‘புலன் விசாரணை’ 
இந்து டாக்கீஸ்

தரமணி 14: துணிவின் குரல்

செய்திப்பிரிவு

ஆர்.சி.ஜெயந்தன்

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்ற அடையாளத்துடன், தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்ட வணிக வெற்றிகளை முதன் முதலில் ருசித்தவர்கள் ஆபாவாணனும் அரவிந்தராஜும். அவர்களுக்குப் பின் தொடர் வெற்றிகளை அறுவடை செய்தவர் ஆர்.கே.செல்மணி.

முழுமையான பொழுதுபோக்குத் தன்மையைக் கொண்டிருந்தாலும், அரசியல், சமூக மாற்றங்களை விரும்பும் நாயக பிம்பம் கொண்ட மையக் கதாபாத்திரங்களை இவரது படங்கள் முன்வைத்தன. சமூகக் கட்ட மைப்புக்கு உட்பட்டு, மிகை நாயகத் தன்மையுடன் இவருடைய கதாநாயகர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

குற்றவுலகுடன் தொடர்புகளைப் பேணி, சொந்த ஆதாயத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பிரபல மனிதர்களின் அடையாளங்களை எதிர்மறைக் கதாபாத்திரங்களில் துணிந்து பொருத்தியவர். அவ்வகையில் வெகுஜன வணிக சினிமாவில் படைப்புச் சுதந்திரத்துடன் செயல்பட்டவர் என செல்மணியை அடையாளப்படுத்தலாம்.

குற்றவுலகின் நேரடிச் சாயலை செல்வமணியின் கதைக் களங்கள் கொண்டிருந்தது, நேரடி அரசியல் விமர்சனம் செய்தது என தொண்ணூறுகளின் இயக்குநர்கள் மத்தியில் அவர் துணிவின் குரலாக ஒலித்தார். செல்வமணியின் திரைமொழி என்பது வசனம், வணிக அம்சங்கள், பிரம்மாண்டக் காட்சியமைப்பு ஆகிய மூன்று கூறுகளின் கீழ் மையங்கொள்வது. பெரும்பாலும் பாலிவுட், ஹாலிவுட் வணிகப் படங்களின் மூன்று அங்க திரைக்கதை முறையைப் பின்பற்றி, பார்வையாளர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கும் பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார்.

தணிக்கையின் கைதி

தமிழ் வெகுஜன சினிமாவோ மாற்று முயற்சிகளோ எந்த வகை சினிமாவாக இருந்தாலும், அதிகார வர்க்கத்தின் விசுவாசி அமைப்பாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் படங்களை அணுகுவதாகவும் விமர்சிக்கப்படும் தணிக்கையின் கண்களில் ஒரு கைதியைப் போலச் சிக்குண்டவர்களில் ஆர்.கே.செல்வமணியும் ஒருவர்.

இவரது முதல் படமான ‘புலன் விசாரணை’யில் ஆட்டோ சங்கரைப் போன்ற குற்றவாளி, உடல் உறுப்புகளைத் திருடும் கார்ப்பரேட் மருத்துமனை, ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம், ’அதிரடிப் படை’யில் ஆளும் வர்க்கத்தின் நில அபகரிப்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சை நினைவூட்டும் கதாபாத்திரச் சித்தரிப்பு, ‘மக்களாட்சி’ படத்தில் கார்ப்பரேட் முதலாளி ஒருவரால் அலைக்கழியும் மாநில அரசியல், அனுதாப அரசியல், ‘குற்றப் பத்திரிகை’ படத்தில் ராஜீவ் காந்தியின் மரணத்தையொத்த ஒரு அரசியல் தலைவரின் படுகொலையைப் பின்னணியாக வைத்தது என்று மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்திய உண்மைச் சம்பவங்களையும் மனிதர்களையும் கதைக் களத்துக்குள் துணிந்து எடுத்தாண்டார்.

மொத்தம் 14 ஆயிரம் அடி நீளத்துடன் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இவரது ‘குற்றப்பத்திரிகை’ படத்துக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் பெரும் சட்டப் போராட்டத்துக்குப்பின் 6 ஆயிரம் அடிகள் வெட்டுக்களை அந்தப் படத்துக்குப் பரிந்துரைத்தது தணிக்கைத் துறை. வெட்டுக்களுக்குப் பின் குற்றுயிராகப் படம் வெளியாகிப் பார்வையாளர்களின் ஆதரவைப் பெறமுடியாமல்போனது.

என்றபோதும், சமகாலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் சம்பவங்களுடன் பொழுதுபோக்கு அம்சங்களைச் சரியான விகிதத்தில் கலந்து, பிரம்மாண்ட காட்சி அமைப்புகளுடன் விறுவிறுப்பு குன்றாத வணிக சினிமாக்களை எப்படிப் படைப்பது என, இவர் போட்டுக் கொடுத்த பாதையைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்திருப்பதே ஆர்.கே.செல்வமணியின் வெற்றி எனலாம்.

தமிழாசிரியரின் மகன்

செங்கல்பட்டு அருகில் உள்ள திருமக்கூடல் என்ற கிராமம்தான் செல்மணியின் சொந்த ஊர். இவரது அப்பா கல்யாணசுந்தரம் ஒரு தமிழாசிரியர். கண்டிப்பானவர். சிறு பிள்ளைகள் சினிமா பார்த்தால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று நம்பியவர். அதனால் பள்ளிப்பருவத்தில் திரைப்படம் பார்க்கத் தடை விதித்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்து சென்னை குருநானக் கல்லூரியில் இளங்கலைக் கணிதம் படித்தார் செல்வமணி. பின் அப்பாவின் வற்புறுத்தலால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ்’ பாடத்தில் முதுகலை பயின்று வந்தார். அங்கே படித்துக்கொண்டே, தனது அப்பாவுக்குத் தெரியாமல் திரைப்படக் கல்லூரியில் இயக்கப் பிரிவில் சேர்ந்தார். இதனால் அண்ணா பல்கலைக்கழக வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ‘உங்கள் மகன் இந்த ஆண்டு தேர்வு எழுத முடியாது. அவரது வருகைப்பதிவு குறைவாக உள்ளது’ என்று பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டுக்குக் கடிதம் சென்ற பிறகு செல்வமணியின் குட்டு உடைந்துவிட்டது.

அப்பாவின் கோபத்தைச் சம்பாதித்த செல்வமணி, எப்படியாவது திரையுலகில் வென்றுகாட்டும் வைராக்கியத்துடன், திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டே விஜயா வாஹினி ஸ்டுடியோவின் எடிட்டர் கந்தசாமியிடம் எடிட்டிங் உதவியாளராகச் சேர்ந்தார். மதியம்வரை கல்லூரி, பிற்பகல் முதல் எடிட்டிங் உதவி எனப் பணிபுரிந்து வந்தார். இதனால் திரைப்படக் கல்லூரி வகுப்புகளிலும் கவனம் செலுத்த முடியாத நிலை. இந்தச் சமயத்தில் கந்தசாமியின் பரிந்துரையுடன் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

திரைப்படக் கல்லூரின் அருமை

மணிவண்ணனின் அன்பைப் பெற்று அவரிடம் முதன்மை உதவி இயக்குநராக உயர்ந்தார். ஒருநாள் படப்பிடிப்பில் கேமராவின் ‘வியூபைண்டர்’ வழியாகக் கோணம் பார்த்தார் உதவி இயக்குநர் செல்வமணி. அப்போது கேமரா உதவியாளராக இருந்த ஒருவர் ஓடிவந்து, செல்வமணியின் சட்டைக் காலரை பிடித்து இழுத்து, ‘நீயெல்லாம் வியூபைண்டரில் பார்க்கக் கூடாது’ என்று சொல்லித் தள்ளிவிட, அதைப் பெரிய அவமானமாக உணர்ந்தார் செல்வமணி.

அப்போதுதான் தான் படித்து வந்த திரைப்படக் கல்லூரியின் அருமை பெருமையை அவர் உணர்ந்தார். அதன்பிறகு காலையில் 9 மணிக்குத் திரைப்படக் கல்லூரிக்குள் நுழைந்தால் மாலை 6 மணிக்குத்தான் வெளியே வருவார். அங்கே என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உண்டோ அத்தனையையும் பயன்படுத்தி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், படச்சுருள் பதனிடல், மூவியாலா என அனைத்தையும் கற்றுக்கொண்டார். தரமணி திரைப்படக் கல்லூரி எத்தனை பெரிய கொடை என்பதை உதவி இயக்குநராக நடைமுறையில் பணிபுரிந்தபோது உணர்ந்தார்.

தொழிற்சங்கவாதி

தனது முதல் படமான ‘புலன் விசாரணை’ படத்தின் முதல் பிரதி திரையிடலைப் பார்க்க அப்பா, அம்மாவுடன் வந்தபோது அவரைப் பார்க்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார் தயாரிப்பாளர். அந்தப் படத்துக்கு 14 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றார். ஆனால், “எனது உண்மையான ஊதியம் அந்தப் படத்துக்குச் செலவிட்ட ஒரு கோடியும் சேர்த்து ஒருகோடியே 14 ஆயிரம் ரூபாய்” என்று நினைத்துக்கொள்வேன்” என்கிறார் செல்வமணி.

இவர் அறிமுகப்படுத்திய சரத்குமார், ரோஜா இருவரும் மிகப் பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்தார்கள். பெரிய நடிகர்கள் இல்லாமல் வெற்றி கொடுத்தால் மட்டுமே இயக்குநராக நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டு, தனது மூன்றாம் படமான ‘செம்பருத்தி’யைப் புதுமுகங்களைக் கொண்டு இயக்கி வெற்றிகொடுத்தார்.

திரைப்பட இயக்குநர் என்பதைத் தாண்டி, ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதில் தொடங்கி, தமிழக மக்களின் நலனுக்கு எதிரான எதன் பொருட்டும் காலம் கடத்தாமல் குரல் கொடுக்கக் கூடியவர்களில் செல்வமணியும் ஒருவர். 2500 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்துக்குச் செயலாளர், தலைவர் பொறுப்புகளுக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் இவர், தற்போது தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான பெப்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். திரைப்படத் தொழிலாளர்களுக்காக பையனூரில் அரசு வழங்கிய 50 ஏக்கர் நிலத்தில் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதிலும் அங்கே ஒரு திரைப்பட நகரத்தை உருவாக்குவதிலும் தனது கவனத்தைக் குவித்துச் செயல்பட்டு வருகிறார்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT