இந்து டாக்கீஸ்

பாம்பே வெல்வெட் 25: செத்தும் சாதித்த ஸ்மிதா

செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.லெனின்

ஷோபாவுக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘பசி’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் நடித்தவர் ஸ்மிதா பாட்டீல். தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஷோபா ஏற்படுத்திய தாக்கத்தை பாலிவுட்டில் சாதித்தவர்.

ஷோபா போலவே இளம்வயதிலேயே திரைவாழ்வின் உச்சத்திலிருந்த ஸ்மிதா பாட்டீலின் அகால மரணமும் நிகழ்ந்தது. அவர், பாலிவுட்டில் வலம் வந்த பத்து வருடங்களில் ஒரு நூற்றாண்டுக்கான நடிப்பை வழங்கிச் சென்றிருக்கிறார். வெகுஜனத் திரைப்படங்களில் மட்டுமல்ல; மாற்று, கலைப் படங்களிலும் சாதித்தவர்.

ஸ்மிதாவுடைய ஆளுமையின் பின்னணி, அவரது குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. ஸ்மிதாவின் தந்தை பம்பாய் மாகாண அரசியல்வாதியாகவும் தாய் சமூக ஆர்வலராகவும் இருந்தனர். இரண்டு சகோதரிகளுடன் பிறந்த ஸ்மிதா, பெற்றோரின் முற்போக்கான சிந்தனையோட்டத்திலே வளர்ந்தார்.

கல்லூரி முடித்ததும் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளரானார். தொலைக்காட்சியில் அவரது கண்ணியமான தோற்றத்தையும் பார்வையின் வீச்சையும் பார்த்து, மராத்தி திரைப்பட வாய்ப்புகள் வந்தன. சினிமாவுக்கு எதிரான சிந்தனை கொண்டிருந்த குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, வெகுஜன ரசனையிலிருந்து வேறுபட்டு நின்ற, கலைப் படங்களில் மட்டுமே தோன்றினார் ஸ்மிதா.

நாளோட்டத்தில் அதுவே தனது பாதை என்றும் கண்டுகொண்டார். ஷியாம் பெனகல் தனது ‘நிஷாந்த்’ (1975) திரைப்படம் வாயிலாக ஸ்மிதாவுக்கான பாலிவுட் கதவைத் திறந்தார். தொடர்ந்து ஷியாம் பெனகலின் ‘சரந்தாஸ் சோர்’, ‘மந்தன்’, ‘பூமிகா’ போன்ற திரைப்படங்களில் தோன்றி மாற்றுத் திரைப்படங்களின் பிரதான நடிகையாக ஸ்மிதா பெயர் பெற்றார்.

இயல்பான பெண்களின் அடையாளம்

ஷியாம் பெனகலைத் தொடர்ந்து கோவிந்த் நிஹ்லானி, சத்யஜித் ரே, ஜி.அரவிந்தன், மிருணாள் சென் எனப் பல மொழிகளில் சமகாலத்தின் சிறந்த இயக்குநர்களின் படங்களில் ஸ்மிதா வலம் வந்தார். அவர்களைத் தவிர்த்து பரீட்சார்த்த படங்களுக்கான ராஜபாட்டையில் கால்வைக்கும் புதிய இயக்குநர்களும் ஸ்மிதாவை நம்பி வந்தார்கள். தனக்கெனக் கதைகளை உருவாக்கும் அளவுக்கு இயக்குநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

அரிதாரமற்ற இயல்பான பெண்கள், நடுத்தர வகுப்பினர், வயல்வெளியிலும் அலுவலகத்திலும் உழைக்கும் சாமானியப் பெண்கள் ஆகியோரை ஸ்மிதா சித்தரித்த விதம் இன்றளவிலும் விதந்தோதப்படுகிறது. இந்திய மண்ணுக்கே உரிய நிறமும் ஆழமான கண்களின் வாயிலான நடிப்பும் ஸ்மிதா ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களை சிடுக்கின்றி வெளிப்படுத்த உதவின.

மரணத்துக்குப் பின்னரும்...

சினிமாவுக்கு அப்பாலும் தனது சிந்தனையோட்டத்துடன் தொடர்புடைய சமூகப் பணிகளில் ஸ்மிதாவுக்கு ஆர்வம் இருந்தது. பம்பாயின் பெண்ணிய இயக்கங்களுடன் கைகோத்துக் களப்பணிகளில் ஈடுபட்டார். அக்காலத்தில் திரையிலிருந்து தரையில் கால் பதித்து ஸ்மிதா மேற்கொண்ட சேவைகளும், தெரிவித்த கருத்துகளும் பொதுவெளியில் தாக்கங்களை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் அவரது திரைவாழ்வின் தேக்கத்துக்கும் அவை காரணமாயின.

