சு.சுபாஷ்
உங்கள் மொபைல் நம்பருக்குப் பரிசு விழுந்திருக்கிறது என்றோ வங்கி அட்டை காலாவதியாகப் போகிறது என்பதாகவோ தொடங்கும் செல்ஃபோன் அழைப்புகளைச் செவிமெடுக்காத இந்தியர்கள் குறைவு. வங்கி ஊழியர் போல் பவ்யமாய் பேசி கிரடிட்/டெபிட் கார்டுகளின் எண்கள், அவற்றின் பிரத்யேக ரகசிய எண்ணைக் கறந்த சில நிமிடங்களில் அப்பாவிகளின் வங்கி இருப்பு துடைத்து எடுக்கப்படும்.
டிஜிட்டல் இந்தியாவின் இருட்டு முகமாகக் கடந்த சில வருடங்களாக இந்தியர்களை அச்சுறுத்தி வந்த குற்றச்செயல்களின் பின்னணியில் சுவாரசியமான வலைத்தொடரைப் பின்னியிருக்கிறது, நெட்ஃபிளிக்ஸ் வலைத்தொடரான ‘ஜம்தாரா: சப்கா நம்பர் ஆயேகா’.
ஜார்கண்ட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று ஜம்தாரா. செல்போனையும் சில சிம்கார்டுகளையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு, இங்கிருந்தபடி, இந்தியா நெடுக அப்பாவிகளின் வங்கி இருப்பை அபகரிக்கும் மோசடியைப் பலரும் குடிசைத் தொழில் போல் செய்கிறார்கள். அவர்களில் பலரும் 18 வயது கூடப் பூர்த்தியாகாத பதின்மர்கள். அந்தக் குற்றப் பின்னணியில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவாக விறுவிறுப்பு தருகிறது ஜம்தாரா.
இதற்காக ஜார்கண்ட் மண்ணிலேயே முகாமிட்டு வலைத்தொடரைப் படமாக்கி இருக்கிறார்கள். வனாந்தரக் கிராமவெளிகளில் கூடி, குரலை மாற்றிப் பேசும் இளைஞர்களின் குதூகலத்துடன் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. மறுமுனையில் சிக்குபவர் எவரானாலும் தேனொழுகப் பேசியே கார்டு விவரங்களைக் கறக்கும் சாமர்த்தியம், வயதுக்கு மீறிச் சம்பாதிக்கும் லட்சங்களுடன் தடுமாறும் இளம்பருவம், அவர்களைக் கைக்கொள்ள முயலும் அரசியல் மாபியாக்கள், குற்றவாளிகளுக்குப் பொறிவைக்கும் பெண் எஸ்பி என அத்தியாயங்கள் பரபரக்கின்றன.
பணம் சம்பாதிப்பது, அரசியலில் குதிப்பது எனக் குற்ற இளைஞர்கள் குழுவில் மூளும் கோஷ்டிகள், கிராமங்களில் வேரூன்றிய ஜாதி வேறுபாடு, இவற்றுக்கு மத்தியில் பளிச்சிடும் காதல் எனப் பல தளங்களையும் ஜம்தாராவின் கதை கடந்து செல்கிறது.
ஆனால், இணையக் குற்றங்களை இயக்கும் சர்வதேச வலைப்பின்னணி, பொதுமக்களின் தொலைபேசி எண்கள் ஜார்கண்ட் இளைஞர்களின் கையில் சிக்கும் பாதை உள்ளிட்ட முக்கியமான விவரங்களை வலைத்தொடர் அலசவில்லை. தேசிய விருது பெற்ற இயக்குநர் சௌமேந்திர பதியின் திறமையும் நேர்த்தியும் வலைத்தொடரின் பிரதான பலம். வத்சவா, அனுஷ்மான் புஷ்கர், மோனிகா பன்வர் உள்ளிட்டோர் வலைத்தொடரில் நடித்துள்ளனர்.