இந்து டாக்கீஸ்

கூட்டாஞ்சோறு: ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட்!

செய்திப்பிரிவு

‘சப்பாக்’ படத்தின் மூலம் சமூக அக்கறையுள்ள நடிகராகத் தன்னை நிறுவிக் காட்டினார் தீபிகா படுகோன். தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து, 2015-ல் வெளியான ‘தி இண்டெர்ன்’ என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ இந்தி மறு ஆக்கத்தில் நடிக்கிறார் தீபிகா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரிஷிகபூர்.

200 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படம், அதில் நடித்த ராபர்ட் டி நிரோ, ஆன் ஹாத்வே ஆகிய நடிகர்களுக்கு விருதுகளையும் பெற்றுத் தந்தது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸுடன் தீபிகாவின் ‘கா’தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள தீபிகா, “எனது அடுத்த படம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சி. ‘தி இண்டெர்ன்’ படத்தின் இந்திய மறு ஆக்கம். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சண்டை செய்யும் இயக்குநர்

தமிழ் ரசிகர்களுக்குச் செல்லங்களாக இருக்கும் கன்னட நடிகர்களில் ரமேஷ் அரவிந்தும் ஒருவர். இயக்குநராகவும் முத்திரை பதித்திருப்பாவர். அவர் தற்போது, நடித்துவரும் ‘100’, ‘பைராதேவி’, ’ஷிவாஜி சுரத்கல்’ ஆகிய மூன்று கன்னடப் படங்களிலும் போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

34 வருடங்களாகத் திரைத்துறையில் இருக்கும் ரமேஷ் அரவிந்தின் 101-ம் படம் ‘ஷிவாஜி சுரத்கல்’. இதுவரை அதிகம் சண்டைக் காட்சிகளில் தோன்றாத ரமேஷ் அரவிந்த் ‘100' படத்துக்காக முதல் முறையாக அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்கிறார்.

ஒரே வருடத்தில் மூன்று படங்களில் போலீஸாக நடிப்பது பற்றிக் கேட்டால், "கதாபாத்திரத்தின் வகை மாறும் வரை போலீஸாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை. ‘பைராதேவி’ படத்தில் நான் வழக்கமான போலீஸாக நடிக்கிறேன். ஷிவாஜி சுரத்கலில் நான் ஒரு துப்பறிவாளன், ‘100' படத்தில் நான் சைபர் குற்றங்களை விசாரிப்பதில் நிபுணன்” என்கிறார்.

சல்மானுக்கு வந்த கோபம்!

வழியில் நின்று இடைஞ்சல் செய்தபடி செல்பி வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது இன்னும் மீம்களில் இடம்பெற்று வருகிறது. அந்த அளவுக்கு நட்சத்திரங்களின் கோப நடவடிக்கைக்கு உடனடித் தாக்கம் உண்டு. தற்போது சிவகுமாரை மிஞ்சிவிட்டார் சல்மான் கான். செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை சல்மான் கான் தட்டிப்பறித்த சம்பவம் காணொலியாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

தற்போது அவர் நடித்துவரும் ’ராதே’ படத்தின் படப்பிடிப்புக்காக கோவா விமான நிலையம் வந்த போதுதான் இந்தச் சம்பவம் நடந்தது. செல்பி எடுக்க முயன்றவர் விமான நிலைய ஊழியராம். ஆனால் சல்மான் அந்த ஊழியர் மீது புகார் எதுவும் கொடுக்காமல், போனையும் திரும்பக் கொடுத்துச் சென்றுவிட்டாராம்.

SCROLL FOR NEXT