மாற்றுத் திரைப்படங்களில் தான் தவிர்க்கப்படுவதாக உணர்ந்ததும், பதிலடியாக வெகுஜனத் திரைப்படங்களின் வாய்ப்புகளை அள்ளினார். எவரும் எதிர்பாராத வகையில் வெகுஜனத் திரைப்படங்களின் வர்த்தகத்தைத் தீர்மானித்ததுடன் அமிதாப் பச்சன் போன்ற சமகாலத்தின் உச்ச நடிகர்களுடன் ஒரு சுற்று வந்தார். அகால மரணம் குறுக்கிடும்வரை அவரது திரைப் பயணத்தில் வேகத்தடைகள் எவையுமில்லை.

அந்த மரணத்தால்கூட ஸ்மிதாவின் சினிமாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஸ்மிதா பாட்டீல் இறந்த பிறகும் அவர் நடித்த டஜன் திரைப்படங்கள் வரிசையாக வெளியாயின; அவற்றில் பல வசூலை வாரிக்குவித்தன. அமிதாப் பச்சனுடன் இணைந்த ‘நமக் ஹலால்’ (1981), ‘சக்தி’ (1982), தர்மேந்திராவுடன் இணைந்த ‘குலாமி’ (1985) உட்பட வெற்றிகரமான வெகுஜனத் திரைப்படங்களிலும் ஸ்மிதா இருந்தார். ‘நமக் ஹலா’லில் அமிதாப்புடன் கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்டது, ஸ்மிதாவின் சீரிய ரசிகர்களால் செரிக்க முடியாது போனாலும் பாலிவுட்டின் முன்னணி நாயகியர் பட்டியலில் ஸ்மிதாவையும் சேர்த்தது.

அஸ்தமித்த கலைக் கனவு

கலைத்தாகம் கொண்ட பெண்ணாக சினிமாவில் பரிமளித்தபோதும், திரைக்கு வெளியில் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை சிறப்பாக அமையவில்லை. உடன் நடித்த ராஜ் பப்பரைத் திருமணம் செய்துகொண்டது ஸ்மிதாவின் நிம்மதியைப் பறித்தது. ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் வாழ்ந்த ராஜ் பப்பருடனான மண வாழ்க்கை துயரங்களைக் குவித்தது.

மணமான நடிகர்களை மணக்கும் நடிகையர் எதிர்கொண்ட அதே தூற்றுதலுக்கு ஸ்மிதாவும் ஆளானார். இது ஸ்மிதாவின் உறுதியையும் இயல்பையும் குலைத்தது. பொதுவெளியில் தனது பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தடுமாறிய அவரின் ஆரோக்கியமும் சிதைந்தது. 31 வயதில் பேறுகாலத்தின்போது ஸ்மிதா உயிரிழந்தார்.

எரி நட்சத்திரத்தின் தீராத வெளிச்சம்

ஷியாம் பெனகல் இயக்கிய ‘பூமிகா’, ஸ்மிதாவின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாகும். தேவதாசி பாரம்பரியத்தில் பிறந்து சினிமா நடிகையாக உயரும் நாயகி, ஆணாதிக்கவாதிகளின் மத்தியில் இயல்பான வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்ணாகப் பல அடுக்கிலான நடிப்பை வழங்கியிருப்பார். இன்றைக்கும் பேசப்படும் திரைப்படமாக நீடிக்கும் ‘பூமிகா’வில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்மிதாவுக்குக் கிடைத்தது.

தொடர்ந்து குடிசைவாழ் பெண்ணின் இயல்பான சித்திரத்தைப் பிரதிபலித்ததற்காக ‘சக்ரா’ (1981) திரைப்படம் இரண்டாம் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மலையாளத்தில் இயக்குநர் ஜி.அரவிந்தனின் ‘சிதம்பரம்’ திரைப்படத்தில், வெகுளியான தமிழ்ப் பெண்ணாக வளையவரும் சிவகாமி கதாபாத்திரம் பல சாயல்களில் ஷோபனாவை நினைவுபடுத்தும்.

ஸ்மிதாவின் இறப்புக்குப் பின்னர் வெளியான ‘மிர்ச் மசாலா’ (1987) திரைப்படத்தில் அவரது நடிப்பை சிலாகித்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை, தனது இந்திய சினிமாவின் நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டில் ‘இந்திய சினிமாவின் 25 மிகச்சிறந்த நடிப்பு ஆளுமைகளின் பட்டிய’லில் ஸ்மிதாவையும் சேர்த்தது.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT