இந்து டாக்கீஸ்

திரைவிழா முத்துகள்: ஆலிஸின் உலகம் கண்ணீரால் ஆனது!

செய்திப்பிரிவு

என். கௌரி

ஒரு பாலியல் வல்லுறவுக்குப் பிறகான பின்னணி நிகழ்வுகளை அடித்தளமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இஸ்ரேலியத் திரைப்படமான ‘ஸ்ட்ரிப்டு’ (Stripped -2018).

17-ம் சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம், ‘லவ் ட்ரையாலஜி’ என்ற மூன்று படங்களின் வரிசையில் இயக்குநர் யரோன் ஷனி இயக்கியிருக்கும் முதல் படம் இது.

இரண்டாம் படம் ‘செயின்டுட்’ (Chained - 2019). மூன்றாம் படம் ‘ரீபார்ன்’ (Reborn - 2019). இந்த மூன்று படங்களிலும் மனித மன உணர்வுகளை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் உளவியல் பார்வையுடன் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர்.

முதல் நாவலை எழுதி இலக்கிய உலகத்துக்குள் வெற்றிகரமாக நுழைந்திருக்கும் எழுத்தாளர் ஆலிஸ் (லலிவ் சிவான்). சிற்பக் கலைஞர், ஆசிரியர், ஆவணப்பட இயக்குநர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்கிறார். முப்பதுகளின் தொடக்கத்தில் வாழ்க்கையின் வெற்றிகளை ருசிக்கத் தொடங்கியிருக்கும் அவர், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகிறார்.

தொலைக்காட்சியில், அவர் குடியிருக்கும் பகுதியில் நடக்கும் தொடர் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் பற்றிய செய்தியைப் பார்த்தவுடன் ‘பேனிக் அட்டாக்’ எனும் உளவியல் சிக்கலால் பாதிக்கப்படுகிறார். நாளுக்குநாள் பாதிப்பு அதிகரிக்கிறது. தனித்து தன் மூன்று நாய்களுடன் வசித்துவரும் அவர், காதலர், தாய், நண்பர்கள் என அனைவருடனான தொடர்பையும் துண்டித்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார். ஆலிஸின் கதை இது.

இன்னொருபுறம், பதினேழு வயது ஸிவ்வின் (பார் காட்ஃப்ரீட்) கதையும் ஆலிஸ் கதையுடன் இணையாகப் பயணிக்கிறது. ராணுவத்தில் சேர்வதற்கு உத்தரவு கிடைக்கும் ஸிவ்வுக்கு இசைப் பள்ளியில் சேர்ந்து சிறந்த கிட்டார் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பது கனவு.

ஆனால், பெற்றோருடைய வற்புறுத்தலால் ராணுவத்தில் சேர்கிறார். எப்படியாவது ராணுவத்தின் இசைக்குழுவின் இசைக்கலைஞராக இடம்பெற்றுவிட வேண்டுமென்று நினைக்கிறார். அவர் பள்ளியில் அனைவரிடமும் இயல்பாகப் பழகினாலும் எதிர்பாலினத்தவருடன் பழகுவதில் சிக்கல் இருக்கிறது. ஆனால், தான் பார்த்த ஆபாசப் படங்களைப் பற்றி நண்பர்களிடம் எந்தவிதத் தயக்கமுமின்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

ஆலிஸ், ஸிவ் ஆகிய இருவரின் கதையும் முதல் பாதியில் தனித்தனியாகப் பயணிக்கிறது. ஒரு கட்டத்தில், ராணுவத்துக்குச் செல்லும் இளைஞர்களை ஆவணப்படம் எடுப்பதற்காக ஸிவ்வைத் தொடர்புகொள்கிறார் ஆலிஸ். அப்போதுதான், ஸிவ் தன் எதிர்வீட்டிலேயே வசிப்பது ஆலிஸுக்குத் தெரியவருகிறது. ஆனால், ஸிவ்வின் கூச்ச சுபாவத்தால் ஆவணப்படத் தயாரிப்பாளர் அவரை நேர்காணல் செய்ய வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார்.

இசைப் பள்ளியில் இடம்கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டது, ஆவணப்பட நேர்காணல் நிராகரிப்பு எனப் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் மேலும் குழப்பத்துக்குள்ளாகிறார் ஸிவ். அவரது பாலியல் குழப்பங்கள், ஆலிஸின் துயரம் எனத் திரைப்படத்தை முழு நீள ‘சைக்கோ டிராமா’வாக இயக்குநர் கையாண்டிருக்கிறார். பார்வையாளர்களை உளரீதியாகத் தொந்தரவுக்குள்ளாக்கும் காட்சிகள் படம் முழுவதும் இடம்பெற்றிருக்கின்றன.

“நான் ஒரு கேளிக்கையாளர் அல்ல. நான் நடனமாடி உங்களை மகிழ்ச்சிப்படுத்த முயல்வதில்லை. வாழ்க்கை எதைப் பற்றியதோ, அதைப் பற்றி மட்டுமே நான் நேரடியாகப் பேசுகிறேன்” என்று தன் படத்தில் இடம்பெறும் தொந்தரவளிக்கும் காட்சிகளைப் பற்றி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் இயக்குநர் யரோன் ஷனி.

அத்துடன், இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. படப்பிடிப்புக்கு எடுத்துக்கொள்ளும் ஓராண்டு காலத்தில், கதாபாத்திரங்களுக்கெனத் தான் தேர்வுசெய்த நபர்களுக்குப் பயிற்சிகொடுத்து இந்தப் படத்தில் நடிக்கவைத்துள்ளார் இயக்குநர். அதனால், ஆலிஸ், ஸிவ் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த லலிவ் சிவான், பார் காட்ஃப்ரீட் இருவரின் நடிப்பும் நம்பகத்தன்மையுடன் அமைந்திருந்தது.

இந்த டிஜிட்டல் உலகத்தின் ஆண்-பெண் பாலியல் அரசியலை இந்தத் திரைப்படம் துல்லியமாகப் பதிவுசெய்திருக்கிறது. படத்தின் கதாநாயகி ஆலிஸ், தன் நாவலில் பாலுறவைத் துணிச்சலுடன் கையாண்டிருப்பார். ஒரு துணிச்சலான பெண் ஆளுமை, பாலியல் வன்முறைக்குப் பின் எதிர்கொள்ளும் மனநிலை, உணர்வுநிலை ஆகியவற்றை ஆலிஸின் கதாபாத்திரம் துல்லியமாகத் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

‘பேனிக் அட்டாக்’கிலிருந்து ஆலிஸ் மீண்டு வந்து தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து சமூகப் பணியாற்றுவது, ஓர் ஆசிரியராகப் பள்ளி மாணவர்களுக்குப் பாலினக் கல்வியைக் கற்றுக்கொடுப்பது என நம்பிக்கையுடன் திரைப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், இந்தப் படம் எழுப்பும் பாலியல் அரசியல் தொடர்பான கேள்விகள், பார்வையாளர்களை நீண்ட காலத்துக்குத் தொந்தரவு செய்துகொண்டிருக்கும்.

தொடர்புக்கு: gowri.n@hindutamil.co.in

SCROLL FOR NEXT