இந்து டாக்கீஸ்

ஹேராம் 20 ஆண்டுகள்: வரலாற்றிலிருந்து ஓர் எச்சரிக்கை!

செய்திப்பிரிவு

ச.கோபாலகிருஷ்ணன்

தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை யின்போது ஏற்பட்ட வன்முறைக்குத் தன் மனைவியைப் (ராணி முகர்ஜி) பறிகொடுகிறான் இந்துவான சாகேத் ராம் (கமல்). இஸ்லாமியர்களுக்கு ‘அளவுக்கதிகமான இடம் கொடுத்த’ மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் தனது இழப்புக்குக் காரணம் என்று இந்துத்துவக் குழுக்களால் அவன் மூளைச் சலவை செய்யப்படுகிறான். மனைவியை இழந்துவிட்ட வேதனையும் பழிவாங்கும் உணர்வும் மூளைச் சலவையும் சேர்ந்து இஸ்லாமியர்களையும் காந்தியையும் அவன் வெறுக்கத் தொடங்குகிறான்.

நண்பன் லால்வானியின் (செளரப் சுக்லா) குடும்பம் சிதறுண்டதை அறிந்த பின், அந்த வெறுப்பு வலுவடை கிறது. காந்தியைக் கொல்லும் பணிக்கு இந்துத்துவ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறான். காந்தியைக் கொல்லச் செல்லும்போது, அவனுடைய நண்பனும் காந்தியைப் பின்பற்றுபவனுமான அம்ஜத்தின் (ஷாருக் கான்) மரணம் அவனை உலுக்குகிறது.

மதவெறியால் ஏற்படும் இழப்புகளை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்புக் கேட்கச் செல்லும்போது நாதுராம் கோட்ஸேவால் காந்தி கொல்லப்பட்டுவிடுகிறார். அதே இடத்தில் கோட்ஸேயைக் கொல்ல நினைப்பவன், காந்தியின் அகிம்சைக் கொள்கையை உள்வாங்கியவனாகத் துப்பாக்கியைக் கீழே போடுகிறான். காந்தியின் மரணத்தால் சாகேத் ராமுக்குள் இருந்த மனிதன் மீட்கப்படுகிறான்.

தீர்க்கதரிசனமாய் ஒரு திரைப்படம்

கமலின் பல படங்கள் ‘காலத்தால் முந்தியிருப்பவை’ என்று கூறப்படுவதுண்டு. இந்தக் கூற்று அவருடைய மற்ற படங்களுக்கு பொருந்துகிறதோ, இல்லையோ ‘ஹே ராமு’க்குக் கண்டிப்பாகப் பொருந்தும். இருபது ஆண்டுகளுக்கு முன், தமிழ்ச் சமூகம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய வன்முறையை வெறும் செய்திகளாக வும் வரலாற்றுப் பாடங்களிலும் மட்டுமே அறிந்திருந்தது. பொதுவாக, மதவாத வன்முறையும் தமிழ் மண் ணுக்கு அந்நியமானதாக இருந்தது.

“கோட்ஸே இந்தியனா சார். பேர வெச்சி அவர் வெளிநாட்டுக்காரர்னு நெனச்சிக் கிட்டுருந்தேன்” என்று படத்தில் பணியாற்றிய ஒரு இளைஞர் கமலிடம் கூறினாராம். மதவாத அரசியலின் கொடிய விளைவுகள் குறித்து எச்சரிப்பதற்காகவே வரலாற்றின் துணைகொண்டு இந்தப் படத்தை எடுத்ததாக கமல் கூறினார்.

இன்று இந்தியாவின் பல பகுதிகளில் மதத்தின் பெயரால் வன்முறையும் கொலைகளும் நடக்கின்றன. இஸ்லாமியர் களுக்கென்று தனி நாடாக பாகிஸ்தான் பிரிந்து சென்றாலும் “நாங்கள் இங்கேதான் இருப்போம்” என்றும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் தாய் மண்ணைப் பிரியமாட்டோம் என்றும் இங்கேயே தங்கிய இஸ்லாமியர் களின் வழித்தோன்றல்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கி றார்கள்.

கோட்ஸேவை நாட்டுப் பற்றாளராகவும் தியாகியாகவும் கொண்டாடுபவர்கள் அதைப் பெருமிதத்துடன் பொதுவெளியில் பதிவு செய்கிறார்கள். உண்மையின் துணைகொண்டு ‘ஹே ராம்’ காட்சிப் படுத்திய சாகேத் ராமின் கற்பனை கலந்த வரலாறு, வேறு வடிவத்தில் இங்கே அரங்கேறிவருகிறது. அதன் சூடு, ஒப்பீட்டளவில் தமிழகம் போன்ற மதநல்லிணக்கம் மிக்க பகுதிகளிலும் உணரப்படுகிறது.

இந்துத்துவ எதிர்ப்பா, ஆதரவா?

‘ஹே ராம்’ வெளியானபோது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்றுவரை அப்படம் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுவருகிறது. காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை அம்பலப் படுத்தியதற்காகப் படத்தைப் பலர் பாராட்டினார்கள். இது ‘இந்துத்துவத்துக்கு எதிரான படம்’ என்றும் ‘இந்துத்துவ ஆதரவுப் படம்’ என்றும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அடித்தளமிடும் சித்தாந்தம் எப்படி இயங்குகிறது, வெறுப்பு எப்படித் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது, இவற்றால் பயன் பெறக்கூடிய அரசியல் தரப்பினர் யார் என்பதையெல்லாம் விரிவாக விளக்கிய படம் ‘ஹே ராம்’. வாள்களும் துப்பாக்கிகளும் வெறும் கருவிகள்; அவற்றைப் பின்னாலிருந்து இயக்கு பவை வெறுப்பை ஊக்குவிக்கும் சித்தாந்தங்களும் கதையாடல்களுமே என்பதை வலியுறுத்துவதாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

மேலும், படத்தில் இந்துவான சாகேத் ராம் மையக் கதாபாத்திரம் (Protagonist) என்றாலும், அம்ஜத்தான், ராமைவிட உயர்வான குணங்களைக் கொண்டவன். அம்ஜத், அவனுடைய நெருங்கிய உறவினர்கள் சிலரின் மரணத்துக்கு சாகேத் ராம் தன்னையறியாமல் காரணமாகிறான். இருந்தாலும், சாகேத் ராமை காவல்துறையிடம் காட்டிக்கொடுக்காமல் அம்ஜத் உயிர் விடுகிறான். அதற்கு முன்பு துப்பாக்கியுடன் அலையும் ராமிடம், காந்திக்குப் பதிலாக தன் உயிரை எடுத்துக்கொள்ளக் கோருகிறான்.

அம்ஜத்தின் உயிர்த் தியாகமே சாகேத் ராமை மதவெறுப்பிலிருந்து விடுவிக்கிறது. இந்த உயர்ந்த நிலையை அம்ஜத் அடைவது அன்பையும் அகிம்சையையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்திய காந்தியின் சித்தாந்தத்தை அவன் பின்பற்றுவதால்தான். அந்த வகையில் படத்தின் நாயகர்கள் (Hero) காந்தியும் அவரைப் பின்பற்றும் அம்ஜத்தும்தான்.

இயக்குநரும் நடிகரும்

காந்தியைக் கொல்வதற்காகக் குடும்பத்தைப் பிரிந்து டெல்லிக்குச் செல்லும் முன்பாக வாராணசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி துறவறம் ஏற்கிறான் சாகேத் ராம். துறவறச் சடங்குகள் காண்பிக்கப் படுகின்றன. இது இல்லாமலிருந்தாலும் கதையோட்டத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், துறவறம் போன்ற புனிதமான விஷயங்கள் கொலைகளைப் புனிதப்படுத்தவும் சிலரால் பயன்படுத்தப்படுவதைச் சுட்டுவதற்காகவே இந்தச் சடங்குக் காட்சி வைக்கப்பட்டிருக்கலாம். காந்திதான் படத்தின் நாயகன் என்பதை விளக்கும் விதமாக அவர் மரணத்துக்குப் பின் நடக்கும் அனைத்தையும் கறுப்பு-வெள்ளையில் சித்தரித்திருப்பார் இயக்குநர் கமல்.

மனைவியின் இறப்புக்குப்பின் நடைப்பிணம்போல் திரிவதாகட்டும், வன்முறையின் கோர விளைவுகளைப் பார்த்து அருவருப்பின் உச்சத்தில் ஓடுவதாகட்டும், அம்ஜத்தின் மரணத்துக்குப் பின்னான குற்ற உணர்வால் புழுங்குவதாகட்டும் கமலின் உயிரோட்டமான நடிப்பு, சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் திரு, கலை இயக்குநர் சாபு சிரில் ஆகியோருடன் நசீருதீன் ஷா, ஓம் புரி, ஹேமமாலினி உள்ளிட்ட நடிகர்களைப் பயன்படுத்திய விதத்திலும், பிரிவினைக்குப் பிறகான கொல்கத்தா கலவரத்தில், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட வன்முறைகள் நிகழ்த்தி, சக மக்களை இஸ்லாமியரில் ஒருதரப்பினர் கொன்று போட்டதையும் சமரசம் இன்றி சித்தரித்துக்காட்டிய வகையில் ஒரு சிறந்த இயக்குநராகவும் கமல் வெளிப்பட்ட படம்.

அந்த வகையில் கமல்ஹாசனின் நெடிய திரை வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் ‘ஹே ராம்’ மிக முக்கியமான படம் மட்டுமல்ல; வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவும் பிரிவினைகளில் இருந்து விலகியிருக்கவும் அழைப்பு விடுக்கும் சிறந்த கலைப் படைப்பும்கூட.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT