“ஒரு படம் முடித்த பிறகே நான் அடுத்த படம் பண்ணுவேன். இதனால் அனைத்து இயக்குநர்களுக்குமே என்னைப் பிடிக்கும். செட் வேலைகள் எல்லாம் முடிந்து படப்பிடிப்புத் தொடங்கும்போது, இயக்குநருக்கு செட்டில் மாற்றம் செய்யலாம் எனத் தோன்றலாம். அந்த நேரத்தில் நாம் படப்பிடிப்புத் தளத்தில் இருக்க வேண்டும். ஆகையால், சாலையில் படப்பிடிப்பு நடந்தால்கூட அங்கே இருப்பேன். அதனாலேயே என்னைப் பலருக்குப் பிடிக்கும்” என்று தனது வெற்றியின் ரகசியத்தை உடைத்துப் பேசி உரையாடலைத் தொடங்கினார் கலை இயக்குநர் சந்தானம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களின் கலை இயக்கத்துக்காகத் தமிழக அரசின் விருதை இருமுறை வென்றவர், இப்போது ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து ‘தர்பார்’ படத்திலும் ஏ.ஆர்.முருகதாஸுடன் பணிபுரிந்திருக்கிறார். இனி அவருடன்...
‘தர்பார்' வாய்ப்பு எப்படி அமைந்தது?
‘சர்கார்' படத்தில் பணிபுரியும் போது, என்னுடைய பணிகள் இயக்குநருக்குப் பிடித்துப் போய்விட்டன. அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னார். ஒரு கட்டத்தில் அது ரஜினி படம் என்று தெரியவந்தபோது சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் அவருடைய தீவிர ரசிகன் நான்.
என்னைப் போன்றவர்களுக்கு ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கனவு. ‘தர்பார்’ படத்தை 90 சதவீதம் செட்டில் தான் எடுத்தோம். ஆனால், எதெல்லாம் செட் என்று ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலை, பெரிய கட்டிடங்கள் மட்டும்தான் நிஜம். மீதி அனைத்துமே அரங்குகள்தான். ஏனென்றால் ரஜினியை வைத்துப் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாது. மும்பையாக இருந்தாலுமே ரசிகர்கள் கூடிவிடுவார்கள். கமிஷனர் அலுவலகம், ரஜினி சாருடைய வீடு, ஜிம் என முழுக்கவே அரங்கம் தான். ரயில்வே நிலையமும் செட் தான் என்றபோதுதான் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ரயிலில் வந்து இறங்குவதுவரை தான் நிஜம். அதற்குப் பிறகு எல்லாமே அரங்கில் படமாக்கப்பட்டதுதான். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் எரிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆன காவல் நிலையம், வில்லன் சுனில் ஷெட்டி பதுங்கி இருக்கும் பாழடைந்த தொலைக்காட்சி அலுவலகம், குழந்தைகளைக் காப்பாற்றும் வீடுகள் என அனைத்துமே அரங்குகள்தான். ஆனால், அனைத்துமே நிஜமான இடங்கள் மாதிரியே இருக்கும்.
இந்தத் துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
சிறுவயதிலேயே நன்றாக வரைவேன். நான் வரைந்ததை அப்பா - அம்மா இருவருமே வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமையாகக் காட்டுவார்கள். அப்பா உத்வேகம் அளிப்பார். ஓவியக் கல்லூரியில் படித்து முடிந்தவுடன் விளம்பரங்களில் பணிபுரியத் தொடங்கினேன். பின்னர், எம்.பிரபாகரனிடம் உதவிக் கலை இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தேன். அவரிடம் ‘அன்பே சிவம்', ‘விருமாண்டி' எனப் பெரிய படங்களில் பணிபுரிந்த அனுபவம் கிடைத்தது. குருநாதராக மட்டுமில்லாமல் ஒரு சகோதரராகவும் பார்த்துக் கொண்டார். இன்று வரைக்கும் எனது படங்கள் பார்த்துவிட்டுப் பாராட்டுவார். அவரிடமிருந்து வெளியே வந்து இதுவரை 32 படங்கள், இருநூற்றுக்கும் அதிகமான விளம்பரப் படங்களில் பணிபுரிந்துள்ளேன்.
உங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை செய்தாராமே, உண்மையா?
ஆமாம்.. அவருடைய இசையமைப்பில் ‘காவியத் தலைவன்', ‘சர்கார்' ஆகிய படங்கள் பண்ணினேன். நான் வேலை செய்யும் முறையைப் பார்த்துவிட்டு ரஹ்மான் அழைத்துப் பாராட்டினார். பின்பு அவருடைய இசை ஆல்பங்கள் சிலவற்றுக்கான கலை இயக்கப் பணிகளைக் கொடுத்தது மட்டுமின்றி, சில படங்களுக்கு என் பெயரைப் பரிந்துரை செய்தார். அதுவே பெரிய விஷயம்.
கிராஃபிக்ஸ் வளர்ச்சியால் கலை இயக்குநரின் பணிகள் குறைந்துவிட்டன என்று சொல்லலாமா?
அனைத்தையும் கிராஃபிக்ஸ் வழியாகவே செய்துவிடவே முடியாது. ஒரு படத்தின் வண்ணம் எப்படி இருக்கலாம் என்று பேசி முடிவு செய்வது படத்தின் ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும்தான். கலை இயக்குநர் வரைந்து கொடுத்ததை வைத்துத் தான் படத்தில் ‘லுக்’ முடிவாகும். அனைத்து இயக்குநர்களிடமும் கதைக்கான எழுத்து வடிவம் மட்டுமே இருக்கும். நிறைய ஹாலிவுட் படங்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கிவிட்டதால், பிரம்மாண்டமாகக் காட்டுவதற்கு கிராஃபிக்ஸ் தேவைப்படுகிறது.
ஆகையால் ஒரு செட் போட்டு, அதில் படமாக்கி, படத்தில் அதைப் பெரிதாகக் காட்டுவதற்கும் கிராபிஃக்ஸ் தேவைப்படுகிறது. கிராஃபிக்ஸ் வரவேற்கத்தக்கது தான். கற்பனையை விரிவுபடுத்திக் காட்டுவதற்கு கிராஃபிக்ஸ் அவசியத் தேவையாகிவிட்டது. அங்கும்கூட கலை இயக்குநர் உருவாக்கிய வடிவமைப்பை முன்வைத்தே பணிகள் நடக்கும்.
தயாரிப்பு வடிவமைப்பு - கலை இயக்குநர் என்ன வித்தியாசம்?
தயாரிப்பு வடிவமைப்பைத் தாண்டித்தான் கலை இயக்குநருக்குப் பணிகள் இருக்கும். ஹாலிவுட் படங்களைப் பார்த்தால் தயாரிப்பு வடிவமைப்பாளர் என்பவர் அனைத்துத் துறைகளில் நடக்கும் பணிகளும் சரியாக நடக்கின்றனவா என்று மேற்பார்வை பார்ப்பார்கள்.
அதே பொறுப்பைத் தான் இங்குக் கலை இயக்குநர் என்ற பெயரில் நாங்கள் செய்கிறோம். ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தைப் பார்த்தீர்கள் என்றால் அதில் ஒவ்வொரு காட்சியும் ஓவியம், கலர் டோன், உடைகள் என அனைத்துமே முதலில் வரையப்பட்டவைதான். இங்குக் கலை இயக்குநர் என்றால் தான் அனைவருக்குமே தெரிகிறது. மற்றபடித் தயாரிப்பு வடிவமைப்பு - கலை இயக்குநர் இரண்டுமே ஒன்று தான். இது பலருக்குத் தெரிவதில்லை.
தற்போது பணியாற்றும் படங்கள்?
ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம், தற்போது கார்த்திக் சுப்பராஜ் - தனுஷ் படத்துக்கான பணிகளில் இருக்கிறேன்.