இந்து டாக்கீஸ்

திரைவிழா முத்துகள்:  உறவைத் துளைத்த தோட்டா

செய்திப்பிரிவு

ரிஷி

பதினேழாம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 2019 டிசம்பர் 15 அன்று கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட படம் ‘எ சன்'. ‘பிக் கெனெய்: அ பிஸ்' என்பது இதன் அசல் தலைப்பு. பிரெஞ்சு நாட்டிலிருந்து 1956-ல் விடுதலை பெற்ற அரபு நாடு துனிசியா. 2011-ல் அந்நாட்டின் அதிபராக இருந்த பென் அலி காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகப் பொழுதில் இந்தப் படத்தின் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

அடிமைமுறையை ஒழித்த முதல் அரேபிய நாடு துனிசியா; அதுதான் மகளிருக்கு முதல் வாக்களிக்கும் உரிமையைத் தந்த அரபு நாடு; முறைப்படியான தேர்தலை நடத்தியது அது. அதே நாட்டில்தான் திருமணம் கடந்த உறவுக்கெதிரான சட்டமும் கடுமையாக உள்ளது. திருமணம் கடந்த உறவு நிரூபணமானால் ஐந்தாண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டமும் அமலிலுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் மெஜி பசௌவ்வி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

துனிசியா, பிரான்ஸ், லெபனான், கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்தப் படம் அரேபிய, பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. மெஜி பசௌவ்வியின் முதல் படம் இது. படத்தின் திரைக்கதையில் மனித உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. உணர்வின் தளத்திலேயே படம் நகர்ந்துசெல்கிறது. அரசியல், சமூகம், மதம், தனிமனித உறவு, உணர்வு ஆகிய அம்சங்களை இணைத்தோடும் திரைக்கதையில் ஒரு படகுபோல் ஏற்ற இறங்கங்களுடன் பயணம்செல்கிறது படம்.

ஃபேர்ஸ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலர். அவருடைய மனைவி மெரியெம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உயரிய பொறுப்பில் பணியாற்றுகிறார். மெரியெம் மனிதவளத் துறையின் இயக்குநராகப் பதவி உயர்த்தப்படுகிறார். அதைத் தெற்கு துனிசியாவில் ஓரிடத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி உற்சாகமாகக் கொண்டாடுகிறார்.

கொண்டாட்டம் முடிந்து தங்கள் பிரியத்துக்குரிய மகன் அஜீஸுடன் தங்களது சொகுசு காரில் திரும்புகிறார்கள். காட்சியிலும் பின்னணியிசையிலும் அவர்களது உற்சாகமான மனநிலையை உணர முடிகிறது. மகிழ்ச்சியான அந்தப் பொழுதில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்தும் தாக்குதலில் புறப்பட்டுவந்த தோட்டா ஒன்று காரைப் பதம் பார்க்கிறது. அது காரோடு போயிருந்தால் கவலை இல்லை. தங்கள் ஆசை மகனைத் துளைத்துவிட்டு ஓய்வுகொள்கிறது அந்தத் தோட்டா.

எல்லாமும் ஒரு நொடியில் மாறிவிடுகிறது. அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சட்டென்று பதங்கமாகிவிடுகிறது. அன்புப் புதல்வனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அடுத்த தோட்டா அங்கே காத்திருக்கிறது. இந்தத் தோட்டா எந்த உடம்பையும் துளைக்கவில்லை.

ஆனால், மனங்களைத் துளைத்தெடுக்கிறது. அஜீஸின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கல்லீரலை மாற்றியாக வேண்டும் என்கிறார் மருத்துவர். அதற்காக மேற்கொண்ட டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிப்படுகிறது. இதுவரை தனது மகன் என்று நம்பிய மகன் தன் மகனல்ல எனும் உண்மை ஃபேர்ஸின் அடிவயிற்றைக் கலக்குகிறது.

அந்த உண்மை ஃபேர்ஸ், மெரியெம் இடையிலான அன்பையும் இணக்கத்தைம் கேள்விக்குறியாக்குகிறது. ஏதோவொரு ஆயுதத்தில் யாரோ ஒருவர் ஏவிய துப்பாக்கிக் குண்டு அந்தத் தம்பதியின் சுமுக உறவைத் துளைத்துவிடுகிறது. துனிசியா நாட்டின் சூழலை இந்தக் குடும்பம் பிரதிபலிக்கிறது. இப்படிப் பயங்கரவாதச் செயலால் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. படம் அரசியல் பிரச்சினையைத் தொட்டுச் செல்கிறது. ஆனால், அத்துடன் மட்டும் நிற்கவில்லை. பெண் விடுதலை, உறுப்பு மாற்று சிகிச்சை, இஸ்லாம் அங்கீகரிக்காத ஆண் பெண் உறவு குறித்த பல அம்சங்களையும் தனித்தனி அடுக்குகளாகப் படம் கொண்டுள்ளது.

முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் சமி பவ்ஜிலா, நஜிலா பென் அப்துல்லா இருவரும் ஒரு தம்பதியாகத் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தன் மகனைக் காப்பாற்ற முடியாமல் கையறு நிலையில் நிற்கும் வேதனையையும், கணவனது நடவடிக்கைகளில் சந்தேகம் தொனித்தபோதும் அதை முழுமையாகக் கேள்வி கேட்க முடியாத நிலையையும் முழுமையாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். அதேபோல் சமி பவ்ஜிலாவும் படுக்கையில் குற்றுயிராகக் கிடப்பவன் தனக்குப் பிறந்தவனல்ல என்ற உண்மையை அறிந்தபிறகும் வளர்த்த பாசத்தால் அவனைக் காப்பாற்றத் துடிக்கும் துடிப்பைத் திறம்பட வெளிக்காட்டியுள்ளார்.

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மனிதர்களைக் கிஞ்சித்தும் இரக்கவுணர்வின்றி ஒரு கூட்டம் பயன்படுத்தும் தன்மையைப் படம் சுட்டுகிறது. அரசியல், மதக் கொள்கைகள் எப்படித் தனிமனித வாழ்வைக் கூறுபோடுகின்றன என்பதை இந்தப் படம் மிகவும் நாகரிகமாகவும் அதே வேளையில் நுட்பமாகவும் மனிதநேய உணர்வு தொனிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT