சு.சுபாஷ்
இயற்கையை ஆராதித்து ஆவணப்படுத்தும் பிபிசியின் இன்னொரு முயற்சியாக அண்மையில் வெளியான ஆவணத் தொடர் ‘செவன் வேர்ல்ட்ஸ். ஒன் பிளானட்’. உலகின் ஏழு கண்டங்களுக்கும் தலா ஓர் அத்தியாயம் ஒதுக்கி, அங்குள்ள அரிய உயிரினங்களை அறிந்துகொள்ள நம் கரம் பற்றி அழைத்துச் செல்கிற புதிய ஆவணத்தொடர். இதை இந்தியாவில் பிபிசி எர்த் கட்டண அலைவரிசை ஒளிபரப்புகிறது. மேலும் ‘சோனி லைவ்’ செயலியில் இலவசமாகவும் பார்க்கலாம்.
பிபிசியின் வழக்கமான இயற்கை ஆவணத்தொடர்களுக்கான பெரும் உழைப்பையும் மெனக்கெடலையும் ‘செவன் வேர்ல்ட்ஸ்: ஒன் பிளானட்’ தொடரும் கோரியுள்ளது. 1500-க்கும் மேற்பட்டோர் உழைப்பில், 41 நாடுகளில் அலைந்து திரிந்து, 1794 நாட்கள் படப்பிடிப்பு செய்து, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளைத் தொகுத்து இந்த ஆவணத்தொடரைச் சாத்தியமாக்கி உள்ளனர்.
அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்களையும் இயற்கை வளங்களையும் நமக்கு அறிமுகம் செய்யும் ஆவணத் தொடருக்கு ஒரு பிரபலத்தின் குரல் வலிமை சேர்த்திருக்கிறது. டேவிட் அட்டன்பரோ தனது அனுபவத்திலும், அக்கறையிலும் தோய்த்தெடுத்த வார்த்தைகளால் ஆங்கிலப் பின்னணி வர்ணனையை வழங்கியுள்ளார். மூலத்தைச் சிதைக்காது ‘சோனி லைவ்’ தரும் தமிழ்ப் பின்னணிக் குரலும் தரமாக உள்ளது.
ஜனவரி 20 அன்று தொடங்கி நாளொன்றாக ‘சோனி லைவ்’ வெளியிட்டு வரும் அத்தியாயங்கள், தலா 45 நிமிடங்களுக்கு நீள்கின்றன. இதில் இரண்டாவதாக வெளியான, ‘ஆசியா’ அத்தியாயத்தை இந்தியாவில் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அவ்வழியில் இங்கேயும் ‘செவன் வேர்ல்ட்ஸ். ஒன் பிளானட்’ ஆவணத்தொடரை அலசுவோம். ஆசியாவின் வடமுனையான ஆர்க்டிக் வளையத்துக்கு அப்பால் மைனஸ் 60 டிகிரி உறைநிலையில் விரியும் பனிநிலப் பரப்பில் ஆசிய அத்தியாயம் தொடங்குகிறது. கோடையில் மட்டுமே தலைகாட்டும் ‘பசிபிக் வால்ரஸ்’ பாலூட்டிகள் லட்சக்கணக்கில் திரள்வதைப் பறவைப் பார்வையில் காட்டுகிறார்கள்.
அவை வழக்கமாக ஓய்வெடுக்கும் பனிப்பாறைகள், புவி வெப்பமாதலில் மாயமாகிவிட, வால்ரஸ்கள் கடலோரம் நெருக்கடியில் தவிக்கின்றன. இதனூடே துருவக்கரடிகளிடம் இருந்து தப்புவதற்காக மலைமுகட்டிலிருந்து உருண்டு இறக்கும் வால்ரஸ்களின் கோரத்தையும் காட்டுகிறார்கள். தொடர்ந்து, குமுறும் ரஷ்ய எரிமலைகளின் ஓரம் உயிரைப் பணயமாக்கி உணவு தேடியலையும் பழுப்புக் கரடிகளைப் பின்தொடர்கிறார்கள்.
