மானா
‘சினிமா செய்திகளைப் படிக்கிற ஈர்ப்பு என்றைக்குக் குறைகிறதோ அதுவரையில் நான் எழுதிக்கொண்டே இருப்பேன்’ என்று அறந்தை நாராயணன் தனது புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பார். வாசகனின் அத்தகைய ஈர்ப்பு விசையை நம்பி தஞ்சாவூர்க் கவிராயர் விதைத்திருக்கும் எழுத்துவயல்தான் ‘தரைக்கு வந்த தாரகை’.
இன்று 40-ஐத் தாண்டிய வயதுள்ளோர் அனைவரும் நடிகை பானுமதியை அறிவர். எனினும், இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் சுவாரசியமான நடையில் அந்தச் சகலகலா ஆளுமையின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைச் சுவைபடக் கோத்திருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்காகவும் காத்திருக்கும் ரசனையான சினிமா ஆர்வலர்களுக்காக, ‘இந்து தமிழ்’ நாளிதழ் வழங்கிவரும் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் தொடராக வெளியான கட்டுரைகள் புத்தகமாகியிருக்கின்றன.
சாதாரணமாக ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறபோது, அதில் அந்த மனிதரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் அம்சம்தான் எதிரொலிக்கும். தஞ்சாவூர்க் கவிராயர் சிறந்த கவிஞராகவும் சிறந்த கதைசொல்லியாகவும் இருப்பவர். கேட்கவா வேண்டும். பானுமதி வாழ்ந்த காலத்திலேயே அவரைச் சந்தித்து, உரையாடி கிடைத்த பொக்கிஷ நினைவுகளை மீட்டெடுத்து இக்கட்டுரைகளைக் கதை சொல்லும் நுட்பத்துடன் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருப்பதுடன். முப்பது ஆண்டு காலத் தமிழ் சினிமா வரலாறும் இந்த எழுத்துக்களுடன் பின்னிப்பிணைந்து நிற்கிறது.
இத்தொகுப்பில்... சுவையூட்டும் ஒரு செய்தி: “தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கு மொழியில் எழுதிக் கொடுப்பார்கள். நான் அப்படியே தமிழில் பேசுவது போல பேசிவிடுவேன்’’ என்கிறார் பானுமதி.
“தமிழ் வசனங்களை அப்படியே தெலுங்கில் எழுதுவதற்கு இரண்டு மொழிகளிலும் பாண்டித்யம் இருக்கணுமே!” என்கிறார் கவிராயர்.
“உண்மைதான். தெலுங்கிலும் தமிழிலும் புலமைபெற்ற ஒருவர் தெலுங்கில் எழுதி, ஏற்ற இறக்கங்களோடு பேச எனக்குக் கற்றுக்கொடுத்தார். திறமைசாலியான அந்த இளைஞரிடம் ஒருநாள் ‘பிற்காலத்தில் பேரும் புகழும் உங்களைத் தேடிவரப் போகிறது’ என்றேன், ‘நன்றி அம்மா’ என்றார் அவர். பிற்காலத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்த அந்த இளைஞர்தான் இயக்குநர் ஏ. பீம்சிங்!’’ என்று சொல்லி மலர்கிறார் பானுமதி.
இப்படிப் பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியம் தரும் பல திரைச் செய்திகளைக் கொண்டுள்ள இப்புத்தகம் மூத்த தலைமுறைக்குப் பொக்கிஷம். புதிய தலைமுறைக்கு சினிமா புதையல்.
| தரைக்கு வந்த தாரகை தஞ்சாவூர்க் கவிராயர் |