இந்திப் படவுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் கரண் ஜோஹர் ஒரு திறமையான சினிமா வியாபாரி என்றும் பெயரெடுத்துள்ளார். இயக்கம், படத் தயாரிப்பு, பட விநியோகம் என அசத்திவரும் இவர், தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் வெற்றிப் படங்களை வாங்கி, இந்தியில் மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’ தெலுங்குப் படத்தை இந்தியில் மொழிமாற்றி வெளியிட்டு கோடிகளை அள்ளியிருக்கிறார்.
இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவை ஏலம் போடாத குறையாக, ‘விஜய் தேவாரகொண்டாவுக்கு ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் ஊதியம் தரத் தயார். ஆனால் நான் கைகாட்டும் கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் சில வருடங்களில் அவரை அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட முடியும்” என்று கூறியிருக்கிறாராம். தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் நேரடி இந்திப் படத்தையும் கரண் ஜோஹரே வெளியிட இருக்கிறாராம்.
தெலுங்கில் அடிவைக்கும் ப்ரியா!
தெலுங்கு நாயகன் மஞ்சு மனோஜ் ஒரு இடைவெளிக்குப்பின் நடிக்கும் படம் 'அஹம் பிரம்மாஸ்மி'. பல மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அடி வைக்கிறார் ப்ரியா பவானி சங்கர். தெலுங்கு மொழியுடன் இந்தி, கன்னடத்திலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதால் பாலிவுட்டிலும் ப்ரியாவுக்கு அறிமுகம் கிடைக்க இருக்கிறது.
நட்சத்திர ஜோடிக்கு தோல்வி
தமிழில் ஆர்யா – சாயிஷா நட்சத்திர தம்பதி நடிப்பில் ‘டெடி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவர்களுக்குச் சற்று முன்னதாக அன்வர் ரசீத் இயக்கி, தயாரித்து வெளியான 'ட்ரான்ஸ்' மலையாளப் படத்தில் ஃபஹத் பாசில் – நஸ்ரியா தம்பதி திருமணத்துக்குப்பின் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்தது. ஆனால் இதை ஈடு செய்யும் விதமாக மீண்டும் இந்தத் தம்பதி இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இதற்காக ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ பட இயக்குநர் திலீஷ் போத்தனிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறார்களாம்.