அப்படியே சீனத்துப் பனிமலைக் காடுகளின் நீல முகமும், தங்க நிறக் கழுத்துகொண்ட பனிக்குரங்குகள், ஈரான் ‘லுட்’ பாலைவனத்துக்கு வலசை வரும் பறவைகளுக்காகப் பல மாதப் பசியுடன் காத்திருக்கும் ‘வைப்பர்’ ரக விஷப் பாம்புகள், அதே போன்ற வறண்ட நிலப்பரப்பான வடஇந்திய சமவெளிப் பிரதேசத்தில் இணையைக் கவர்வதற்காக ‘சாரடா’ பல்லிகள் வண்ணமயமான விசிறித் தொண்டையை விரித்து நடனமாடுவது, இந்தோனேசிய மழைக்காடுகளில் மாம்பழத்தை ருசிப்பதற்காகப் படையெடுக்கும் ஒராங்ஊத்தன் குரங்குகள், சுமத்திரக் காடுகளில் இல்லாத இணையைத் தேடி தனியொரு ஜீவனாய் ஈனஸ்வரத்தில் அலையும் இந்தோனேசியக் காண்டாமிருகம்..
என அருகி வரும் விலங்கினங்களைச் சுற்றிச் சுழல்கிறது ஆவணத்தொடர். இந்த ஒராங்ஊத்தனில், கிளைகளுக்கு இடையே குட்டிக் குரங்கு கடப்பதற்காகத் தாய் தனது உடலைப் பாலமாக்குவது, 6 செமீ உயரமே கொண்ட பல்லிகளின் உக்கிரமான சண்டை என ஆவணத்தொடரின் துல்லியத்துக்காக, பலமான உழைப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆச்சரியமூட்டுபவை. வெறுமனே காட்சிபூர்வமான அனுபவத்துக்கு அப்பால், பார்வையாளர்களைச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
‘7 வயது வரை ஒராங்ஊத்தன் குட்டிகள் தாயின் கரம் பற்றியே சுற்றித் திரியும் என்று விவரிப்பதுடன்; மனிதர்கள் அப்படியல்ல...’ என்ற வர்ணனையுடன் அந்தக் காட்சி கடந்து போகிறது. பச்சிளம் குழந்தைகளின் கதறலைப் பொருட்படுத்தாது பள்ளியில் திணிக்கும் பெற்றோர்களின் நெஞ்சை ஒராங்ஊத்தன் காட்சி நிச்சயம் தைக்கும்.
பல்லிகள் மோதும் சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸ் தோற்றது! அத்தனை நெருக்கமும், நுணுக்கமுமான கானகக் காட்சிகள் பல்வேறு இடங்களில் சிலிர்ப்பூட்டுகின்றன. பறவைக்கோணத்தில் படம்பிடிப்பதன் நேர்த்தியை இந்த ஆவணத்தொடரில் கற்றுக்கொள்ளலாம்.
முக்கியமாகக் குழந்தைகள் பார்த்தாக வேண்டிய ஆவணத்தொடர் இது. உலகின் அரிய விலங்கினங்கள், வாழ்நிலத்துக்கேற்ற அதன் தகவமைப்புகள், அவற்றுக்கு எதிரான மனிதனின் மறைமுகத் தாக்குதல்கள் ஆகியவற்றுடன், பருவநிலை மாற்றம், காடழிப்பு, புவி வெப்பமாதலின் கோரம் உள்ளிட்டவற்றையும் குழந்தைகள் அலுப்பின்றி அறிந்துகொள்வார்கள். செயற்கைக்கோள் படங்கள், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஆகியவற்றை தேவையான இடங்களில் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆதி பூகோளத் தோற்றம், மடிப்பு மலையாக வருடாந்திரம் வளர்ந்து வரும் இமயம் போன்ற பாடக்கூறுகளும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளன.