இந்து டாக்கீஸ்

திரைவிழா முத்துகள்: அடையாளம்!

செய்திப்பிரிவு

ம.சுசித்ரா

“வாழ்க்கையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டால் தவிர யாரும் தங்களுடைய வீடு, நண்பர்கள், பண்பாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். போரின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்கவே எண்ணிலடங்கா மக்கள் புலம்பெயர்கிறார்கள். போர்களை தோற்றுவிப்பவை அதிகாரம் படைத்த மேற்கத்திய அரசுகளே.

இப்படி இருக்கும்போது, மத்திய வர்க்க ஐரோப்பிய மக்கள் தங்கள் நாட்டில் தஞ்சமடையும் அகதிகளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உளவியல்பூர்வமாக ஆராயும் கதை இது. ஐரோப்பாவில் அந்நியர்கள் மீதான வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. ஒரு காலத்தில் தாங்களே அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தவர்கள்தாம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்”

இந்த நிதர்சனக் குரல் அந்நிய தேசத்து மக்களையும் பரிவுடன் நடத்த வேண்டும் என்பதற்கான அறைகூவல். இதனை எழுப்பியவர் செர்பியா நாட்டு திரைப்பட இயக்குநர் பஸ்கல்ஜெவிக். பாசிசத்தின் பாசறையிலிருந்து உலக மக்களை விடுவிக்க அவர் கையில் எடுத்த கருவி கேமரா. 30 ஆவணப்படங்கள், 18 திரைப்படங்கள் இயக்கிய பஸ்கல் ஜெவிக் தற்போது 72 வயது படைப்பாளி. இந்திய திரைத்துறை கலைஞர் விக்டர் பானர்ஜியுடன் இணைந்து 2016-ல் ‘தேவ் பூமி’ (கடவுள்களின் பூமி) படத்தை இயக்கினார்.

இதில் இந்திய மண்ணில் வேரூன்றி இருக்கும் சாதிய பாகுபாட்டையும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் கேள்விக்குள்ளாக்கினார். அவருடைய படங்கள் யாவும் சமூக நல்லிணக்கத்தைக் கோருபவை. திரைமொழி வழியே அவர் எழுப்பும் கேள்விகள் நுட்பமானவை. அன்பெனும் மழையில் ஒரு நாள் அகிலம் நனையும் என்ற நம்பிக்கையோடு அவருடைய படைப்புகள் திரையில் விரிகின்றன.

கிறிஸ்தவ மண்ணில் முகமது

ஐரோப்பாவின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான அகதிச் சிறுவர்கள் தங்களுடைய தாய் தந்தையரைக் காணாமல் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பேசு பொருளாக வைத்துத் தன்னுடைய கற்பனைக்கு உயிரூட்டி பஸ்கல்ஜெவிக் 2019-ல் இயக்கிய படம், ‘டெஸ்பைட் தி ஃபாக்’ (Despite the Fog). இத்தாலி, மாசிடோனியா, செர்பியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து தயாரித்த படம் இது. கடந்த டிசம்பரில் நடந்த 17-ம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இத்தாலி நாட்டின் கடற்கரைச் சிறுநகரம் அது. அந்திமழை பொழிந்துகொண்டிருக்கிறது. கடலைப் பார்த்தபடி வீற்றிருக்கும் அந்த உணவகத்தின் மேலாளர் பாவ்லோ கண்களில் எட்டு வயது மதிக்கத்தக்கச் சிறுவன் ஒருவன் தென்படுகிறான். மாநிறத் தோற்றம், கருமையான சுருள் முடியுடன் இருக்கும் அவன் தன்னுடைய பெற்றோரை தேடிக்கொண்டிருக்கிறான். ரப்பர் படகில் தன்னுடைய பெற்றோருடன் வந்ததாகச் சொல்கிறான். அவன் பெயர் முகமது. அவன் சிரியா நாட்டு அகதி என்பது உணர்த்தப்படுகிறது.

இத்தாலி நாட்டின் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த பாவ்லோ, திக்குத் தெரியாமல் நிற்கும் சிறுவன் முகமதைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். முகமது வயதையொத்த தங்களுடைய மகன் மார்கோவைப் பறிகொடுத்தவர்கள் பாவ்லோ, வெலேரியா தம்பதியினர். இதனால் வெலேரியா மனச்சோர்வில் மூழ்கிப் போய் இருக்கிறார். முகமதுக்குத் தங்களுடைய வீட்டில் தற்காலிகமாக அடைக்கலம் தந்து அவனுடைய பெற்றோரைக் கண்டுபிடிக்க பாவ்லோவும் வெலேரியாவும் முயல்கிறார்கள். பயனில்லை.

வேற்றுமை கடந்த தாய் பாசம்

இஸ்லாமிய அகதிச் சிறுவனைத் தங்களில் ஒருவராக ஏற்க பதின்பருவத்தில் இருக்கும் பாவ்லோவின் அண்ணன் மகனுக்கு ஒப்பவில்லை. குடும்பத்தினர் முன்னிலையில் முகமதுவிடம் சகஜமாகப் பழகுவதுபோல பாவனை செய்கிறான். தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சிக் கடையில் இருந்து வெட்டப்பட்ட பன்றியின் தலையை எடுத்துவந்து முகமது முன்னால் காட்டி அவனைப் பயமுறுத்துகிறான். பதைபதைத்துப் போகும் முகமது தனி அறையில் உட்கார்ந்து அல்லாவைத் தொழுகிறான். முகமதை வெளியேற்றும்படி பாவ்லோவின் அண்ணன், வெலேரியாவின் தாய் ஆகியோர் வலியுறுத்துகிறார்கள்.

மொழி, இனம், மதம், வாழ்க்கை முறை எல்லாமே வெவ்வேறானாலும் தன்னை அறியாமல் வெலேராவுக்கு முகமது மீது தாய்ப்பாசம் சுரக்கிறது. அவனைத் தன்னுடைய மகனாகவே வளர்த்துக்கொள்ளலாம் என்ற ஆசை துளிர்க்கிறது. முகமது பேசுவது மற்றவர்கள் புரியாத போதிலும் தாய்க்கும் மகனுக்கும் இடையில் சம்பாஷனை நிகழ்கிறது.

‘நான் மார்கோ அல்ல முகமது’

பாவ்லோவும் வெலேரியாவும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு முகமதை அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, தன்னுடைய மகன் மார்கோவின் புத்தம்புதிய ஆடை, காலணியை முகமதுக்கு வெலேரியா அணிவித்து அழகு பார்க்கும் காட்சி மிக நுட்பமானது. மார்கோவின் காலணிக்குள் முகமதின் பாதங்கள் பொருந்திப்போக மறுக்கின்றன. ஆனால், எப்படியாவது அவன் அதை அணிந்து நடக்கும்படி செய்கிறார். தேவாலயத்தில் ஆராதனை நடைபெறும்போது முகமதை மார்கோ என்றே அழைக்கிறார். அவனையும் ஜெபம் செய்யும்படி வலியுறுத்துகிறார்.

அதுவரை மவுனம் அல்லது ஓரிரு சொற்களை மட்டுமே சன்னமாகப் பேசிக்கொண்டிருந்த முகமது, “நான் மார்கோ அல்ல முகமது” என்று கத்திவிட்டு ஆலயத்தை விட்டு ஓடிவிடுகிறான். நாணயத்தின் மறு பக்கம் போல, வெவ்வேறு அடையாளங்களை ஏற்க மறுத்தால் குழந்தையானாலும் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டும் என்ற ஆழமான கருத்தையும் இயக்குநர் இக்காட்சி வழியே உணர்த்திவிடுகிறார்.

ஆலயத்தை விட்டு ஓடும் முகமதைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் வெலேரியா மனவுளைச்சலில் அல்லல்பட்டுப்போகிறார். இனியும் இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுக்கிறார் பாவ்லோ. தன்னுடைய மனைவியிடம்கூடச் சொல்லாமல் முகமதைக் காவல்துறையிடம் ஒப்படைத்து விடலாமா என்று திட்டமிடுகிறார்.

வெலேரியாவும் முகமதுவும் இரவு நேரம் உறங்கிக்கொண்டிருக்கும் போது காவல்துறை அதிகாரியை வீட்டுக்கு அழைத்துவருகிறார். படுக்கை அறையில் வெலேராவும் முகமதுவும் காணவில்லை. முகமதைத் தன்னுடைய காரில் வெலேரியா தொலைதூரத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார் என்ற காட்சியுடன் படம் முடிவடைகிறது.

கட்டுரையாளர்

தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT