சுமன்
அமெரிக்காவில் தயாராகும் சீன தேசத்தின் செவ்வியல் சாகசக் கதைகளின் வரிசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது, ‘முலான்’ திரைப்படம். வீரஞ்செறிந்த சீனத்துப் பழங்கதைகளில் முலான் என்ற வீராங்கனையின் நூற்றாண்டுகளைக் கடந்து உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தும் ஒன்று.
அந்தச் சீனத்துக் கதையைத் தழுவி 1998-ல் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் அனிமேஷன் திரைப்படம் அதே பெயரில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக வீடியோக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பலவும் வெளியாயின. தற்போது தனது அனிமேஷன் திரைப்படத்தை லைவ்-ஆக்ஷனில் அதே பெயரில் வால்ட் டிஸ்னி மீண்டும் தயாரித்துள்ளது.
பண்டைய சீனத்தில் கதை நடைபெறுகிறது. வடக்கிலிருந்து வரும் எதிரிகள் திடீரென சீனத்து எல்லையில் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். எதிர்பாரா தாக்குதலில் சீன ராணுவம் நிலைகுலைகிறது. எதிரியின் உக்கிரத்தால் சீனத்து நகரங்கள் அடுத்தடுத்து விழ, ராணுவத்தில் சேர்ந்து போரிடுமாறு குடிமக்களிடம் அரச அறிவிப்பு வலியுறுத்துகிறது.
அதன்படி வீட்டுக்கொருவர் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். முன்னாள் போர் வீரர் ஒருவர், தனது வாரிசுகள் இருவருமே பெண்கள் என்பதால் அரச உத்தரவுக்கு அஞ்சுகிறார். வாளேந்தும் வலிமையின்றி வயோதிகத்தில் தள்ளாடும் தந்தை போர்க்களம் செல்வதைப் பார்க்கத் துணிவற்று, அவரது மகள்களில் ஒருவரான முலான் விசித்திர முடிவெடுக்கிறார்.
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ராணுவ சேனையில், ஆண் வேடமிட்டு நுழைகிறார். தந்தையைக் காப்பாற்றும் மகளின் முயற்சி படிப்படியாகத் தேசத்தைக் காப்பாற்றும் முனைப்பாக மாறுகிறது. இரக்கமற்ற எதிரிகள், சூனியக்காரி வழிநடத்தும் சேனை என அனைத்தையும் முலான் எதிர்கொள்கிறாள். அவளது சாகசங்களும், ரகசியங்களும் எதிர்பாராத சவால்களைச் சந்திக்கின்றன. அவற்றிலிருந்து முலான் மீண்டாரா? தந்தையும் தாயகமும் காப்பாற்றப்பட்டதா என்பதே படத்தின் கதை.
வீராங்கனை முலான் கதாபாத்திரத்துக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன யுவதிகளைப் பரிசீலித்து கடைசியில் சீன-அமெரிக்கக் கலவையான லியூ இஃபெய் (Liu Yifei) என்பவர் தேர்வானார். ஜெட் லீ, காங் லீ, டோனி யென், ஜேசன் ஸ்காட் லீ உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். திரைப்படத்தினை நிகி கேரோ இயக்கியுள்ளார். உலகமெங்கும் மார்ச் 27 அன்று முலான் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாக உள்ளது.