எஸ்.வி.வி.
அண்மையில் 'எழும் இந்தியா...எல்லோரையும் இணைத்து' என்ற பாடலை யூ டியூபில் கேட்டபோது, அதன் மூலப் பாடல் எது என்ற சிந்தனை ஓடியது. ‘ஜகதாலப் பிரதாபன்’ படத்தின் ‘சிவசங்கரி சிவானந்த லஹரி’ எனும் பாடல் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. தெலுங்கு மூலப்படத்தில் கண்டசாலா பாடியிருக்க, தமிழில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடல் மிகவும் அசாத்தியமான ஸ்வரங்கள், ராக ஆலோபனைகளுக்காக மிகவும் புகழ்பெற்றிருந்தது.
சாலையோர வியாபாரியான எளிய மனிதர் அபு தாஹிர். மிகச் சிறந்த பாடகரும்கூட. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மேடைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பாடி வருபவர். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பல இடங்களிலும் எதிர்ப்பு வலுத்துவரும் சூழலில், அபு தாஹிர், சிவசங்கரி பாடலை எடுத்து சாதகம் செய்து பார்த்து, கவிஞர் பரிணாமம் அவர்களது துணையோடு நல்லிணக்கம், அமைதி, அன்பு எங்கும் சூழ்ந்திட அதற்கான நோக்கில் வரிகளை எழுதி, பாடலாக உருப்பெறவைத்துள்ளார். வி.கே.கண்ணன் இசை அமைப்பில் பாடி, அதை யூ டியூபில் பதிவேற்றி இருக்கிறார்.
‘பன்முகம் படைத்திடும் ஓர் முகம், பல மத இனங்களின் தாய் நிலம்' என்று தொடங்குகிறது அனு பல்லவி. பின்னர் சரணத்தில், வேக வேக ஸ்வரங்களை இசைத்து ‘வானம், பூமி, நீர், நெருப்பு, காற்று ஐந்தின் வேற்றுமைகள் பிரபஞ்சத்தில் ஒன்றிணைந்து அனைத்திற்கும் பயன் தருதே எனும்போது நாம் மறந்த உண்மையை மனம் உணர்கிறது. அதேபோல் அவ்வரியின் தொடர்ச்சியாக, ‘நாடு, இனம், நிறம், மொழி, மனிதம் ஐந்தும் ஒருங்கிணைந்தால் மானிடத்தின் மாண்புகளால் உலகம் பயன்பெறுமே' என்ற இடம் எவரையும் நெகிழ்வூட்டும். ஒற்றுமைப் பதாகையை பழைய பாடல் இசையின் பின்புலத்தில், மிக முக்கிய தருணத்தில் மக்கள் மன்றத்தில் ஒலிக்கும் இப்பாடல், ஒரு கவன ஈர்ப்பாக மாறிக்கொண்டிருக்கிறது.
காணொலியைக் காண இணைசுட்டி: https://bit.ly/2Q5jZhs