இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: மகனுக்கு ‘வால்டர்’

செய்திப்பிரிவு

சத்யராஜ் திரை வாழ்க்கையில் அவருக்குப் பெயர் பெற்றுத்தந்த படங்களில் ஒன்று ‘வால்டர்’ வெற்றிவேல். அதிலிருந்து ‘வால்டர்’ என்ற பெயரை மட்டும் எடுத்துத் தலைப்பாக்கியிருக்கும் படத்தில் சிபிராஜ் காவல் அதிகாரி வேடத்தில் மிரட்டியிருக்கிறாராம். “இந்த ‘வால்டர்’ சிபிராஜுக்கு முக்கியமான படங்களில் ஒன்றாக ஆகிவிடும்” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் யு.அன்பு. “தமிழகத்தில் நடந்து வரும் குழந்தைக் கடத்தல் பின்னணியைக் களமாகக்கொண்டு அழுத்தமான திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதும் முன் குழந்தைக் கடத்தலின் பின்னணியைக் கள ஆய்வு செய்தபோது மாரடைப்பு வராததுதான் மிச்சம். அந்த அளவுக்கு அதிர்ச்சியடைய வைத்த யதார்த்தம், இந்தப் படத்தை ஒரு விழிப்புணர்வுத் திரைப்படமாகத் தரவேண்டும் என என்னைத் தூண்டியது” என்கிறார் இயக்குநர். இதில் நட்டி நடராஜ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்க, இன்ப அதிர்ச்சியாக ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது படம்.

உதயநிதிக்கு நிதி!

‘சைக்கோ’ படத்தின் வெற்றியில் மெய்மறந்துவிடாமல் அடுத்த வெற்றிக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் நிதி அகர்வால்.

இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று வரிசையாக எல்லா மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வால், தற்போது லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்து முடித்திருக்கும் ‘பூமி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து, தமிழில் அறிமுகமாகிறார்.

மனத்தைக் கவ்வும் பன்றி!

“சூது கவ்வும், மரகத நாணயம், மூடர் கூடம் போன்ற அவல நகைச்சுவைப் படங்களின் வரிசையில் எங்கள் படம் நிச்சயமாக இடம்பிடிக்கும்” என்கிறார் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ என்ற படத்தை இயக்கியிருக்கும் பாலா அரண். கதையைப் பற்றிக் கேட்டபோது “பத்தாம் நூற்றாண்டு சீன தேசம். அங்கே ஒரு துறவி இறக்கும் தறுவாயில் தன்னுடைய சீடரிடம் சக்தி வாய்ந்த பன்றி சிலை ஒன்றைக் கொடுக்கிறார். அந்தச் சிலையை அடையும் நோக்கத்துடன் அந்தச் சீடனை எதிரிகள் துரத்த, அவர் தப்பியோடி இந்தியாவுக்கு வந்து சேர்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்தியாவில் தொல்லியல்துறை ஆய்வில் அந்தப் பன்றி சிலை கண்டுபிடிக்கப்பட்டாலும், கொள்ளை போய்விடுகிறது. அதைப் பற்றிய மூன்று வரிகள் கொண்ட ஒரு சிறு குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு மூன்று வெவ்வேறு கும்பல்கள் அந்தச் சிலையைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதுதான் கதை” என்கிறார் இயக்குநர்.

SCROLL FOR NEXT