‘ஓ காதல் கண்மணி ’ படப்பிடிப்பில் 
இந்து டாக்கீஸ்

தரமணி 17: ஒளிப்பதிவின் கடவுள்

செய்திப்பிரிவு

ஆர்.சி.ஜெயந்தன்

திரைப்படக் கல்லூரி தனக்குப் பெருமை சேர்த்த பல மாணவர்களைப் பெற்றது. அதுபோலவே அதன் வரலாற்றில் பல சிறந்த முதல்வர்களையும் பெற்றிருக்கிறது.

அவர்களில் முதன்மையானவர் என்று 1962 முதல் 1979 வரை பொறுப்பு வகித்த பி.சிவதாணுப் பிள்ளையைக் கூறலாம். “ஒலிப்பதிவுத் துறைக்கு வெளியுலக இரைச்சல் எட்டாத அமைதியான இடம் தேவை. எனவே, திரைப்படக் கல்லூரிக்குக் குறைந்தது 50 ஏக்கர் நிலம் தாருங்கள்” என அன்றைய திமுக அரசிடம் கோரிக்கை வைத்த இவர், அன்று அடையாற்றின் ஒரு பகுதியாக இருந்த தரமணியில் அதைப் பெற்றார். அதுதான் இன்று ‘டைடல்’ பார்க் மென்பொருள் வளாகமாக மாறி நிற்கிறது. சிவதாணுப் பிள்ளை அத்துடன் நின்றுவிடவில்லை.

“நமது திரைப்படக் கல்லூரி, அகில இந்திய அளவில் புகழ்பெற வேண்டுமானால் திரைக்கதை -இயக்கம், படத்தொகுப்பு, திரை நடிப்பு ஆகிய திரைத்துறையின் மூன்று முக்கிய பிரிவுகளிலும் பாடப்பிரிவுகளை உடனே தொடங்க வேண்டும்” என்று அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் எடுத்துக்கூறி, 1971-ல் அனுமதி பெற்று பாடப் பிரிவுகளை விரிவுபடுத்தினார். அதேபோல தரமணி திரைப்படக் கல்லூரியைச் செய்தி - மக்கள் தொடர்புத் துறையுடன் இணைத்த பெருமையும் மு.கருணாநிதியையே சாரும்.

சிவதாணுப் பிள்ளை முதல்வராகப் பொறுப்புவகித்த ஆண்டுகளில் புனே திரைப்படக் கல்லூரிக்குப் போட்டியாக ‘அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்’ என்று காஷ்மீர்வரை புகழ்பெற்றது தரமணி திரைப்படக் கல்லூரி. “சிவதாணுப் பிள்ளையின் காலத்தில் தரமணியில் பயின்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்று பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார்கள் இன்று திரையுலகில் பிரபலங்களாக இருக்கும் பல முன்னாள் மாணவர்கள். அந்த அதிர்ஷ்டத்தை அடைந்தவர்களில் ஒருவர், ‘ஒளிப்பதிவின் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் பி.சி.ஸ்ரீராம்.

காதல் கதையில் பிறந்த கலைஞன்

ஒன்பது வயதில் தன் தாத்தா பரிசளித்த பிரெளனி என்ற ஸ்டில் கேமராவைப் பயன்படுத்தி ஒளிப்படங்களை எடுக்கத் தொடங்கியவர் பி.சி.ஸ்ரீராம். ஸ்ரீதரின் படங்களுக்கு ஒளிப்படக் கலைஞராகப் பணிபுரிந்துவந்த திருச்சி அருணாசலம் இவரது வீட்டுக்கு எதிரில் குடியிருந்தார். பள்ளி மாணவனாக, அவர் எடுக்கும் கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்து வியந்த ஸ்ரீராம், அருணாசலம் படப்பிடிப்பு முடிந்து எப்போது படச்சுருளுடன் வீட்டுக்கு வருவார் எனக் காத்திருப்பார்.

அவர் நெகடிவ்களைக் கழுவும்போது தொடங்கி பிரிண்ட் போட்டு ‘உருத்துலக்கும்’ தருணங்களில் அருகிலிருந்து பார்த்துப் பரவசப்பட்ட ஸ்ரீராமை அடுத்து ஆகர்சித்தவர் ‘புதிய பறவை’ படத்தின் ஒளிப்பதிவாளரான கே.எஸ்.பிரசாத். ‘புதிய பறவை’ படத்தில் அவரது ஒளிப்பதிவைப் பார்த்து நமது துறை இதுதான் என்று முடிவுசெய்த பி.சி.ஸ்ரீராம் தரமணி திரைப்படக் கல்லூரியில் 1976-ம் ஆண்டு ஒளிப்பதிவுத் துறை மாணவராகச் சேர்ந்தார். அப்போது அங்கே ஒளிப்பதிவைக் கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தவர் ராபர்ட் (ராஜசேகரன்).

ஒளிப்பதிவுப் படிப்பை முடித்து 1979-ல் வெளியே வந்த ஸ்ரீராம் தொடக்கத்தில் 16 எம்.எம்.படச்சுருளில் படமாக்கப்பட்ட ஒரு சில சுயதீனப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். ஆனால், நிதிப் பற்றாக்குறையில் அவை நிறைவுபெறாமல் போயின. பின்னர், மௌலி இயக்கத்தில் ‘வா இந்தப் பக்கம்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானர். அடுத்தடுத்து மௌலி இயக்கிய மூன்று படங்களுக்குப் பணிபுரிந்த இளைஞர் ஸ்ரீராம் தனக்கான களம் மௌலியின் படங்கள் அல்ல என்பதை உணர்ந்தார்.

மௌலியின் படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்துவந்த பிரதாப் போத்தனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஸ்ரீராமுக்கு அமைந்தது. அந்தச் வேளையில் ஒரு படம் இயக்கி, நடிக்கும் வாய்ப்பு பிரதாப் போத்தனுக்கு கிடைத்தது. அப்போது, ‘தியரி’களை அதிகம் சட்டை செய்யாத ஸ்ரீராமின் ஒளிப்பதிவுத் திறமையை நன்கு அறிந்து வைத்திருந்த பிரதாப் போத்தன், “இது நமது படம்; நீ விரும்புகிற வித்தைகளையெல்லாம் காட்டு” என்று கூறி ‘மீண்டும் ஒரு காதல் கதை’ (1985) படத்துக்கு ஒளிப்பதிவாளராக அமர்த்தினார். அந்தப் படத்தின் மூலமே “பி.சி.ஸ்ரீராம் எனும் ஒளிப்பதிவாளர், ஓர் ஒளிப்பதிவுக் கலைஞனாகத் தன்னை அடையாளம் காட்டினார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ தேசிய விருதைப் பெற்றதுடன் பி.சி.ஸ்ரீராம் மீது வெளிச்சத்தையும் பாய்ச்சியது.

மூன்றாம் தேசிய விருது

‘மீண்டும் ஒரு காதல் கதை’யில் இயற்கை ஒளி, கிடைக்கும் ஒளி, செயற்கை ஒளி ஆகிய மூன்றையும் பயன்படுத்தி ஸ்ரீராம் செய்து காட்டியிருந்த ஜாலத்தை அந்தப் படம் வெளிவரும் முன்பே ‘ரஷ்’ ஆகப் பார்த்த பால் பாபு என்ற மலையாள இயக்குநர், தாம் இயக்கிய ‘கூடும் தேடி’ என்ற படத்துக்கு பி.சி.ஸ்ரீராமை அமர்த்திக்கொண்டார். அந்தப் படத்தில் அப்போது பிரபலமாகியிருந்த மோகன்லாலும் ராதிகாவும் நடித்தனர்.

அதே ஆண்டில் பாசில் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுசெய்த ‘பூவே பூச்சூட வா’ படத்துக்கான ஒளிப்பதிவை விமர்சகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், 80-களுக்குப் பிறகு உண்மையாகவே ஒளிப்பதிவுக்கான ஒரு நவீனப் பொற்காலம் என்பது மணிரத்னமும் பி.சி.ஸ்ரீராமும் கூட்டணி அமைத்தபிறகுதான் தொடங்கியது. இவர்கள் இருவரும் முதல் முதலாக இணைந்த ‘மௌன ராகம்’ படத்தின் ஒளிப்பதிவு கதைக் களத்துக்குள் பார்வையாளனை உள் இழுத்துக்கொள்ளும் மாயத்தைச் செய்தது.

பி.சி.ஸ்ரீராமிடம் பேசினால் ஒளிப்பதிவுக்கான அடிப்படை ‘தியரி’ எதுவும் தெரியாது என்பார். தியரிகளைக் குறித்து ஆழமான அறிவு அவரிடம் இருந்தாலும், அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாத கலைஞராக ‘மௌன ராகம்’ படத்திலேயே தனது பாய்ச்சலைக் காட்டியவர். கதைக் களம், கதாபாத்திரத்தின் மனநிலை ஆகிய இரண்டைப் புதிய ஒளித் தேடல்களின் வழியே எப்படி வெளிக்காட்டலாம் என்பதில் தீராத தாகம் கொண்ட ஒளிப்பதிவாளர்.

கதாபாத்திரங்களின் உணர்வுகளை, அவற்றின் மனநிலையை நடிகர்களின் நடிப்புத்திறன் வெளிப்பாட்டிலிருந்தும், வசனத்தின் மூலமும் வெளிப்படுத்த முடியும் என்ற நிலையில் நடிகர்கள் மீது பாயும் ஒளியின் வழியாகவும் அவற்றைப் பார்வையாளர்கள் உணர முடியும் என்று ‘மௌன ராக’த்தில் காட்டினார் பி.சி.ஸ்ரீராம். மணிரத்னம் - பி.ஸ்ரீராம் இருவரையும் ‘மாஸ்டர்களின் கூட்டணி’யாகக் காட்டியது ‘நாயகன்’.

அந்தப் படம், கதை, கதாபாத்திரங்களின் பிரம்மாண்டம் பி.சி.ஸ்ரீராமின் கேமரா வழியே ஒரு பெரிய கேன்வாஸ் ஓவியம் போல உயிர்பெற்று விரிந்தது. அந்தப் படத்துக்காகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றதன் மூலம், தரமணி திரைப்படக் கல்லூரியின் மாணவர்களில் மூன்றாவதாக அந்த விருதைப் பெற்றவர் ஆனார். அவருக்கு முன் மாங்கட ரவிவர்மாவும் அசோக்குமாரும் அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்தவர்கள்.

பொதுவாக, ஒளிப்பதிவுக் கலையில் ‘ஸ்டைல்’ என்ற ஒன்றை ஒளிப்பதிவாளர்கள் உருவாக்க முடியாது என்றாலும், பி.சி.ஸ்ரீராமின் மீறல்களும் ஒளியமைப்பும் காட்சிச் சட்டகத்தில் இரு பரிமாண ஒளிப்பதிவு மூலம் அவர் கொண்டுவரும் முப்பரிமாணக் காட்சி உணர்வும் அவருக்கான தனித்துவத்தைப் பேசிக்கொண்டிருப்பவை. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT