இந்து டாக்கீஸ்

காலையில் மின்னஞ்சல் மாலையில் முன்பணம்! - இயக்குநர் ஜானகிராமன் பேட்டி

கா.இசக்கி முத்து

ரசனையும் கதை அறிவும் கொண்ட தற்காலத் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் சி.வி.குமார். இயக்குநராகவும் தனது திறமையைக் காட்டியவர். அவரது தயாரிப்பு என்றாலே, படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் ‘அதே கண்கள்’ படத்துக்குப் பிறகு ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ படத்தை ஒரே வீச்சில் தயாரித்து முடித்திருக்கிறார்.

எப்போதும்போல் ஜானகிராமன் என்ற புதியவரை இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். வெளியாகியிருக்கும் படத்தின் போஸ்டர்களுக்கும் டீஸருக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு பெருகியிருப்பதைக் கண்டு உற்சாகத்திலிருந்த இப்படத்தின் இயக்குநர் ஜானகிராமனுடன் பேசியதிலிருந்து...

படத்தின் கதையைப் பற்றிக் கூறுங்கள்

மத்தியத்தர வர்க்கப் பையனாக கலையரசன், ஏழையாக காளி வெங்கட், பணக்கார இளைஞராக ராகவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த மூன்று பேருடைய காதல் கதைதான் படம். இப்போதுள்ள நவீன வாழ்க்கையில் காதல் எப்படியிருக்கிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறேன்.

படத்தில் சீரியஸான விஷயமும் நடக்கும், ஆனால் பார்வையாளர்களுக்கு அதுவே சிரிப்பை வரவைக்கும். கலையரசன் தொடர்புடைய காட்சிகளை கொடைக்கானல், ராகவ் தொடர்பான காட்சிகளை சென்னை, காளி வெங்கட் தொடர்பான காட்சிகளை கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் படம்பிடித்துள்ளோம்.

படத்தின் டீஸர் முன்னோட்டத்தைப் பார்த்தால் ‘வயது வந்தவர்களுக்கான நகைச்சுவை’ படம்போல் தெரிகிறதே?

இல்லை. டீஸரில் உள்ள காமெடியைக் கூட நாயகன் யதார்த்தமாகத்தான் சொல்லியிருப்பார். நாயகிதான் தவறாகப் புரிந்துகொண்டிருப்பார். இந்த மாதிரியான காமெடி படத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே இருக்கும். தவறான புரிதலில்தான் இருக்குமே தவிர, வயதுவந்தோர் காமெடியாக இருக்காது. அனைவருமே குடும்பத்துடன் ரசிக்கும்படியான காமெடிப் படமாகத் தான் இயக்கியுள்ளேன்.

முதல் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

உதவி இயக்குநராகச் சேரவே இரண்டரை ஆண்டுகள் ஆயின. சுதா கொங்கரா மேடத்திடம் ‘துரோகி’, பாலாவிடம் ‘அவன் இவன்’, பாலாஜி மோகனுடன் ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு முதல் பட வாய்ப்பு கிடைக்க 4 ஆண்டுகள் ஆயின. 2017-ல் இந்தப் படத்தைத் தொடங்கினேன். கதைச்சுருக்கத்தை சி.வி.குமாருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். அதைப் படித்துவிட்டு மாலையில் அழைத்துப் பேசி முன்பணம் கொடுத்து வேலையைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.

பாலா, சுதா கொங்கரா இருவருமே சீரியஸான இயக்குநர்கள். இவர்களிடம் பணிபுரிந்துவிட்டு காமெடிப் படம் எப்படி?

முதலில் ஒரு சீரியஸான கதையை வைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருந்தேன். அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. முதலில் இயக்குநராக நம்மை நிலைநிறுத்த வேண்டும். அதனால் முதல் படமே தயாரிப்பாளருக்கு சம்பாதித்துக் கொடுக்கக்கூடிய படமாகப் பண்ணலாம் என்று எழுதிய கதைதான் இது. அதேபோல் இவர் காமெடிப் படம்தான் பண்ணுவார் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். காமெடி, ஹாரர், காதல், வரலாற்றுப் புனைவு என அனைத்து ஜானரிலும் படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை.

2017-ல் தொடங்கப்பட்ட படம். தாமதமானபோது அடைந்த விரக்தியிலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

எப்போது வெளியானாலும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் வெற்றியைக் கொடுத்தே தீருவார்கள் என்ற நம்பிக்கைதான். ஏனென்றால் இயக்குநராக நமக்கு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையுடன் எத்தனை நாள் சுற்றியிருக்கிறேன். பத்து வருடக் காத்திருப்புக்குப் பிறகு இயக்குநர் ஆனேன்.

ஆகையால், இந்தத் தாமதம் என்னைப் பாதிக்கவில்லை, என் படத்தையும் பாதிக்காது. வீட்டில்கூட முதலில் சினிமா இயக்குநராக வேண்டாம் என்றார்கள். பாலாவிடம் பணிபுரிந்தபோதுதான் ‘இவன் ஏதோ பண்ணுகிறான்’ என நம்பினார்கள். இப்போது எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அப்பா - அம்மா சொல்லும்போதுகூட, எனக்கு வேறு எதுவும் வேண்டாம் சினிமா தான் வேண்டும் என்று சண்டை போட்டு நம்பிக்கையுடன் வந்தேன்.

அந்த சினிமா என்னைக் கைவிடவில்லை. எனக்கு முதல் வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் முதல் வெற்றியைத் தரப்போகிற ரசிகர்களுக்கும் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். தவறான படங்களை ஒருபோதும் எடுக்கமாட்டேன்.

SCROLL FOR NEXT