாக இசைத்துறையில்தான் இருக்கிறோம். எனது தாத்தா டி.கே.மூர்த்தி மிருதங்கம் வாசிப்பாளர். இந்திய வானொலியில் அப்பா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். அப்பாவிடம்தான் ஏ.ஆர்.ரஹ்மான் சார் திலீப் குமாராக இருக்கும்போது உதவியாளராக இருந்திருக்கிறார்.

எனக்கு நான்கு வயது இருக்கும் போது, ஏ.ஆர்.ரஹ்மான் சாரை காண்பித்து'எப்படி வாசிக்கிறான் பார். நீயும் அவனை மாதிரி வாசிக்க வேண்டும்' என்று அப்பா சொல்வார். அங்கிருந்து எனக்கான ஆர்வம் தொடங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். இசையமைப்பாளராக இருக்கும்போது, ஸ்டுடியோவில் அப்பா சேரில் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருப்பார். அப்போது நாமும் இதே மாதிரி ஒரு நாள் சேரில் உட்கார வேண்டும் என நினைப்பேன்.

சன் தொலைக்காட்சியின் ‘ஊ..லல..லா’ நிகழ்ச்சிகளில் கிடைத்த பிரபல்யம் தான் உங்களது முதல் படி என்று சொல்லலாமா?

அதற்கு முன்னதாகவே நிறைய பேண்ட்களில் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த டிவி நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது எனக்குத் தேர்வு நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் என்னுடன் வாசிப்பவர்கள் யாருமே இல்லை. ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு அண்ணா நகரிலிருந்து, விமான நிலையம்வரை சென்று ஒவ்வொருவராக தேர்வு செய்து உடனே ஒரு பாட்டை தயார்செய்தேன். இரண்டே நாளில் பாட்டை இறுதிசெய்து, நுழைவுக்கான கடைசி நாள் கொண்டு போய் கொடுத்தேன்.

அது தேர்வானதில் ரொம்ப மகிழ்ச்சி. ரஹ்மான் சார் இருக்கிறார் என்பதால் அதில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். கடவுள் கருணையால் அதில் வெற்றி கிடைத்தது. அதில்தான் என் பயணம் தொடங்கியது. அதற்குப் பிறகு இசையமைப்பாளர் ஆவது என்ற முடிவை எடுத்தேன்.

கே.பாலசந்தருடைய கடைசி நாடகமான 'ஒரு கூடைப் பாசம்' நாடகத்துக்கு இசையமைத்த அனுபவம் பற்றி கூறுங்கள்...

ஒரு ரசிகராக அவரை சந்தித்து என் சிடியைக் கொடுத்தேன். அந்த நாடகத்துக்கு என்னுடன் சேர்ந்து கிரிதரனும் இசையமைத்தார். பாடலுக்கு இசை என்பது வேறு, பின்னணி இசை என்பது வேறு. பாலசந்தர் சார்தான் எனக்கு பின்னணி இசை என்றால் என்ன என்பதை கற்றுக்கொடுத்தார். எங்கள் இருவருக்கும் குரு - சிஷ்யன் உறவு அமைந்ததை பாக்கியமாக நினைக்கிறேன். அவர் அன்றைக்கு கற்றுக்கொடுத்த விஷயங்கள்தான், இன்று தெரிந்தும் தெரியாமலும் உபயோகப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு 2019-ல்தான் அடுத்தப் படம். ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

இடையே மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அதில் இரண்டு படங்கள் வெளியாகவே இல்லை. ஒரு படத்துக்கு இசை என்பது ஒரு வருடத்துக்கான உழைப்பு. அந்த உழைப்பு சரியான படத்தில் இடம்பெறும்போதுதான் நமக்கான கதவுகள் திறக்கும். ஒரு நல்ல இசையை சரியான முறையில் கொண்டுபோய் சேர்ப்பது மட்டுமே நோக்கம்.

நான் வாய்ப்புத் தேடி கிடைத்த படம் 'கே.டி' என்று சொல்ல முடியாது. என்னை நம்பி இயக்குநர் மதுமிதா கொடுத்தார். அதற்கு நியாயம் செய்தேன். திரையுலகம் எனக்கு திரும்பவும் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

SCROLL FOR NEXT